பிக் பாஸ் வீட்டுக்குள் வரிசை கட்டும் குக்கு வித் கோமாளிகள்... புது கோமாளி யார் தெரியுமா?!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பிக் பாஸ் வீட்டை வடிவமைக்கும் இறுதிகட்ட வேலைகள் ஈவிபி-யில் நடந்துவருகிறது. இதற்கிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக நுழையும் இறுதிப்பட்டியல் இறுதி வடிவம் பெற்றுவருகிறது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவரும், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த 'லப்பர் பந்து' படத்தில் நடித்திருந்தவருமான திருச்சி சரவணகுமார் பிக் பாஸ் சீசன் 8-க்குள் நுழைகிறார்.
மிமிக்ரி கலைஞராக மீடியாவுக்குள் நுழைந்த சரவணகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார். இவர் காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பொறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் தனக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையில் சினிமா வாய்ப்புகளை எல்லாம் கொஞ்சம் ஓரம்தள்ளிவிட்டு மீண்டும் டிவிக்குள் வருகிறார் டிஎஸ்கே என்கிற திருச்சி சரவணகுமார்.