‘சிறகடிக்க ஆசை’ இன்று : க்ரிஷ் விஷயத்தை உடைத்த மீனா, முத்து… மனோஜின் வார்த்தையால் அதிர்ந்த ரோகிணி!
‘’இப்பதான் என் வாழ்க்கையில வளர்ச்சி வந்திருக்கு... இனிமே என் வாழ்க்கை ஒளிமயமா இருக்க போகுது’’ என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறாள் விஜயா. ‘’எனக்குனு ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு… இனிமே நான் யார் கையையும் நம்பி இருக்க தேவையில்லை’’ என்று தோழி பார்வதியிடம் சந்தோஷப்படுகிறாள். அப்போது காதல் ஜோடி ஒன்று பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வருவது போல உள்ளே என்ட்ரி கொடுக்கின்றனர். பிறகு விஜயா அவர்களை வரவேற்று அனைவருக்கும் பரதநாட்டிய குரு வணக்கம் சொல்லிக் கொடுக்கிறாள்.
காதல் ஜோடி போடும் பிளான்!
விஜயா குரு வணக்கம் சொல்லி முடிக்க பதினைந்து நிமிஷம் பிரேக் என சொல்கிறாள். பிறகு பார்வதியிடம் ஜூஸ் என்று சொல்ல அவள் எல்லாருக்குமா என்று கேட்க எல்லாருக்கும் கொடுத்தா கட்டுப்படியாகாது எனக்கு மட்டும் என்று சொல்கிறாள். தனியாக சென்ற காதல் ஜோடி ‘’இங்கே இருக்கிற வரைக்கும் நமக்கு எந்த பிரச்சினையும் வராது. இங்கு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க… மத்தவங்களுக்கு நாம பரதநாட்டியம் கத்துக்க வந்திருக்கிறதா தான் தெரியும்’’ என்று காதலன் தீபக் சொல்கிறான். அவனது காதலி ‘’பயமா தான் இருக்கு வேற எங்கயாச்சும் போய் இருக்கலாம்’’ என்று சொல்ல ‘’உங்க அப்பா லைவ் லொக்கேஷன் போட்டு நீ எங்க போறன்னு பார்த்துகிட்டே இருக்காரு.. அப்படி இருக்கும் போது எங்க போக முடியும்? இதுதான் சரியான இடம். ஒரு மணி நேரம் நம்ம சந்தோஷமா ஆடலாம் பாடலாம் பேசலாம் எந்த பிரச்சனையும் வராது’’ என்று சொல்கிறான்.
விஜயாவுக்கு ஐஸ் வைக்கும் தீபக்!
மீண்டும் கிளாஸ் தொடங்க தீபக் ‘’உங்கள மாதிரி சூப்பரா பரதநாட்டியம் கற்றுத் தரவங்களை நாங்க எங்கேயுமே பார்க்கல’’ என்று புகழ்ந்து தள்ளுகிறான். ‘’நாங்க உங்கள எப்படி கூப்பிடனும் மேடமா, ஆன்ட்டியா?’’ என்று கேட்க பார்வதி ‘’அவ என்ன உங்க பக்கத்து வீட்டு லேடியா ஆன்ட்டின்னு கூப்பிட மாஸ்டர்ன்னு கூப்பிடுங்க’’ என்கிறாள். பிறகு தீபக் மாஸ்டர் என்று கூப்பிட்டு ஐஸ் வைப்பதோடு ‘’உங்க வீடு எங்க இருக்கு’’ என்று கேட்க விஜயா தி.நகர் என்று சொன்னதும் ‘’நானும் அந்த வழியா தான் போவேன் தினமும் நானே உங்கள வீட்டுல விட்டுறேன்’’ என்கிறான்.
ஸ்ருதியை சமாதானம் செய்த ரவி!
ரவி ஸ்ருதியிடம் கோபமாக பேசியதால் ரூமுக்கு வந்து ‘’ரெஸ்டாரன்ட் போகலாம்’’ என்று சொல்லி அவளை சமாதானம் செய்கிறான். ஸ்ருதி ‘’இனிமே நீ அடிக்கடி வந்து என்கிட்ட சண்டை போடு… அப்பதான் இந்த மாதிரி அவுட்டிங் போலாம்னு கேப்ப’’ என்று சொல்லி கிளம்புகிறாள்.
தீபக் உடன் வந்த விஜயா!
