‘’என் தந்தைக்கு மனநலப் பிரச்சனை இருக்கிறது!’’ - வைரலாகும் யுவராஜ் சிங்கின் பழைய பேட்டி!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவருமான யுவராஜ் சிங் அவரது தந்தையால் தர்மசங்கடத்தில் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிருபருக்கு பேட்டியளித்த யோக்ராஜ் சிங் ‘’இன்னும் நான்கைந்து வருடங்கள் விளையாடியிருக்கக்கூடிய என் மகனின் கிரிக்கெட் கரியரை தோனி அழித்துவிட்டார். யுவராஜ் போன்ற இன்னொரு வீரர் உருவாகமுடியாது. கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்திர சேவாக் கூட இன்னொரு யுவராஜ் சிங் வரமுடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்'’ என்று பேட்டியளித்ததோடு கபில் தேவ்-ஐயும் தவறாகப் பேசினார்.
யோக்ராஜ் சிங் தோனியை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. தொடர்ந்து பலமுறை தோனியை விமர்சித்திருக்கிறார் யோக்ராஜ் சிங். ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு முன்னாள் கேப்டன் கபில் தேவை விமர்சித்திருக்கிறார். இந்திய அணியில் யோக்ராஜ் விளையாடியபோது கேப்டனாக இருந்தவர் கபில் தேவ.
‘’நம் காலத்தின் தலைசிறந்த கேப்டன் கபில்தேவ்... அவரிடம் ஒருநாள் ‘உலகம் உன்னை சபிக்கும் நாள் வரும்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். இன்று, யுவராஜ் சிங்கிடம் 13 வெற்றிக் கோப்பைகள் உள்ளன. ஆனால், கபில் தேவிடம் ஒரே ஒரு உலகக் கோப்பை மட்டுமே உள்ளது’’ என்று விமர்சித்திருக்கிறார் யோக்ராஜ் சிங்.
இந்தப்பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த, யுவராஜ் சிங் முன்பொரு பேட்டியில் தந்தைக் குறித்துப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் ரன்வீர் அல்லாப்டியாவுடன் நிகழ்த்திய உரையாடலில் யுவராஜ் சிங் “என் தந்தைக்கு மனநலப் பிரச்சனை இருப்பதாக நான் உணர்கிறேன். ஆனால், அவர் அதை ஏற்கமாட்டார். அவர் உடனடியாக சரிசெய்ய வேண்டிய பிரச்சனை இது. ஆனால் அவர் நான் சொல்வதை ஏற்கமாட்டார்'’ என பேட்டியளித்திருக்கிறார்.
யோக்ராஜ் சிங் - ஷப்னம் சிங் தம்பதியின் மூத்த மகன் யுவராஜ் சிங். முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ் சிங் இந்திய அணியில் இருந்தும், பஞ்சாப் அணியில் இருந்தும் திடீரென தூக்கப்பட, அந்த விரக்தியில் நடிகராக மாறியவர். நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாபி படங்களில் யோக்ராஜ் சிங் நடித்திருக்கிறார். யுவராஜ் சிங்கின் பள்ளி காலத்தில் இருந்தே யோக்ராஜ் சிங்கும், ஷப்னம் சிங்கும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். யுவராஜ் சிங் தனது தாயார் ஷப்னம் சிங்குடன் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.