பிக் பாஸ் தமிழ் 8 : 'குக்கு வித் கோமாளி' டு பிக் பாஸ்… சீனியர் கோட்டாவில் ‘விடிவி’ கணேஷ் கன்ஃபர்ம்!
அக்டோபர் 6-ம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்குகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கயிருக்கும் இந்த சீசனின் 22 போட்டியாளர்களையும் அலசி ஆராய்ந்து தேர்வு செய்துவருகிறது விஜய் டிவி டீம். கடந்த சீசன்களில் பங்கேற்ற 3 பேரையும் பிக் பாஸுக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
இதற்கிடையே இந்த சீசன் குக்கு வித் கோமாளியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமான ‘விடிவி' கணேஷ் பிக் பாஸ் தமிழ் 8 சீசனிலும் பங்கேற்கிறார். சீனியர் கோட்டாவில் டிக் அடிக்கப்பட்டிருக்கும் விடிவி கணேஷுக்கு ஒரு நாளுக்கு 50,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.
ப்ரொடக்ஷன் மேனேஜராகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய விடிவி கணேஷ் அஜித் நடித்த ‘ரெட்’ படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் கூட்டாளியாகவும் பயணித்த கணேஷை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கெளதம் மேனன் நடிக்கவைக்க, அந்தப்படம்தான் கணேஷின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை ப்ரொடக்ஷன் கணேஷாக இருந்தவர் ‘விடிவி' கணேஷாக மாறினார்.
இந்த சீசன் ‘குக்கு வித் கோமாளி’க்கு தனது டிரேட்மார்க் நகைச்சுவை பேச்சுகள் மூலம் டிஆர்பி தந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் கணேஷின் காமெடி ப்ளஸ் அனுபவ அலசல்கள் பிக் பாஸுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கிறது விஜய் டிவி.