Bigg Boss Tamil 8 : அர்னாவ் செய்த அநாகரீக செயல், அன்ஷிதா கொடுத்த ஆதரவு | Day 14
சம்மந்தி பிரச்னையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் பாயாசத்துக்கு வீட்டுக்குள் வெடி வெடித்தது. செளந்தர்யா கூடுதலாக இரண்டு கிளாஸ் பாயாசத்தை எடுத்து குடித்துவிட்டதால், டீமுக்கே பாயாச பற்றாக்குறை வந்தது. அதனால், டென்ஷன் ஆனது பெண்கள் டீம்.
பாய்ஸ் ஓட பாயாசம்னு நினைச்சி குடிச்சிட்டேன்னு சவுண்டு சொன்னாலும், அது தர்ஷாவுக்கும் ஆனந்திக்குமான பங்கு. ''இது உன் வீடு இல்லை, நம்ம வீடு. இப்படியெல்லாம் செய்யாத'’ என்று போல்டாக பேசினார் சுனிதா.
விஜய்சேதுபதி செய்ய வேண்டிய வேலையை சுனிதாவே செய்துவிட்டதால், பாயாச பற்றாக்குறை பஞ்சாயத்து ஆகவில்லை. ஏனென்றால், அதை விட பெரிய சம்பவங்கள் விஜய்சேதுபதிக்காக காத்திருந்தது.
வீட்டினர் மத்தியில் கேள்விகள் கேட்க வைத்த விசே
ஒரு வீடுங்கிறது சமூகத்தின் மாதிரி. சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க வேண்டுமென்றால், முதலில் வீட்டில் நடக்கும் பிரச்னைகளை டீல் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, வீட்டில் யார் மேலாவது கோபமென்றால் உடனடியாக காட்டிவிடுவோம். மனதும் ரிலாக்ஸ் ஆகிவிடும். ஆனால், மனதுக்குள் அடைத்துவைக்கும் சுமை, நம்மை அடுத்தக் கட்டத்துக்கு நகர விடாது.
நம்முடைய வீடாக இருந்தாலும் சரி, பிக்பாஸ் வீடாக இருந்தாலும் சரி ரூல்ஸ் ஒன்று தான். அதனால், பிக்பாஸ் விட்டுக்குள் இருக்கும் நபர்கள் மனதில் அழுத்தி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமையை கேள்வியாக எழுப்புங்கள். பதிலைப் பெறுங்கள். மனதை நிதானப்படுத்துங்கள் என்ற விஜய்சேதுபதியின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
முதல் கேள்வியே ரஞ்சித் மீது வைக்கப்பட்டது. வயதில் பெரியவராக இருந்துகொண்டு நீங்களே நாமினேஷனில் கூட்டு முயற்சிக்கு துணை போகலாமா என்று ஆனந்தி கேட்டார்.
ஏற்கெனவே என் மனதில் இரண்டு பெயர்கள் இருந்தது. டீமுடன் பேசும் போதும் அதே பெயர்கள் வந்ததுனால நான் கேட்டுக்கிட்டேன். யார் சொல்லியும் நாமினேஷனை மேற்கொள்ளவில்லை என்பதை தெளிவு படுத்தினார் ரஞ்சித். இது ரஞ்சித்தின் பதிலாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாய்ஸ் டீமின் பதிலாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது.
நாமினேஷன் டிஸ்கஷனை முத்துக்குமரன் துவங்கியிருந்தாலும், மொத்த டீமும் சுயமாக சிந்தித்தே விளையாடியதாக எல்லா இடங்களிலும் சொன்னார்கள். ஆனால், முத்துக்குமரன் பேசியது கடந்த வார நாமினேஷனில் பிரதிபலித்தது என்பதே நிதர்சனம்.
''தர்ஷா நிஜமாவே உங்களுக்கு சமைக்க தெரியுமா தெரியாதா?'’ என்று விஷால் கேட்ட கேள்விக்கு மக்கள் மத்தியிலிருந்து சத்தம் அதிகரித்தது. சீரியஸாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் விஷாலின் கேள்வி சிரிப்பூட்டியது. ''வெங்காயத்தின் பச்சை வாடை போகத்தான் இஞ்சி பூண்டு போடுறோம்னு சொன்ன விஷாலா இந்த கேள்விய கேக்குறது’'ன்னு விஷாலை காலை வாரிவிட்டார் விஜய்சேதுபதி.
