சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரிஷப் பன்ட் என முக்கியமான மூன்று வீரர்கள் பெரிதாக பர்ஃபார்ம் செய்யாதபோதும் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?
என்ன நடந்தது?
ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரிஷப் பன்ட் என இந்தியாவின் டாப் ஆர்டர் 62 ரன்களுக்குள் சுருண்டபோதும், கவலைப்படாமல் தன் பாணியில் ஸ்வீப் ஷாட்கள் அடித்து, 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்து தடுமாறிக்கொண்டிருந்த இந்தியாவின் கப்பலை நிலைநிறுத்தினார் சூர்யகுமார் யாதவ்.
என்ன செய்தார்?
மெதுவான பிட்சை எதிர்கொள்வது : சூர்யகுமார் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் செய்வதில் கவனம் செலுத்தி, வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சரியாகப் பயன்படுத்தி, மெதுவான ஆடுகளத்தை திறமையாகக் கையாண்டார்.
ஸ்வீப் பவுண்டரிகள் : சூர்யகுமாரின் ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் ஃபீல்டிங் பொசிஷனுக்கு ஏற்ப பவுண்டரிகளை எங்கே அடிக்கவேண்டும் என முன்முடிவெடுத்து அவர் ஆடியவிதம்தான் இந்தியாவை 20 ஓவர்களில் 181 ரன்களைத் தொடவைத்தது.
என்ன நடந்தது?
ஜஸ்பிரித் பும்ரா ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானின் நம்பிக்கையைக் குறைத்து அவர்களை ரிவர்ஸ் கியரில் ஆடவைத்தார்.
என்ன செய்தார்?
வெற்றிக்கான செட்டிங்: இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் ஹீரோவாக இருக்கும் குர்பாஸை தனது முதல் ஓவரிலேயே தூக்கினார் பும்ரா. அடுத்தது குர்பாஸோடு ஓப்பனிங் இறங்கிய ஹஸ்ரத்துல்லாஹ் ஸஸாயையும் வீழ்த்தி, அடுத்து வரும் பெளலர்கள் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் ஆர்டரை வீழ்த்துவதற்கான அமைப்பை உருவாக்கினார் பும்ரா.
பவர்ப்ளே பர்ஃபாமென்ஸ் : பவர்பிளேயில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பும்ரா ஆப்கானிஸ்தானுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். இதனால் மீதமுள்ள 14 ஓவர்களுக்கும் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடவேண்டும் என்கிற மோடுக்கு ஆப்கானிஸ்தான் போனதே தவிர 182 ரன்களை நோக்கி அவர்களால் பயணிக்க முடியவில்லை.
என்ன நடந்தது?
அக்சர் பட்டேல் பவர்பிளேயில் ஒரு விக்கெட்-மெய்டனை வீசியது இந்தியாவின் பெளலிங் அட்டாக் எவ்வளவு மேம்பட்டதாக இருக்கிறது என்பதற்கான உதாரணம். ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசிய அக்சர் பட்டேல், இப்ராஹிம் சத்ரான் எனும் முக்கியமான பேட்ஸ்மேனையும் வீழ்த்தி பவர்ப்ளேவிலேயே மெய்டன் ஓவரும் வீசி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
என்ன செய்தார்?
பிரஷர் பில்ட்அப் : அக்சரின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் வீரர்களால் ரன்ரேட்டை உயர்த்தமுடியாமல் செய்ததோடு, பார்ட்னர்ஷிப்களை அமைக்கமுடியாமலும் தடுமாறவைத்தது.
இந்தியாவின் கன்ட்ரோல்: 4 ஓவர்களுக்குள்ளாகவே ஆப்கானிஸ்தானின் ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வர காரணமாக இருந்தது அக்ஸர் பட்டேலின் பந்துவீச்சு.
என்ன நடந்தது?
லீக் போட்டிகளில் விளையாடாத குல்தீப் யாதவை, பார்படாஸில் நேற்று களமிறக்கினார் ரோஹித் ஷர்மா. 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்து ஆப்கானிஸ்தானின் மிடில் ஆர்டருக்கு மூச்சுத்திணறலை வரவைத்தார் குல்தீப். 11-வது ஓவரில் குல்பதீன் நயீப், 17-வது ஓவரில் முகமது நபி என ஆப்கானிஸ்தானின் முன்னாள் கேப்டன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் குல்தீப்.
என்ன செய்தார்?
பிட்சைப் பயன்படுத்துதல்: ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச்சின் தன்மையை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திய குல்தீப் தனது ஸ்பின் வேரியஷன்களால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை ஏமாற்றினார்.
முக்கியமான திருப்புமுனை: மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எந்த நம்பிக்கையையும் கொடுக்கவிடாமல் செய்தது.
என்ன நடந்தது?
அர்ஷதீப்தான் இந்தியாவின் பெளலிங் அட்டாக்கைத்தொடங்கினார். முதல் இரண்டு ஓவர்களில் இவர் 22 ரன்களை விட்டுக்கொடுத்தபோதும், டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் 2.0-வாக களமிறங்கி கிட்டத்தட்ட ஹாட்ரிக் சாதனைப்படைத்தார்.
என்ன செய்தார்?
சிறப்பான டெத் ஓவர் : டெத் ஓவர்களில் அர்ஷ்தீப்பின் மறுமலர்ச்சி, பந்துவீச்சில் இந்தியாவின் சூப்பர் பவரை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 18வது ஓவரில் கேப்டன் ரஷீத் கானையும், நவீன் உல் ஹக்கையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார் அர்ஷதீப்
உளவியல் தாக்கம் : 18வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது அர்ஷதீப்புக்கு உளவியல் உந்துசக்தியை அளித்தது. கடைசி ஓவரின் கடைசிப்பந்திலும் விக்கெட் எடுத்து 3 விக்கெட்டுகளோடு நிறைவு செய்தார் அர்ஷதீப்.
சூர்யகுமார் யாதவின் மிடில் ஆர்டர் வீரதீர சாகங்கள், வியூகங்களுடன் இணைந்த ஒழுக்கமான பந்துவீச்சு இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டத்தை மாற்றியது. வெற்றியோடு சூப்பர் 8 சுற்றை தொடங்கியிருக்கும் இந்தியா அடுத்தப்போட்டியில் வங்கதேசத்துடன் நாளை (22-06-2024) இரவு மோதுகிறது.