IPL Retention 2025 : மீண்டும் ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி… டுப்ளெஸ்ஸிக்கு டாடாவா?!
ஐபிஎல் போட்டிகளில் 2013 முதல் 2021 சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. ரன் மெஷினான கோலியால் 9 சீசன்கள் தலைமை தாங்கியபோதும் கோப்பையை வென்றுதரமுடியவில்லை. ‘ஈ சாலா கப் நம்தே’ என ஒவ்வொருமுறையும் களமிறங்கும் ஆர்சிபி ஒவ்வொருமுறையும் தோற்றுப்போனது. 2016- சீசனில் இறுதிப்போட்டி வரை வந்ததே இந்த அணியின் இதுவரையிலான சாதனை.
இதற்கிடையே 2021-ம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. “நான் என்னுடைய ஐபிஎல் வாழ்க்கையில் கடைசி ஆட்டம் வரை ஆர்சிபி-யில் விளையாடுவேன்” என்று கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அணியை விட்டு விலகமாட்டேன் என அப்போதே சொல்லியிருந்தார் விராட் கோலி.
இந்நிலையில் 40 வயதான தற்போதைய கேப்டனும், தென்னாப்பிரிக்க வீரருமான ஃபாப் டுப்ளெஸ்ஸியை ரீடெய்ன் செய்யும் முடிவில் ஆர்சிபி நிர்வாகம் இல்லை. இதனால் கேப்டன்ஷிப் குறித்து அந்த அணியின் நிர்வாகம் விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்த, கோலி மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்க சம்மதித்திருக்கிறார்.
கோலி கேப்டனாக இருக்கும்வரை டைட்டில் வெல்லவில்லை என்றாலும் ஸ்பான்சர்கள் குறையவில்லை. ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக கோலி கேப்டனாக இல்லாததால் அணியின் பிராண்ட் வேல்யூவும் இறங்கிவிட்டதுதான் ஆர்சிபி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள். டுப்ளெஸ்ஸி இந்தாண்டு மீண்டும் ஏலத்துக்கு வர, கோலி கேப்டனாகிறார்.
2025 சீசனில் கோலியை மீண்டும் கேப்டனாக தரிசிக்கலாம்!