சமையல் தெரியாது என்று நேரடியாக ஒருவரைச் சொல்லிவிட முடியாது. சமையல் செய்யத் தெரியும் எனும் அளவீட்டில் மாறுபடலாம். இது விசே-வுக்கும் தெரிந்திருந்ததால் இந்த டாபிக்கை அப்படியே விட்டுவிட்டார்.
மனசாட்சிபடி கேம் விளையாடுறது எப்படிங்கய்யா?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சண்டை வந்தால் அநேகமாக சொல்லப்படும் புகார் என்றால், ‘மனசாட்சி படி கேம் விளையாடுங்க. மனித நேயம் உங்களுக்கு இல்லையா?’ என்பது தான். இதையே கேள்வியாக கொண்டுவந்தார் முத்துக்குமரன். அதற்கான விஜய்சேதுபதியின் விளக்கம் சிறப்பு.
கேம் விளையாட வந்திருக்கும் இடத்தில் மனசாட்சி, மனிதநேயம் என்று பேசுவதே தப்பு. பிடிக்காத விஷயத்தை, தகாத விஷயத்தை தண்டனையாகவும், டாஸ்க்காகவும் கூறினால் நீங்கள் குரல் எழுப்பலாம். அனால், ஒரு கேமை கேமாக பார்க்க வேண்டும் என்று பெண்கள் டீமுக்கு ஒரு குட்டு வைத்தார் விசே.
உதாரணத்திற்கு ஜாக்குலினை வைத்தே வகுப்பெடுத்தார் விசே. ஜாக்குலினுக்கு சும்மா சும்மா டாஸ் கொடுக்கவில்லை. ஜாக்குலின் என்ன செய்தார், அதற்கு என்ன நடந்தது என்பதை வைத்தே டாஸ்க் இருந்தது. எல்லாவற்றையும் பெர்சனலாக எடுத்துக் கொள்வது தான் இங்கே பிரச்னையாகிறது. ''ஜாக்குலின் உங்க தப்பை புரிஞ்சுக்கோங்க...'' என்று ஸ்ட்ராங் ஸ்டேட்மென்ட் கொடுத்தார் விசே.
எப்படி விளையாடணும் என்பதை ஒவ்வொரு வாரமும் வகுப்பெடுப்பதிலேயே பாதி நேரத்தை கழித்துவிடுகிறார் விசே. இந்த வாரமும் ''கம்ஃபெர்ட்டாக விளையாடாதீங்க... சேஃப் கேம் விளையாடாதீங்க...'’ என்று கூறினார்.
கேப்டனுக்கு நடந்த சம்பவம் !
இந்த வார கேப்டன்சி எப்படி இருந்தது என்று கருத்து கேட்கப்பட்டது. எல்லோருமே சத்யாவுக்கு ஆதரவாகவே இருந்தனர். இருந்தாலும், ஆனந்தியும், முத்துக்குமரனும் விமர்சனங்களை வைத்தனர். விசேவின் கருத்தும் அதுவாகவே இருந்தது. ‘கேம்டன் என்றால் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் சுமூகமாக போனால் அது கேம்டன் இல்லை. சும்மா சும்மா பிக்பாஸ் கிட்ட போகக்கூடாது’ என்று சத்யாவை லெஃப்ட் ரைட் வாங்கினர்.
டிராமா குயின் பட்டத்தை வேறு யாருக்கு கொடுப்பீங்க என்று தர்ஷாவிடம் கேட்டார் விசே. அதற்கு, ''எல்லோரும் ஆசைப்படுறாங்க. நானே வச்சிக்கிறேன்’' என்று சொன்னார். ''எப்பவுமே சொல் பேச்சு கேட்க மாடீங்களா?'' என்று விசே சொன்னதும் ஜாக்குலினுக்கு கொடுக்குறேன் என்றார். இன்றை நாள் முழுவதும் விசேவிடம் பல்ப் வாங்கிக் கொண்டிருந்தார் தர்ஷா. சுய முடிவு, மனதில் தோன்றுவதை பேசுவது இரண்டையும் தர்ஷா செய்ய வேண்டும். இல்லையென்றால், அடுத்த வாரமும் விசேவிடம் பல்ப் வாங்குவார்.
அதுபோல, சொம்பு தூக்கி பட்டத்தை பாய்ஸ் டீம்ல யாருக்கு கொடுப்பீங்க என்று அருணைக் கேட்டார். என் டீம்ல யாரும் அப்படி இல்லை சார் என்று சொல்ல.. ‘அப்போ நீங்களே வச்சிக்கோங்க’ என்று தக் லைஃப் கொடுத்தார் விசே.
