பிரபல சீரியல்களை முந்தும் சன் டிவியின் ‘இராமாயணம்… தொடர்ந்து டிஆர்பியில் முன்னேறுவது எப்படி?
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிமை வெளியாகும் டெலிவிஷன் சேனல்களுக்கான டிஆர்பி கடந்த வார தீபாவளி விடுமுறையால் இன்று வெளியாகியிருக்கிறது. கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் ரேட்டிங் சரிந்துவரும் நிலையில் இந்த வாரமும் சன் டிவி தொடர்ந்து முன்னேறுகிறது.
குறிப்பாக கடும் எதிர்ப்புகளை சந்தித்த சன் டிவியின் இராமாயணம் தொடர் டிஆர்பியில் முன்னேறிவருகிறது. பகுத்தறிவு கட்சியின் அங்கமான சன் டிவியில் ‘இராமாயணம்' போன்ற தொடர்களை ஒளிபரப்பக்கூடாது என எழுந்த எதிர்வினைகளை மீறி சன் டிவி ஒளிபரப்பைத் தொடங்கியது. ஆரம்பத்தில் 4 டிஆர்பியோடு தொடங்கிய ‘இராமாயணம்' தொடர் கடந்த இரண்டு வாரங்களாக டாப் 10-ல் இடம்பிடித்துவருகிறது. இந்த வாரம் இந்தவாரம் சுந்தரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட முக்கிய தமிழ் சீரியல்களை விடவும் அதிக டிஆர்பி பெற்று டாப் 10-ல் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது 'இராமாயணம்'.
கடந்த சில வாரங்களாக முதலிடத்தைப் பிடித்துவரும் 'கயல்' நம்பர் 1 சீரியலாக முதலிடத்தில் இருக்கிறது. இந்த வாரம் 8.73 TRP பெற்றிருக்கிறது 'கயல்'. சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மூன்று முடிச்சு' சீரியல் 8.03 TRP-யோடு இரண்டாவது இடம்பிடிக்க, தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை 7.97 TRP-யோடு மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது.
ஒரு காலத்தில் நம்பர் ஒன் சீரியலாக இருந்த விஜய் டிவியின் 'பாக்யலட்சுமி' சீரியல் இந்த வாரம் 9-வது இடத்துக்குப் போய்விட்டது.
இராமாயணம் ஏன் முன்னேறுகிறது?
தினமும் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது இராமயணம். இந்தி டப்பிங் சீரியலான இந்த 'இராமாயணம்' கதைக்கு இன்னமும் நேயர்கள் இருக்கிறார்கள் என்பதையே இதன் உயரும் டிஆர்பி சொல்கிறது. மக்கள் இதிகாசப் புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதேசமயம் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மகாநதி' மற்றும் 'மாரி' சீரியல்கள் பழைய சீரியல்களாக இருப்பதாலும் 'இராமாயணம்' சீரியல் பக்கம் மக்கள் அதிகளவில் வருகிறார்கள்.
இந்த வார டாப் 10 சீரியல்கள் இங்கே!
1. கயல் - 8.73 TRP
2. மூன்று முடிச்சு - 8.03 TRP
3. சிறகடிக்க ஆசை 7.97 TRP
4. சிங்கப்பெண்ணே - 7.77 TRP
5. மருமகள் - 7.25 TRP
6. ராமாயணம் - 6.94 TRP
7. சுந்தரி - 6.88 TRP
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் - 6.44 TRP
9. பாக்கியலட்சுமி - 6.03 TRP
10. சின்ன மருமகள் - 5.84 TRP