சஞ்சு சாம்சனின் ‘மனசிலாயோ’ மொமன்ட்… இரண்டு முட்டைகளுக்கு முன்னால் அந்த '1' எப்படி வந்தது? #Samson
சாம்சன்… பைபிளில் விவரிக்கப்படும் மிக மிக வலிமையான கதாபாத்திரம். மிகுந்த உடல் வலிமை கொண்டவராகவும், இஸ்ரவேல் மக்களுக்கு நீதிபதியாகவும் இருந்தவர் சாம்சன். அதாவது இவரது வலிமை தலைமுடியில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. சிங்கத்தைத் தனது கைகளாலேயே அடித்துக் கொன்றார், கழுதையின் தாடை எலும்பைப் பயன்படுத்தி ஆயிரம் எதிரிகளை வீழ்த்தினார் பைபிள் குறிப்பிடும் இந்த சாம்சனின் வீரதீர சாகங்கள் ஏராளம். இவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்ததா, கற்பனைக் கதையா எனத்தெரியாது. ஆனால், நேற்று கேரளாவின் சஞ்சு சாம்சன் செய்த சம்பவம் அத்தனையும் கதையல்ல… நிஜம்!
கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையில் கூட வாய்ப்பு என்பது ஒருமுறை தான் கிடைக்கும். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால்தான் வெற்றிபெற முடியும். 29 வயதான சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டிகளில் பல சாதனைகள் படைத்திருந்தாலும் இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாகத்தான் இருந்தார். நல்ல ஃபார்மில் இருந்தபோது அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. ஃபார்ம் அவுட்டில் இருக்கும்போது ப்ளேயிங் லெவனில் இடம்பிடிப்பார். சொதப்புவார். அணியைவிட்டு வெளியேற்றப்படுவார். இதுதான் சஞ்சு சாம்சனின் கடந்த கால வரலாறு.
இந்திய வங்கதேச தொடருக்கு முன்பாக இந்தியா கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக இலங்கை சென்று ஆடியது. இதில் டி20 அணியில் இடம்பிடித்திருந்தார் சஞ்சு சாம்சன். இதில் முதல் போட்டியில் ப்ளேயிங் லெவனில் இடம்கிடைக்காத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் களமிறக்கப்பட்டார். இரண்டு போட்டிகளிலுமே சஞ்சு சாம்சன் டக் அவுட். அவ்வளவுதான் சாம்சனின் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், பயிற்சியாளர் கெளதம் கம்பீர் உள்ளிட்ட லீடர்ஷிப் டீம் சாம்சன் மேல் நம்பிக்கை இழக்கவில்லை.
மூன்று வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ‘’நீதான் இந்தியாவின் ஓப்பனர். தொடர்ந்து பயிற்சி எடு'’ என அவருக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தி, அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படியிருந்தும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினார் சாம்சன். முதல் போட்டியில் 10, அடுத்த போட்டியில் 29 ரன்கள் மட்டுமே எடுத்த சாம்சனுக்கு அவர் மீதே ஒரு வெறுப்பு தோன்றியிருக்கவேண்டும். கெளதம் கம்பீர் தரப்போகும் கடைசி வாய்ப்பு இதுதான் என்பதும் புரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில்தான் ஐதராபாத்தில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் சாம்சன்.
22 பந்துகளில் அரை சதம் அடித்தவர், அடுத்த 50 ரன்களை அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 18தான். மொத்தமாக 47 பந்துகளில் 111 ரன்கள். இதில் ரிஷாத் ஹொசைனின் ஒரே ஓவரில் ஐந்து தொடர் சிக்ஸர்களை அடித்து வங்கதேச வீரர்களை விம்மவைத்தார் சாம்சன். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் அடித்த ஒவ்வொரு சிக்ஸும், அவருடைய மனநிலையின் வலிமையையும், அழுத்தங்களை மீறி தனது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்திய உழைப்பையும் தெளிவாக காட்டியது.
சதத்தை அடித்தவுடன், சஞ்சு சாம்சன் தனது தோளை மடக்கி கைதசைகளை புடைத்துக் காட்டிய அந்த ஒரு கணம், சாதாரண கொண்டாட்டம் அல்ல. அது அவருக்கு காயம் அளித்த நெருக்கடிகளுக்கும், மௌனமாக கடந்து சென்ற விமர்சனங்களுக்கும், தொடர்ந்த புறக்கணிப்புகளுக்கும் ஆற்றிய எதிர்வினை. அந்த ஒரு சிறிய செயல், அவரது உள்மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த வேதனைகளின் வெளிப்பாடு. வெற்றியின் மகிழ்ச்சியோடு, "நான் இங்கே உங்கள் முன் நிற்கிறேன்… சாதித்துவிட்டேன்!" என்பதன் சான்று!
இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டி20 போட்டிகளில் சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் சஞ்சு சாம்சன். மிகவும் நெருக்கடியான சூழலில் படைக்கப்பட்டிருக்கும் இந்த சாதனை காலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
வாழ்த்துகள் சாம்சன்… வெற்றிகள் தொடரட்டும்!