பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு… 75 கோடி சம்பளம்தான் பிரச்சனையா?
கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ‘’7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட்ஸ் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு உங்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை. வரும் சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் முதல் சீசனுக்குப் பிறகு அரசியல், சினிமா, பிக் பாஸ் நிகழ்சித் தொகுப்பு என மூன்று வேலைகளையுமே சேர்ந்தே சிறப்பாக நிர்வகித்து வந்தார் கமல்ஹாசன். வாரத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே ஷூட் என்பதால் மூன்றரை மாதங்களை அவரால் எளிதாக சமாளிக்க முடிந்தது. ஒரு நாள் ஷூட்டில் கலந்துகொள்ள அவருக்கு கடந்த சீசனில் 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 100 நாட்களில் மொத்தமாகப் பார்த்தால் அதிகபட்சமாக 15 அல்லது 16 நாட்கள் ஷூட்டிங். கிட்டத்தட்ட 75 முதல் 80 கோடி ரூபாய் சம்பளமாக கமல்ஹாசனுக்கு மட்டுமே பிக்பாஸில் ஒரு சீசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சீசனுக்கு கமல்ஹாசனின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் எனப்பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சீசன் பிக் பாஸ் மிகப்பெரிய நஷ்டத்தில் முடிந்ததால் இந்த முறை கமல்ஹாசனுக்கு அதிக சம்பளம் வழங்கமுடியாத சூழலில் சேனல் நிர்வாகம் இருந்திருக்கிறது. இதனால் கமல்ஹாசன் தக்லைஃப் மற்றும் அடுத்தப்படங்களை காரணம் காட்டி விலகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.