கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6 மணிக்கு மேற்கு இந்தியத்தீவுகளின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது AFGvAUS அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டி. இதில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேரதிர்ச்சி சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான். எப்படி நடந்தது இந்த கிரிக்கெட் அதிசயம்?
எப்போதுமே அதிரடி ஆட்டம் ஆடுகிறோம் என பவ்ர்ப்ளேவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறிவிடுவார்கள் ஆப்கானிஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். இந்த முறை அந்த தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என ஓப்பனிங் இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸும், இப்ராஹிம் சத்ரானும் முடிவெடுத்து ஆடியதுதான் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கான முதல் காரணம். பவர்ப்ளேவில் மட்டுமல்ல 100 ரன்கள் வரையும் விக்கெட்டை இழக்காமல் ஆடியது ஆப்கானிஸ்தானின் இந்த ஓப்பனிங் ஜோடி!
ஒருபக்கம் ஸ்பின், இன்னொரு பக்கம் வேகப்பந்து வீச்சு என்கிற வியூகத்துடன் அஷ்டன் அகாரையும், ஜோஷ் ஹேசல்வுட்டையும் பந்துவீசவைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ். 3 ஓவர்கள் 11 ரன் என ஆப்கானிஸ்தான் விக்கெட் இழக்காமல் இருக்க, தன்னுடைய துருப்புச்சீட்டான ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸை நான்காவது ஓவரில் இறக்கினார். அப்போதும் ஆப்கானிஸ்தான் ஓப்பனர்கள் குர்பாஸும், சத்ரானும் அசரவில்லை. பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழக்காமல் 40 ரன்களை அடித்தது ஆப்கானிஸ்தான். 13.2 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப். அகார், ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸாம்பா, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் என எல்லா பெளலர்களையும் மிட்செல் மார்ஷ் இறக்கிப்பார்த்தும் விக்கெட் விழவில்லை.
டெத் ஓவர்களில் ரன்கள் சேர்க்கவேண்டும் என அடித்து ஆட ஆரம்பித்தப்பிறகுதான் அதாவது 16வது ஓவரில்தான் முதல் விக்கெட்டையே இழந்தது ஆப்கானிஸ்தான். குர்பாஸ் 49 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அவுட் ஆக, 48 பந்துகளில் 51 ரன் அடித்த சத்ரானும் 17 வது ஓவரில் விழுந்தார். இதன்பிறகே பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எல்லாம் எடுக்க, ஆப்கானிஸ்தான் ஆல் அவுட் ஆகாமல் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்தது.
ஆப்கானிஸ்தானின் பெளலிங் அட்டாக்கை ஆஸ்திரேலியா சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்குச் சான்று முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே விழுந்த டிராவிட் ஹெட்டின் விக்கெட். நவீன் உல் ஹக் தனது முதல் ஓவரில் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க, மீண்டும் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் கேப்டன் மிட்செல் மார்ஷைத் தூக்கினார் உல் ஹக். பவர்ப்ளேவின் கடைசி ஓவரான ஆறாவது ஓவரில் ஸ்பின்னரான முகமது நபி வார்னரை வீட்டுக்கு அனுப்ப, பவர்ப்ளேவின் முடிவிலேயே 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பவர்ப்ளேவின் முடிவே ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் எனச்சொல்ல அதற்கு ஏற்றபடி ஆப்கானிஸ்தான் பெளலர்கள் கலக்க ஆரம்பித்தார்கள்.
ஆறாவது ஓவருக்குப்பிறகு கேப்டன் ரஷீத் கான் இரண்டு ஓவர்கள் வீசினார். விக்கெட் விழவில்லை. பவர் ப்ளேவுக்குப்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் இழப்பு இல்லாமல் போக, மேக்ஸ்வெல்லும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸும் கிட்டத்தட்ட செட்டில் ஆக மித வேகப்பந்துவீச்சாளாரான குல்பதீன் நைபை பெளலிங் வீசக்கொண்டுவந்தார் ரஷீத் கான். இந்த பெளலிங் மாற்றம் முதல் ஓவரிலேயே பலன் தந்தது. 11-வது ஓவரில் ஸ்டாய்னிஸை 11 ரன்களில் வெளியேற்றினார் குல்பதீன். இவரே மீண்டும் தனது அடுத்த ஓவரில் டிம் டேவிட்டை பெவிலியனுக்கு அனுப்பபினார்.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்துகொண்டிருந்தபோதும் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தது ஆப்கானிஸ்தானுக்கு கலக்கமாகத்தான் இருந்தது. காரணம் கடந்த ஆண்டு மும்பையில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஆட்டம் அப்படி. 128 பந்ததுகளில் 201 ரன்கள் அடித்து ஒற்றையாளாக ஆஸ்திரேலியாவை வெற்றிபெறவைத்தார் மேக்ஸ்வேல். அதனால் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்திவிடவேண்டும் எனத்துடித்தார் ரஷீத் கான். மேக்ஸ்வெல்லை குல்பதீன் நைப் மீண்டும் தனது மூன்றாவது ஓவரில் வெளியேற்றினார். மேக்ஸ்வெல் 41 பந்துகளில் 59 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
மேக்ஸ்வெல் அவுட் ஆகும்போது 32 பந்துகளில் 43 ரன்கள் அடிக்கவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக இருந்தது. மேத்யூ வேடும் ,பேட் கம்மின்ஸும் களத்தில் இருந்தார்கள். கேப்டன் ரஷீத்கான் கடைசி 5 ஓவர்களில் முதல் ஓவரை வீசி, முதல் பந்திலேயே மேத்யூ வேடின் விக்கெட்டை வீழ்த்தினார். குல்பதின் தனது கடைசி ஓவரில் பேட் கம்மின்ஸின் விக்கெட்டையும் எடுத்து நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்தார். 18வது ஓவரில் நவீன் உல் ஹக் தனது மூன்றாவது விக்கெட்டாக அஷ்டன் அகாரைத்தூக்க, 113 ரன்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்குப்போனது ஆஸ்திரேலியா. கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுக்கவேண்டும், ஒரு விக்கெட்தான் இருக்கிறது என்கிற சூழலில் அஸ்மத்துலா ஓவர்சாய் பந்துவீச ஸாம்பா அதை சிக்ஸருக்கு அடிக்கும் முயற்சியில் அவுட் ஆக ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றிபெற்றது.
பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சரியான வியூகங்களுடனும், மாற்றங்களுடனும் விளையாடிய ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றிருக்கிறது.