முழங்காலையே மாற்றிய டிவி தொகுப்பாளினி டிடி... காலில் அப்படி என்னதான் பிரச்சனை?!
விஜய் டிவி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினிக்கு அறிமுகமே தேவையில்லை. விஜய் டிவியின் பல டிவி ஷோக்கள் ஹிட் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் ஸ்டார் தொகுப்பாளினி. தற்போது குறிப்பிட்டு எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதில்லை.
சினிமா நிகழ்வுகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என திரைத்துறையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். காரணம் அவரது உடல்நிலை.
சில வருடங்களாக திவ்யதர்ஷினி தீவிர முழங்கால் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட நேரம் நிற்க முடியாது, நடக்க முடியாது, பொது நிகழ்ச்சிகளில் வீல் சேரில் வருவது என டிடி மிகப்பெரிய உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
டிடிக்கு என்ன பிரச்னை?
தன் உடல்நிலை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய திவ்ய தர்ஷினி ''சில வருடங்கள் முன்பு எனக்கு முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டது. அது சிறிய பிரச்னைதான் என்றும் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்றும் சொன்னதால் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. எதிர்வினைகளை ஏற்படுத்திவிட்டது. மீண்டும் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அறுவை சிகிச்சைகளில் இருந்து மீண்டு வருவதற்குள் எனக்கு ஆட்டோ இம்யூன் (Autoimmune condition) நிலை ஏற்பட்டது. அவ்வளவு தான் அதோடு என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது” என்று குறிப்பிட்டார்.
டிடி சில வருடங்களாக பொது நிகழ்வுகளில் வாங்கிங் ஸ்டிக் அல்லது வீல் சேர் உதவியுடன் தான் வருகிறார். மேலும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளைக் கூட மேடையில் அமர்ந்தபடியே தொகுத்து வழங்குகிறார்.
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை
இந்நிலையில் டிடி எதிர்கொள்ளும் இந்த நீண்ட கால பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க மருத்துவர்கள் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைத்துள்ளனர். தற்போது அறுவை சிகிச்சையும் முடிந்துவிட்டது.
இதுகுறித்து டிடி தன் இன்ஸ்டா பதிவில், “ கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆம், எனக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் முழங்கால் மாற்றப்பட்டு விட்டது. கடந்த 10 வருடங்களில் எனது வலது முழங்காலில் நடக்கும் நான்காவது அறுவை சிகிச்சை இது.
எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன். இதில் இருந்து மீள்வது மிகவும் வேதனையான ஒன்று. ஆனால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் கடந்துவிட்டது. என் ரசிகர்களுக்காகவும், என்னை நேசிக்கும் நல் உள்ளங்களுக்கும் இந்த பதிவு. உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த நிபந்தனையற்ற அன்பைப் பெற நான் என்ன தவம் செய்தேன்?
மிக முக்கியமாக, எனக்கு இந்த முழங்கால் அறுவை சிகிச்சை செய்து, என்னை கவனித்துக்கொண்ட என் மருத்துவர்களுக்கு நன்றி. மிகவும் கடினமான 10 ஆண்டுகளை கடந்துவிட்டேன். இந்த புதிய முழங்கால் என்னை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவுக்கும் இதே பிரச்னையா?
நடிகை சமந்தாவும் இதே போன்று ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனாலும் முழுமையாக குணமடையவில்லை. இதையடுத்து அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார். தற்போது உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றால் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.