கேப்ரியெல்லா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி... 'சுந்தரி' சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விவரம் என்ன?
சன் டிவியில் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியல் 'சுந்தரி'. கிராமப் பின்னணியிலிருந்து வந்த, தன் நிறத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் சுந்தரி. கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுகளை மனதில் வைத்து பயணிக்கும் சுந்தரி, கணவனால் துரோகத்தை எதிர்கொண்டு, பல பிரச்சனைகளுடன் போராடுகிறாள். தற்போது கலெக்டராக உயர்ந்துள்ள சுந்தரி, தன் வாழ்க்கையின் சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே சீரியலின் மையக்கதையாக இருக்கிறது.
2021 பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த சீரியல், 1000 எபிசோடுகளை கடந்தும் தனது பயணத்தை தொடர்கிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்துவருபவர் கேப்ரியெல்லா செலஸ். ‘கபாலி’,’காஞ்சனா -3’, 'ஐரா' உள்ளிட்ட சில படங்களில் நடித்த கேப்ரியெல்லா செலஸ் 2021 முதல் 'சுந்தரி' சீரியலில் கதாநாயகி சுந்தரியாக நடித்துவருகிறார்.
கேப்ரியெல்லா சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது கேப்ரியெல்லா கர்ப்பமாக இருக்கிறார். இது 'சுந்தரி' சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது. அதேசமயம் கர்ப்பம் காரணமாக கேப்ரியெல்லாவால் தொடர்ந்து நடிக்கமுடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
இதனால் ‘சுந்தரி' சீரியலை வரும் நவம்பரோடு முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது சன் டிவி. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த சுந்தரியின் பயணம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்பதுதான் சுந்தரி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.
சுந்தரி கிளைமேக்ஸ் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருக்கும் எனத்தெரிகிறது. கேப்ரியெல்லாவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லையென்றால் முன்கூட்டியே சீரியல் முடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது!