ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் என்னென்ன இடங்களைப் பிடித்துள்ளன.
விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துவருகிறது. குடும்ப உறவுகளின் மோதல் மற்றும் முத்து - மீனா காதல் கதையமைப்பின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்திருக்கிறது 'சிறகடிக்க ஆசை'.
வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் 'பாக்கியலட்சுமி'யின் தன்னம்பிக்கையினைக் கதையாக எடுத்துக்கொண்டு நகர்கிறது இந்த சீரியல். கடந்த வார எபிசோடுகளில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி மாமனாரின் மரணம் கதையின் உச்சக்கட்ட நகர்வாகப் பார்க்கப்பட்டது.
9 மணி ஸ்லாட்டை விட சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கயல்' தொடர்ந்து அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுவருகிறது. குடும்பத் தொடர்புகளை மையமாகக் கொண்டு, கயல் எனும் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி வெளியாகும் இந்த சீரியல் தொடர்ந்து மக்களின் ஆதரவைப் பெற்றுவருகிறது. இதில் கயலாக சைத்ரா ரெட்டி நடித்துவருகிறார்.
சமூக மாற்றம் மற்றும் பெண்களின் வீரத்தை மையமாகக் கொண்டு வலிமையான கதைக்களத்துடன் முன்னேறிவந்த 'சிங்கப்பெண்ணே' கடந்த சில வாரங்களாகப் பின்னடைவை சந்தித்துவருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அதன் இரண்டாம் பாகத்திலும் மக்கள் விரும்பும் தொடராக இருக்கிறது. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பதை அடிப்படையாகக் கொண்டு தந்தைக்கும், மகன்களுக்கும் இடையேயான உணர்ச்சிகரமான கதையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துவருகிறது.
சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஆதிரையும், சுயநலமாக வாழும் பிரபுவும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் 'மருமகள்' சீரியலின் கதை.
நந்தினி தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக வாழும் தன்னம்பிக்கை பெண். சூர்யா, தாயின் மீது வெறுப்பை சுமப்பவன். நந்தினியுடன் நட்பு வளர்த்து அவளின் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறான். இவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் விதியின் விளையாட்டு இவர்களை எவ்வாறு ஒன்று சேர்க்கிறது என்பதுதான் மூன்று முடிச்சு சீரியலின் கதை. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அறிமுகமான இந்த சீரியல் தினமும் இரவு 8.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
டாக்டராக ஆசைப்படும் தமிழ்ச்செல்விக்கு கட்டாய திருமணம் நடக்கிறது. இளைய மருமகளாக கணவனின் குடும்பத்துக்குள் நுழையும் தமிழ்ச்செல்வி பழைய பழக்கவழக்கங்களையும் எதிர்கொண்டு, தனது கனவுகளை எப்படி சாதிக்கப்போகிறாள் என்பதுதான் 'சின்ன மருமகள்' சீரியலின் கதை. விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
கோடீஸ்வர மருமகன்களுக்கு ஆசைப்பட்டு தன் மகள்களைத் திருமணம் செய்யும் கோடீஸ்வரியும், அவர்களது மகள்களின் கதையும்தான் ஆஹா கல்யாணம். விஜய் டிவியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது ஆஹா கல்யாணம்.
காதல், பாசம், பெற்றோர்கள் உறவுகளின் நுட்பங்களை மையமாகக் கொண்டு மல்லி சீரியல் பயணிக்கிறது.