குறையும் TRP... சரிகிறதா விஜய் சேதுபதியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ரேட்டிங்?
ஒவ்வொரு வியாழக்கிழமையும் டிவிக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகும். அதன்படி இந்த வாரத்துக்கான ரேட்டிங் வெளியாகியிருக்கிறது. ரேட்டிங்கில் பொதுவாக சீரியல்களின் ரேட்டிங் விவரங்கள்தான் உற்று கவனிக்கப்படும். ஆனால், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றுவருவதோடு, இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியை இந்தமூறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாலும் பிக் பாஸ் ரேட்டிங் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சீசனின் முதல் வார ரேட்டிங் கடந்த வாரம் வெளியான நிலையில் கடந்தாண்டு கமல்ஹாசனின் நிகழ்ச்சியைவிட குறைவாகவே விஜய்சேதுபதியின் இந்தாண்டு ஓப்பனிங் நிகழ்ச்சி ரேட்டிங் பிடித்திருந்தது. இதற்கிடையே தொடர்ந்து இரண்டாவது வாரமும் பிக் பாஸ் ரேட்டிங் குறைந்திருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான வார நாட்களின் ரேட்டிங் 4.98 TRP. இதுவே விஜய் சேதுபதி கலந்துகொண்ட வார இறுதி எபிசோடுகளுக்கான ரேட்டிங் இதைவிட மிக மிக சற்றே அதிகரித்து 5.18 ஆக இருக்கிறது.
பொதுவாக கமல்ஹாசன் கலந்துகொள்ளும் வீக்கெண்ட் எபிசோடுகளுக்கு நல்ல ரேட்டிங் வரும் நிலையில் இரண்டாவது வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் குறைந்திருப்பதில் அப்செட்டில் இருக்கிறது பிக் பாஸ் டீம். ஆனால், ''தமிழ்நாடு முழுக்க ஸ்டார் சேனல்களுக்கான கட்டணம் தொடர்பாக கேபிள் ஆபரேட்டர்களுக்கும், சேனலுக்கும் இடையே பிரச்சனை நடந்துவருவதால் நிறைய ஊர்களில் விஜய் டிவியே தெரியவில்லை. இந்த ரேட்டிங் குறைவுக்கு அதுதான் காரணம்'' என்கிறார்கள் விஜய் டிவி தரப்பினர்.