Bigg Boss Tamil 8 : மீண்டும் சுனிதாவை தாக்கும் சவுந்தர்யா, கார்னர் செய்யப்பட்ட ஜாக்கு |Day 25
தீபாவளி ஸ்பெஷலாக கந்தசஷ்டி கவசம் பாட்டுடன் நாள் தொடங்கியது. தினமும் ஒலிக்கப்படும் காலை பாடல் அன்றைய நாளுக்கான மூட் செட் செய்யும் வைப் பாடலாக இருக்கிறது. இன்றைய நாளும் அப்படியே ! கிராமங்களில் திருவிழா என்றால் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது பாரம்பரிய வழக்கம். அதை தீபாவளிக்கு சமர்பித்துவிட்டார் பிக்பாஸ்.
இன்பம் பொங்கும் வெண்ணிலா என பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே மஞ்சள் தண்ணீரை ஊற்றி விளையாடினர். தூரத்தில் நின்று ஆடியன்ஸாக ரஞ்சித், ஜாக்குலின், மற்றும் சுனிதா பார்த்து ரசித்தனர்.
தீபாவளி என்பதால் நல்லெண்ணெய், கோலம், புத்தாடை என முழு செட்டப்பும் ரெடியாக இருந்தது. அன்ஷிதாவும், ஜாக்குலினும் சுனிதாவும் வீட்டுக்கு கோலம் போட்டனர். பவித்ராவுக்கு தீபக்கும், சாச்சனா, செளந்தர்யாவுக்கு ரஞ்சித்தும் நல்லெண்ணெய் தலைக்கு வைத்து மசாஜ் செய்துவிட்டனர்.
நல்ல நாள் அதுவுமா எதுவும் நடக்கலையே என்று பார்த்துக் கொண்டிருந்தால் காலையிலேயே பஞ்சாயத்து தொடங்கியது. சுனிதாவின் ஸ்க்ரப் கீழே விழுந்துகிடந்தத்ததால், செளந்தர்யாவை திட்டுகிறார் சுனிதா. அதனால், இருவரும் முட்டிக் கொண்டனர்.
இது கல்யாண மாலை டைம் !
கல்யாணத்துக்கு வரம் பார்க்கும் டாஸ்க் துவங்கியது. திருமணம் ஆகாத போட்டியாளர்களுக்கு வரம் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி அவர்களைப் பற்றியும், அவர்களுக்கு எப்படியான நபர் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்பதையும் கூற வேண்டும். முதலாவதாக ஜாக்குலின் வந்தார். அவருக்கு முத்துக்குமரனும் ஆனந்தியும் குடும்ப உறுப்பினராக வந்து அறிமுகம் செய்தார்கள். ''இவங்க எங்க இருந்தாலும் பிரகாசம் இருக்கும். உங்களுக்கு எதாவது பிரச்னைனா இவங்களே சண்டைப் போட்டு உங்களுக்கான தேவையை செய்து தருவாங்க'’ என்று புகழ்வது போலவே காலை வாரிவிட்டனர். பவித்ராவை தீபக் அறிமுகம் செய்தார். ‘'பாட புத்தகத்தை படித்ததை விட பாட்டு புத்தகம் தான் படிச்சிருக்காங்க'’ என்று கூறினர். பவித்ராவும் பொண்ணு பார்க்க வந்தால் பாடி காட்டுவது போல பாடிக் காட்டி அசத்தினார்.
அன்ஷிதாவுக்கு சம்மதத்தை விட சம்மந்தி முக்கியம் என வாரிவிட்டனர். அட்வெஞ்சர், டிராவல் பிடிக்கும்னா தர்ஷிகாவை தேர்ந்தெடுக்கலாம். ‘ஆனா, உயரமான பையனா வேணும்’ என்றனர். செமையா டான்ஸ் ஆடுவாங்க. தமிழை கத்துக்கிட்டாங்க என்று சுனிதாவையும், கலைமகளையே உங்க முன்னாடி உக்கார வச்சிருக்கோம் என ஆனந்தியையும், இசையே வாழ்க்கையா இருக்குறவன் என ஜெஃப்ரியையும், பல்கலை நிபுணர். கலையை நேசிக்கிறவன் மாதிரி காதலியையும் நேசிப்பாரு என விஷாலையும் அறிமுகம் செய்தனர்.
செளந்தர்யாவுக்கு நடந்த சுயம்வரம் சுவாரஸ்யம். இரண்டு குரலில் பாடிக்காட்டி அசத்தினார். அவரின் சொந்த குரலிலும், பெண் குரலிலும் பாடி மிரட்டினார்.
முத்துக்குமரனுக்கு வரன் பார்க்க மொத்த டீமும் கூடிவிட்டது. ‘அப்பா அம்மாவுக்கு அப்புறம் திருக்குறல் தான் அவனுக்குத் தெரியும்’ என புகழ்ந்து தள்ளினர்.பாசத்தை ஊட்டுற கணவர். சீக்கிரமா வந்து முத்துவை அள்ளிட்டுப் போங்க’ என்று சொன்னது கலகலப்பாக இருந்தது.
பிக்பாஸ் வீட்டுக்கு சிவகார்த்திகேயன் வந்து போன போது, உங்களுக்கு தீபாவளிக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று கூறியிருந்தார். அந்த சர்ப்ரைஸ் வந்தது. பிக்பாஸ் ஹவுஸ் மேட்டுக்கு பிரியாணி ட்ரீட் கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதோடு, சிவகார்த்திகேயனின் குரலில் தீபாவளி வாழ்த்தும் வந்தது.