வீட்டில் முத்து, மீனா, மனோஜ், ரோகிணி ஆகியோர் பேசிக்கொண்டிருக்க அண்ணாமலை ‘’என்ன ஒரே பர்த்டே ஃபங்க்ஷனா சொல்லிக்கிட்டு இருக்கீங்க… யாருக்கு பர்த் டே’’ என்று கேட்டுக் கொண்டிருக்க விஜயா வீட்டு வாசலில் வந்து இறங்குகிறாள். அவளிடம் ஓவராக பம்மும் தீபக் ‘’உங்க பேக்கை நானே வீட்டுக்குள்ள கொண்டு வந்து கொடுக்கிறேன்… அதுதான் மரியாதையா இருக்கும்’’ என்று பின்னாடியே பணிவுடன் எடுத்து வருகிறான். விஜயா குடுப்பா என்று சொல்லியும் எங்க வைக்கணும் மாஸ்டர் என்று கேட்டு டேபிள் மீது வைக்கிறான்.
‘’தினமும் நானே உங்கள வந்து கூப்பிட்டுக்கிறேன்’’ என்று சொல்ல ‘’வேணாப்பா என் பையன் கார் வச்சுட்டு இருக்கான்… அவன் தான்’’ என்று மனோஜை கைகாட்டி பெரிய ‘’பிசினஸ் மேன்’’ என்று சொல்கிறாள். ‘’சரிங்க மாஸ்டர் நான் கிளம்புறேன்’’ என்று தீபக் கிளம்ப முத்து அவனை கூப்பிட்டு ‘’உன் பேர் என்ன கொக்கியா… இவ்வளவு குனியிற’’ என்று கலாய்த்து அனுப்புகிறான். விஜயாவை மாஸ்டர் மாஸ்டர் என கூப்பிட்டதை நினைத்து மனோஜ் விஜயா மாறி மாறி பெருமையாக பேசிக்கொள்ள முத்து ‘’டீ மாஸ்டர், பரோட்டா மாஸ்டர் என எல்லாரையும் மாஸ்டர்னு தான் கூப்பிடுவாங்க’’ என்று கலாய்க்கிறான்.
விஜயா ரூமுக்குள் போகும்போது மாஸ்டர் என்று கூப்பிட விஜயா திரும்பி பார்க்க முத்து ‘’மீனாவிடம் ஒரு டீ போடுங்க மாஸ்டர்’’ என்று சொல்ல விஜயா கடுப்பாகிறாள்.
உண்மைகளை உடைத்த முத்து, மீனா!
வெளியே போனவர்கள் எல்லோரும் வீட்டுக்கு வர முத்து மற்றும் மீனா க்ரிஷ் குறித்து பேச தொடங்குகின்றனர். ‘’கிரிஷ்க்கு அம்மா இருக்காங்க’’ என்று சொல்ல ‘’யாரும் இல்ல அத்தை மட்டும்தானேன்னு சொன்னாங்க’’ என்று அண்ணாமலை கேட்க ‘’இல்ல அவங்களுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. கிரிஷ் பிறந்த கொஞ்ச நாள்ல அவங்க வீட்டுக்காரர் இறந்துட்டு இருக்காரு. அதனால அவங்க கிரிஷ்ஷை தன்னுடைய மகனா ஏத்துக்கல. அத்தைனு சொல்லி தான் வளர்த்து இருக்காங்க. துபாய்ல வேலை செஞ்சு பணத்தை மட்டும் அனுப்பிட்டு இருக்காங்க’’ என்று சொல்கிறார்கள்.
ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த மனோஜ்!
‘’தன்னுடைய குழந்தையை வேணாம்னு சொல்ற அம்மா கூடவா இருப்பாங்க’’ என்று ரவி சொல்ல ‘’ஏன் நம்ம வீட்டிலேயே இருக்காங்களே… என்னை அப்படித்தானே சொன்னாங்க… அதனால தானே பாட்டி வீட்ல வளர்ந்தேன்’’ என்று பழைய கதையை பேசுகிறான் முத்து.
‘’அம்மா இருந்தும் அம்மா பாசத்துக்கு ஏங்குற வலி ரொம்ப கஷ்டம்’’ என்று சொல்லி ‘’நான் என்னை சொல்லல… கிருஷ்ஷை சொன்னேன்’’ என்று சொல்கிறான். விஜயா ‘’அவ பெரிய ஃபிராடா இருப்பா போல’’ என்று சொன்னதும் மனோஜ் ‘’ஒரு குழந்தை இருக்கிறதையே அந்த பொண்ணு மறைச்சிருக்கிறா, இந்நேரம் ஒரு கல்யாணம் கூட பண்ணிக்கிட்டு இருப்பா... எவன் ஏமாந்து போய் இருக்கானோ’’ என்று சொல்கிறான். இதையெல்லாம் படிக்கட்டில் நின்று கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள்.
ரோகிணி மாட்டுனா என்னாகுமோ?!