வினேஷ் போகத் : நெருப்புடா… நெருங்குடா… சிறு தீப்பொறி எரிமலையாக மாறியத் தருணம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் உலகின் கண்கள் அனைத்தும் மல்யுத்த மேடையில் வினேஷ் போகத்தின் மீது குவிந்திருக்கிறது. இந்தியப் போராளியின் வலிமையும், துணிவும், நம்பிக்கையும் உலகம் முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியிருக்கும் வினேஷ் போகத் தளராத உழைப்பின் காரணமாக இமயத்தில் மின்னும் நட்சத்திரமாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பாஜக முன்னாள் எம்பியும், முன்னாள் மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ் புஷனின் பாலியல் அத்துமீறல்களை எதிர்த்து தெருவில் இறங்கிப்போராடினார். போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். 53 கிலோ எடைப்பிரிவில் இருந்து எடை குறைந்து 50 கிலோவுக்கு வந்துவிட்டார். ஆனால், வினேஷ் போகத் நம்பிக்கையை கைவிட்டுவிடவில்லை.
வினேஷ் 2024 ஒலிம்பிக்ஸுக்குத் தகுதிபெறவே கடுமையானப் போராட்டம் நிகழ்த்தவேண்டியிருந்தது. நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொண்டு இதோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டி வரை வந்துவிட்டார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி… 2024 ஒலிம்பிக்கிலும் தோற்றிருந்தால் ‘’இவர்கள் எல்லாம் பொய் போராட்டம் நடத்தத்தான் லாயக்கு'’ கேவலப்படுத்தப்பட்டிருப்பார். ஆனால், இந்தமுறை இன்னும் கவனத்தோடு, இன்னும் உறுதியோடு, இன்னும் பலத்தோடு மோதி சாயக்கமுடியாதவர்களை எல்லாம் சாய்த்திருக்கிறார் வினேஷ்.
ஜப்பானின் யூய் சுசாகியை முதல் சுற்றில் வீழ்த்தியவர், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை அரையிறுதியில் வென்று, தங்கக் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வெற்றி, மல்யுத்த உலகையே அதிர்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.
சுசாகியின் தொடர்ச்சியான வெற்றியை முறியடித்ததோடு மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து இப்படி ஒரு பெண் வீராங்கனையா என உலகமே வியந்து பார்க்கிறது. வினேஷ் ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியிலும் தன்னுடைய கேம்பிளானை சரியாக செயல்படுத்தி, உத்திகளை முறைப்படுத்தி, அதை நேரம் பார்த்து நடைமுறைப்படுத்தி அசத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நெகிழவைக்கும் கணம், இந்திய மல்யுத்த வரலாற்றில் மறக்கமுடியாததாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றி, ஒட்டுமொத்த ஒலிம்பிக் உலகையும் எழுந்து நின்று வினேஷ் போகத்தை அங்கீகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. இவரது சாதனை, அனைத்து இந்தியர்களுக்கும் தாங்கள் வென்றதைப் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது.
வினேஷ் போகத், ஒரு தீப்பொறியாக இருந்து எரிமலையாக மாறி பாரிஸ் ஒலிம்பிக்ஸின் வரலாற்றில் நீங்காத இடத்தை நோக்கி வீரநடைபோட்டுக்கொண்டிருக்கிறார்.