இந்த வார தொலைக்காட்சிகளுக்கான டிஆர்பி ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ எப்போதும்போல முதலிடம் பிடிக்க, சன் டிவியின் டாப் ஷோவாக இருந்த ‘சிங்கப்பெண்ணே’ தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது.
கடந்த வாரம் 9.52 என்கிற ரேட்டிங்கில் இருந்த விஜய் டிவியின்'சிறகடிக்க ஆசை' சீரியல் இந்தவாரம் 9.86 என்கிற ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து யாராலும் நெருங்கமுடியாதபடி தனது முதலிடத்தை உறுதிசெய்து முன்னேறிக்கொண்டிருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’.
விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ கடந்த வாரம் 8.12 என்கிற ரேட்டிங்கில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.54 ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது. ராதிகாவுக்கும் - கோபிக்கும் இடையிலான சண்டையை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே இதற்கான சாட்சி.
சீசன் 2 ஆரம்பிக்கும்போது தடுமாறிக்கொண்டிருந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் ரேட்டிங் இப்போது விறுவிறுவென மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது. கடந்த வாரம் 7.62 என இருந்த இந்த சீரியலின் ரேட்டிங் இந்த வாரம் 7.93
சன் டிவியின் டாப் ஷோவான 'சிங்கப்பெண்ணே' தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நான்காவது இடத்துக்குப் பின்தங்கிவிட்டது. முதலில் 8 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சிங்கப்பெண்ணே 9 ரேட்டிங் வரை முன்னேறிவந்தது. ஆனால், 9 மணிக்கு ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்' சீரியலை முடித்துவிட்டு அந்த இடத்துக்கு வந்ததில் இருந்து தடுமாறுகிறது 'சிங்கப்பெண்ணே'. கடந்தவாரம் 8.26 டிஆர்பி பெற்றிருந்த 'சிங்கப்பெண்ணே' இந்தவாரம் 7.49 என மிகவும் குறைந்திருக்கிறது.
சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கயல்' தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் சரிவை சந்தித்திருக்கிறது 'கயல்'. கடந்தவாரம் 8.03 என இருந்தது இந்தவாரம் 7.12 எனக் குறைந்திருக்கிறது.
சன் டிவியில் 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மருமகள் தொடர் கடந்தவாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் முன்னேறியிருக்கிறது. 6.89 என்கிற ரேட்டிங்கில் இருந்து 6.93 என முன்னேறியிருக்கிறது.
சன் டிவியின் மருமகளை அடுத்து விஜய் டிவியின் 'சின்ன மருமகள்' 6.81 என்கிற ரேட்டிங்கோடு ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 5.96 என்கிற ரேட்டிங்கில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் சட்டென முன்னேறி 6.81 என்கிற ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது.
கடந்தவாரம் இருந்த அதே 6.57 என்கிற ரேட்டிங்கையே இந்தவாரமும் பெற்றிருக்கிறது விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்'.
கடந்த வாரம் 6.77 என்கிற ரேட்டிங்கைப் பெற்றிருந்த 'வானத்தைப்போல' இந்த வாரம் 6.51 எனக் குறைந்து ஒன்பதாவது இடத்துக்குப் பின் தங்கியிருக்கிறது.
சன் டிவியின் 'சுந்தரி' சீரியல் பத்தாவது இடத்தில் இருக்கிறது. கடந்த வாரம் 6.24 என்கிற ரேட்டிங்கைப் பெற்றிருந்த 'சுந்தரி' இந்தவாரம் 6.07 எனக் குறைந்திருக்கிறது.