ஷிகர் தவான் : மொட்டைத் தலையும், முறுக்கு மூசையும், மறக்க முடியாத நினைவுகளும்!
மொட்டைத் தலை, முறுக்கு மீசை, சிரித்த முகம், அதிரடி ஆட்டம், தொடையைத் தட்டும் தீரம் என்று கிரிக்கெட் களத்தில் தீப்பந்தமாக கொழுந்துவிட்டு எரிந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், தனது கிரிக்கெட் பயணத்தின் கடைசி பக்கத்தைப் புரட்டியுள்ளார். சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தவான்.
2004-ம் ஆண்டு ஐசிசி ஜூனியர் உலகக் கோப்பையின் வழியே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியவர் ஷிகர் தவான். இந்த உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதியோடு வெளியேறினாலும் டாப் ஸ்கோரர் ஷிகர் தவான்தான். 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 505 ரன்கள் குவித்து டாப் ஸ்கோரர் ஆனார் ஷிகர் தவான். இவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் அடித்த ரன்கள் 383தான். இத்தொடரில் 19 வயது இளைஞனாக ஷிகர் தவான் 3 சதம், 1 அரைசதம், அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 155 ரன்கள் என வியக்கவைத்தார்.
ஆனால், இந்த டாப் கிளாஸ் பர்ஃபாமென்ஸுக்குப் பிறகும் ஷிகர் தவானால் இந்திய அணிக்குள் இடம்பிடிக்கமுடியவில்லை. காரணம் இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் வீரேந்திர ஷேவாக் - கெளதம் கம்பீர், ஒருநாள் போட்டி என்றால் ஷேவாக் - சச்சின் என ஓப்பனிங் கூட்டணி சீல் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம்கிடைக்க 6 ஆண்டுகளும், டெஸ்ட் அணியில் இடம்கிடைக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகளும் தவான் காத்திருக்க வேண்டியிருந்தது.
10 ஆண்டுகள் காத்திருந்தாலும் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே உலக சாதனைப்படைத்தார் ஷிகர் தவான். 2013-ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தை ஆடிய தவான் 85 பந்துகளில் சதம் அடித்து அறிமுகப் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்கிற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் 174 பந்துகளில் 187 ரன்கள் குவித்து ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து நின்றார்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது 2013 சாம்பியன்ஸ் டிராஃபியில் கன்சிஸ்டன்ட்டாக தவான் ஆடிய ஆட்டம்தான். ஐந்தே போட்டிகளில் 363 ரன்கள் குவித்து அத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என முதலிடம்பிடித்தார். இரண்டு சதம், 1 அரை சதம் என அதிரடியாக ஆடிய தவானின் ஸ்ட்ரைக் ரேட் இத்தொடரில் 90.
பிரமாதமான இடது கை ஸ்ட்ரோக் ப்ளேயர் ஷிகர் தவான். நிமிர்ந்த பேட்டிங் ஸ்டைலும், அவரது ஸ்டைலிஷ் கவர் டிரைவும் எப்போதுமே மனதில் நிற்க கூடியவை.
ஐபிஎல் போட்டிகளைப் பொருத்தவரை அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் ஷிகர் தவான்தான். விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 222 போட்டிகளில் விளையாடி 6769 ரன்கள் குவித்திருக்கிறார் தவான். பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் என இரண்டு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வழிநடத்திய சாதனையும் தவானுக்கே சொந்தம்.
“இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவை எப்போதும் மனதில் வைத்திருந்தேன். அந்த இலக்கை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி. வாழ்க்கையில் முன்னேற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்ட வேண்டியது அவசியம். அதை உணர்ந்து, நான் என் வாழ்வின் அடுத்தப் பயணத்தைத் தொடங்குகிறேன்” என தனது ஓய்வு அறிவிப்பு வீடியோவில் பேசியிருக்கிறார் ஷிகர் தவான்.
மறக்கமுடியாத தருணங்கள், எண்ணிலடங்கா நினைவுகள் என்றென்றும் நெஞ்சில் நிற்கும் ஷிகர். அடுத்தப்பக்கத்தில் உங்களை விரைவில் சந்திக்கிறோம்!