குட் பை அர்னவ்
இந்த வார நாமினேஷனில் இருந்த ஜெஃப்ரி, ரஞ்சித், தீபக், விஷால் , சாச்சனா , செள்ந்தர்யா ஆகியோரை ஒவ்வொருவராக சேஃப் செய்தார் விசே. இறுதியாக, அர்னாவ், முத்துக்குமரன், தர்ஷா நாமினேஷனில் இருந்தார்கள். அதில் தர்ஷாவை சேஃப் செய்தார். அர்னாவா, முத்துக்குமரனா என்ற கட்டத்தில் அர்னாவ் வெளியேற்றப்பட்டார். கிளம்பும் போதே செம கடுப்புடன் கிளம்பினார் அர்னாவ். பிக்பாஸ் மாடல் டிராஃபியை ஓங்கி உடைத்து ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதை அர்னாவ் தவிர்த்திருக்கலாம்!
மேடைக்கு சென்ற அர்னாவ், ஒவ்வொருவரின் மீதிருந்த வன்மத்தையும் வெளிப்படுத்தினார். ''யாரு சொம்பு தூக்கினு மக்களுக்குத் தெரியும்'' என அருணையும், ''நான் Worst-ஆ இல்லை நீ Best-ஆ அப்டிங்கிறது ஊருக்கே தெரியும்'' என சத்யாவையும், ''ஜாக்குலினை நாமினேஷன்லயே வச்சிக்கணும்''னு சொன்ன என முத்துக்குமரனையும் அட்டாக் செய்தார் அர்னாவ்.
டீமை விட்டுக் கொடுப்பது, டீமின் சீக்ரெட்டை பொதுவெளியில் உடைப்பது என டீமுக்கென இருந்த மரியாதையை அவமதித்ததாகவே தெரிந்தது. அதோடு, ''டேய் ஜால்ராஸ்'' என அர்னாவ்அநாகரிகமாக பேச ஆரம்பித்ததும் விசே தடுத்து நிறுத்தினார். ''நீங்க பேசுறது தப்பு. உங்களை எலிமினேட் பண்ணது மக்கள். ஆண்கள் டீம் இல்லை. இவ்வளவு நேரம் நீங்க பேசுனதை நீங்களே கெடுத்துக்குறீங்க. வெளியே போய் சிறப்பா இருங்க'’ என்று அர்னாவை சம்பவம் செய்து அனுப்பிவிட்டார் விசே.
மற்றவர்களை மரியாதையாக நடத்துவதில் தான் நமக்கான மரியாதை இருக்கிறது. அதை அர்னாவ் காப்பாற்றவில்லை. அர்னாவ் மீது இருந்த மரியாதை வீட்டுக்குள்ளும் சரி, மக்கள் மத்தியிலும் சரி உடைந்து விட்டது. பாசிட்டிவாக பேசி விட்டுச் சென்றிருந்தால் அர்னாவ் மீது ஒரு நற்பெயர் இருந்திருக்கும். அதை அவரே கெடுத்துவிட்டார்.
அறிமுக விழாவில் நீங்களே உங்களுக்கு வரக்கூடியதை கெடுத்துப்பீங்க போலயே என்று விஜய்சேதுபதி சொன்னது நிரூபணமாகிவிட்டது.
அர்னாவ் சென்றதை எண்ணி எண்ணி அன்ஷிதா அழுது கொண்டிருந்தார். அவன் ரொம்ப நல்லவன், அவன் அப்பாவி என்னும் ரேஞ்சுக்கு சுனிதா, பவித்ராவிடம் சொல்லி கொண்டிருந்தார். ஆண்களை நோக்கி இவ்வளவு அநாகரீகமாக பேசிய போது, அவருக்கு சப்போர்ட் செய்யும் அன்ஷிதாவின் மனசு பெரிய மனசு தான்.
ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. ஒட்டுமொத்த வீட்டினரும் முத்துக்குமரனிடம் உஷாராக இருக்க வேண்டுமென்பதை கற்றுக் கொண்டனர். பட்டர் & ப்ரெட்டாக இருந்த செளந்தர்யாவுக்கும் ஜாக்குலினுக்கும் நடுவே உரசல் தொடங்கியிருக்கிறது. அர்னாவ் இல்லாததை அன்ஷிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தம் மீது விழும் கறைகளை துடைக்க என்ன செய்வதென தெரியாமல் தடுமாறுகிறார் தர்ஷா. விஷாலின் அடுத்த ப்ளான் என்ன, அருண் இனிமேலாவது திறமையுடன் விளையாடுவாரா, இந்த வாரம் ரஞ்சித் தப்பித்துவிட்டார். அடுத்த வாரம் தாங்குவாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.