யூரோ 2024 : நொறுக்கித்தள்ளிய ஸ்விட்சர்லாந்து… அடங்கிப்போன ஹங்கேரி!
யூரோ கோப்பையின் முதல் சுற்றுப்போட்டிகளில் நேற்றிரவு சுவிட்சர்லாந்து, ஹங்கேரியும் தங்கள் முதல் போட்டியில் விளையாடின. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் சுவிட்சர்லாந்து 3-1 என வெற்றிபெற்றது. ஆட்டத்தின் சுவாரஸ்யமான ஹைலைட்ஸ் இங்கே!
ஸ்விட்சர்லாந்தின் வியூகமும் செயல்பாடும்!
ஸ்விட்சர்லாந்து வீரர்கள் அவரவர்க்கு என்ன வேலை பிரித்து கொடுக்கப்பட்டதோ அதை சரியாக செய்ய ஆரம்பித்தார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விரைவான தாக்குதல் ஆட்டமுறையைக் கையாண்டது ஸ்விட்சர்லாந்து. இதன் பலனாக ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலேயே குவாட்வோ துவா(Kwadwo Duah) முதல் கோலை அடித்தார். மைக்கேல் ஏபிஷரின் (Michel Aebischer) பாஸை அழகாக ஹங்கேரி கோல் கீப்பரைத்தாண்டி கோல் போஸ்ட்டுக்குள் நுழையவைத்தார் துவா. இது துவாவின் இரண்டாவது சர்வதேச கோல்.
ஹங்கேரியின் தவறுகள்!
பதட்டத்தில் ஹங்கேரி வீரர்கள் தவறிழைக்க ஆரம்பிக்க அதை சரியாகப்பயன்படுத்திக்கொண்டது ஸ்விட்சர்லாந்து. சரியாக ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் மைக்கேல் ஏபிஷர் பாக்ஸுக்கு வெளியே இருந்து ஒரு சிறந்த கர்லிங் ஷாட் மூலம் கோல் அடித்தார். ஸ்விஸ் 2-0 என முன்னிலைப்பெற்றது.
மீண்டுவந்த ஹங்கேரி
இரண்டாவது பாதியில் ஹங்கேரி ஃபார்முக்கு வந்ததுபோல இருந்தது. ஹங்கேரி வீரர்கள் தங்களின் வியூகப்படி ஆட்டத்தை சரியாக ஆட ஆரம்பித்தார்கள். இதற்குப்பரிசாக டொமினிக் ஸ்ஸோபோஸ்லாய் (Dominik Szoboszlai) கொடுத்த கிராஸை தலையால் முட்டி ஸ்விஸின் கோல் போஸ்ட்டுக்குள் நுழைத்தார் வர்கா (Barnabás Varga). ஆட்டம் 1-2 என சூடுபிடிக்க ஆரம்பித்தது.
ஸ்விஸ்ஸின் தடுப்பாட்டம்!
ஹங்கேரி எவ்வளவு முயன்றும் அதன்பிறகு கோல் அடிக்கமுடியாத அளவுக்கு தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது ஸ்விட்சர்லாந்து. ஆட்டம் முடியப்போகும் கடைசி தருணத்தில் காலில் இருந்த பூட்ஸ் கழண்டுவிழுந்தும் ஹங்கேரி கோல்கீப்பரின் தலைக்கு மேல் ஷாட் அடித்து அதை கோலாக்கினார் எம்போலா (Breel Embolo).
ஸ்விட்சர்லாந்துக்கு அடுத்த சவால்!
ஹங்கேரி கேப்டனான 23 வயது டொமினிக் சோபோஸ்லாய்தான் இந்த யூரோவின் இளம் கேப்டன் என்கிற பெருமையோடு போட்டிக்குள் நுழைந்தார். ஆனால், தாக்குதல் மற்றும் டிஃபென்ஸ் என இரண்டிலுமே அதிகப்படியான தவறுகளை செய்ததுதான் தோல்விக்கான காரணம். ஸ்விட்சர்லாந்து 3-1 என்கிற கோல் கணக்கில் ஹங்கேரியை எளிதாக வென்றுவிட்டாலும் அடுத்தப்போட்டியில் ஜெர்மனியோடு முதல் ஆட்டத்தில் மோதிய ஸ்காட்லாந்துடன் விளையாட இருக்கிறது!