ஐபிஎல் தொழிற்சாலைப் போல அதிரடி பேட்ஸ்மேன்களை மட்டுமே உருவாக்கிக்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் மீண்டும் திறமையான பெளலர்களை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது!
வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்திடம் தோற்க முதல் காரணமே அதன் மிடில் ஆர்டர் பேட்டிங்தான். ஆர்ச்சர், ரீஸ் டாப்லி, மார்க் உட், சாம் கரண் என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை வெஸ்ட் இண்டீஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே எதிர்கொண்டனர். ஓப்பனிங் பேட்ஸ்மேனான பிராண்டன் கிங் 28 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினாலும், இங்கிலாந்து பெளலர்களால் 12வது ஓவர் வரை விக்கெட் எடுக்கமுடியவில்லை. முதல் 67 பந்துகளில் 94 ரன்கள் குவித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன்பிறகு தடுமாற ஆரம்பித்தது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸின் பலமான அடித்து ஆடவேண்டிய டெத் ஓவர்களிலேயே தடுமாறியது. ஆண்ட்ரி ரஸல் 1 ரன்னில் அவுட் ஆக, கடைசி 53 பந்துகளில் 86 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ஓவர்களில் 180 ரன்கள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ்.
இங்கிலாந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களோடு இந்தப்போட்டியில் விளையாடியது. ஆனால் இதில் ஆர்ச்சரைத்தவிர யாரும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. மறுபக்கம் ஆதில் ரஷீத், மொயின் அலி, லயம் லிவிங்ஸ்டன் என இங்கிலாந்தின் மூன்று ஸ்பின்னர்களுமே விக்கெட்கள் எடுத்தார்கள். குறிப்பாக ஆதில் ரஷித்தின் லெக் ஸ்பின்னை எதிர்கொள்ள மிகவும் திணறினார்கள் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள். 4 ஓவர்கள் பந்துவீசிய ரஷீத் வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவரது எக்கானமி ரேட் வெறும் 5.25 மட்டுமே!
இங்கிலாந்தின் பேட்டிங்கை ஒற்றையாளாக தூக்கிச்சுமந்தார் ஃபில் சால்ட். பட்லரோடு ஓப்பனிங் இறங்கியவர் கடைசிவரை பட்டையைக் கிளப்பினார். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இவரை அவுட் ஆக்கும் வாய்ப்பு நிக்கோலஸ் பூரானுக்கு கிடைத்தது. ஆனால் வாய்ப்பைத்தவறவிட்டார் பூரான். சால்ட் 47 பந்துகளில் 87 ரன்கள் அடித்து, இறுதிவரைக் களத்தில் நின்று இங்கிலாந்தை வெற்றிபெறவைத்துவிட்டார்.
வெஸ்ட் இண்டீஸின் டெத் பெளலிங் மிகவும் சுமாராக இருந்ததும் அவர்களின் தோல்விக்கு காரணம். குறிப்பாக 16-வது ஓவர். 30 பந்துகளில் 40 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற சூழலில் பந்துவீச வந்தார் ரொமாரியோ ஷெப்பர்ட். வெறும் 6 பந்துகளிலேயே 30 ரன்களைக் கொடுத்துவிட்டார். எழுதிவைத்தது போல முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் சிக்ஸர், மூன்றாவது பந்தில் பவுண்டரி, நான்காவது பந்தில் சிக்ஸர், ஐந்தாவது பந்தில் பவுண்டரி, ஆறாவது பந்தில் சிக்ஸர் என ஆறு பந்துகளிலும் பவுண்டரி சிக்ஸர் என மாறிமாறியடித்து தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை உச்சத்துக்கொண்டு சென்றார் சால்ட்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடிக்கொண்டிருக்கும்போதும் வெஸ்ட் இண்டீஸ் பெளலர்கள் எந்தக்கட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கவேயில்லை. 18வது ஓவரிலேயே 180 ரன்களையும் சேஸ் முடித்துவிட்டது இங்கிலாந்து. பார்ட்னர்ஷிப்களை உடைக்கும் அளவுக்கு பெளலர்கள் இல்லாதது அடுத்தடுத்தப் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்!