தீபாவளி பரிசு காத்திருக்கிறது
தீபாவளி பரிசாக எதாவது ஒன்றை அனைவரும் அவர்களுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்க வேண்டும். அனைவருமே ரொம்ப நெருக்கமான ஒரு பொருளை பரிமாரிக் கொண்டனர். ஒவ்வொருவரும் கொடுத்த பரிசும், சொன்ன காரணமும் நெகிழ்ச்சியாக இருந்தது.
குறிப்பாக, பவித்ரா கண்கலங்கி ரஞ்சித்துக்கு பரிசு கொடுத்தார். இப்படியான ஒரு மனிதரை சந்திச்சது ரொம்ப சந்தோஷம் என்று கூறினார். சாச்சனாவும் என் வீட்டு நியாபகார்த்தமா நான் கொண்டு வந்த ஒண்ணு. அவங்களை மறக்கடிக்கிற விதமா என் அண்ணனா இருக்குறார்னு முத்துக்குமரனுக்கு பரிசு கொடுத்தார். ஜெஃப்ரிக்கும், ரஞ்சித்துக்கும் பரிசுகள் அதிகமாக வந்தது. அதுபோல, சுனிதாவுக்கும் பரிசுகள் வந்தது.
இதில் ஏடாகூட வேலை பார்த்தது செளந்தர்யா தான். ஏற்கெனவே, சுனிதாவுக்கும் செளந்தர்யாவுக்கும் முட்டிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய நினைத்து சுனிதாவுக்கு பரிசைக்கொடுத்தார். இருந்தாலும், அதை சரியாக சொல்லாமல் சுனிதாவும் செளந்தர்யாவும் ஸ்பாட்டிலேயே முட்டிக் கொண்டனர். சுனிதாவிடம் இருக்கும் தெளிவும், பொறுமையும் செளந்தர்யாவிடம் இல்லை.
பரிசு கொடுத்துவிட்டு, இனிமேல் சண்டைப் போடாதீங்க. பாசமா நடந்துக்கோங்க என்று மிரட்டாத குறையாக சொன்னார் செளந்தர்யா. அந்த இடமே கலவரமாக மாற இருந்தது. ஆனால், ஹவுஸ் மேட் கூச்சலிட்டு அதை மாற்றினர்.
கடந்த வாரம் முழுக்க சண்டைப் போட்டுக்கொண்ட ஜாக்குலினும் செளந்தர்யாவும் இந்த வாரம் ஒன்றாகிவிட்டனர். இருவரும் மாறி மாறி புலம்பிக் கொள்கிறார்கள். செளந்தர்யாவுக்கு அடுத்த வாரம் நேரடி நாமினேஷன் பவர் கிடைக்கும் என்பதால் ஜாக்குலின் செளந்தர்யாவிடம் அன்பாக இருக்கிறார் என டீமுக்குள்ளே பேசிக் கொள்வதும் நினைவிருக்கலாம்.
கவின் தந்த ஸ்பெஷல் கிஃப்ட்
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தீபாவளி ஸ்பெஷலாக கவின் வீட்டுக்குள் வந்தார். வந்ததுமே ஆண்கள் வீட்டுக்குள் வந்தார் கவின். இந்த தீபாவளிக்கு Bloody Beggar படம் வெளியாவதால், அதன் புரோமோஷனாக கவின் வீட்டுக்குள் வந்தார். ஏற்கெனவே, பிக்பாஸ் வீட்டுக்குள் கவின் இருந்திருக்கிறார் என்பதால், பழைய நினைவுகளையும் பேசினார்.
வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணீர் கொடுக்க கூட, கெஸ்ட்டையே டாஸ்க் செய்ய சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. அதோடு, கவின் தன்னுடைய ஸ்டைலில் பாட்டுப் பாடியும் அசத்தினார். சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்தது போல, இரவு டின்னரை கவின் உடன் அமர்ந்து சாப்பிட்டனர் ஹவுஸ் மேட்ஸ். அதன்பிறகு, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
கவின் வீட்டுக்குள் வரும் போது ஒரு கிஃப்ட் கொண்டு வந்திருந்தார். அதை கிளம்பும் போது என்ன கிஃப்ட் என்று தெரிவித்தார். அதில், ஒவ்வொருவருக்கும் வீட்டிலிருந்து கடிதம் கொடுத்து விட்டிருக்கிறார்கள் என்று கூறியதும் அனைவரின் முகமும் பிரகாசமானது. அதோடு, அதைப் படித்ததும் ஒவ்வொருவரும் கண்கலங்கி நின்றனர். அனைவருமே, மனதிலிருந்து கண்கலங்கினர். கண்டெண்டாக இல்லாமல் ரியாலிட்டியாக இருந்தது இன்றைய ரியாலிட்டி ஷோ !
கடிதத்துக்கே கலங்குபவர்கள், வீட்டு உறுப்பினர்களை நேரில் சந்தித்தால் என்ன ஆவார்கள் என்று தெரியவில்லை. எப்படியும், ஹவுஸ் மேட்ஸின் ஃபேமிலியை வீட்டுக்குள் பிக்பாஸ் இறக்கும். அப்போது எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.
இன்றைய நாளில் எந்த போட்டியும் பொறாமையும் இல்லை. கொண்டாட்டமும் நெகிழ்ச்சியுமாக முடிந்தது.