தமிழக வெற்றிக்கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருகிறார் நடிகர் விஜய். தமிழில் விஜய் நடித்தப் பல படங்களை ரீமேக் செய்து தெலுங்கில் வெற்றிகண்டவர் நடிகர் பவன் கல்யாண். இப்போது அரசியலில் விஜய்க்கு முன்னோடியாக மாறியிருக்கிறார் பவன் கல்யாண். நடிகர் விஜய் பவன் செய்த இந்த 10 விஷயங்களை செய்தால் அவரது அரசியல் எதிர்காலம் பிரகாசமாக அமையும்!
2008-ல் சிரஞ்சீவி பிரஜ ராஜ்ஜியம் என அரசியல்கட்சி தொடங்கியபோதே அன்ணணுக்காக களமிறங்கி கடுமையாகப் பிரச்சாரம் செய்தவர் பவன் கல்யாண். 2011-ல் சிரஞ்சீவி கட்சியைக் கலைத்து காங்கிரஸில் இணைந்துவிட 2014-ல் அரசியல் வேண்டாம் என்கிற அண்ணனின் அறிவுரையையும் மீறி ஜனசேனா என்கிற கட்சி தொடங்கினார் பவன் கல்யாண். 2019 ஆந்திர பிரதேச தேர்தல் களத்தில் இறங்கிய பவன் கல்யாண் மிகவும் அவமானகரமான தோல்வியை சந்தித்தார். 140 இடங்களில் போட்டியிட்ட இவரது கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே எம்எல்ஏ-வாக வெற்றிபெற்றார். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பவன் கல்யாண் இரண்டிலுமே தோல்வியடைந்தார். ‘’கட்சியின் தொண்டனே ஜெயிச்சிட்டான் தலைவனால ஜெயிக்கமுடியில'’ என அவமானப்படுத்தப்பட்டார் பவன். ஆனால், பவன் இந்தத் தோல்வியால் முடங்கிவிடவில்லை. தொடர்ந்து களத்திலும் சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தார்.
பவன் கல்யாணைப்போல தொலைநோக்குத்திட்டத்தோடு விஜய் அரசியலில் இருக்கவேண்டும். வெறும் 2026 தேர்தலை மட்டுமே மனதில்வைத்துக்கொண்டு களமிறங்காமல், வெற்றி, தோல்விகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்தடுத்த தேர்தல்களை மனதில்கொண்டு களத்தில் அர்ப்பணிப்போடு உழைக்கவேண்டும்.
2019 தேர்தல் தோல்விக்குப்பிறகு பவன் கல்யாண் ‘ஜன வாணி' என்கிற பெயரில் சிறிய அளவிலான மக்கள் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களின் மூலம் மக்களோடு நேரடியான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இந்தக்கூட்டங்களில் அவரிடம் சொல்லப்பட்ட நிறைகுறைகளை வைத்து சமூக வலைத்தளங்கில் அதைப்பற்றி எழுதியும், பேசியும் வெகுஜென மக்களிடம் தன் கருத்துக்களைக் கொண்டுபோய் சேர்த்தார்.
விஜய் கட்சி தொடங்கி நான்கு மாதங்கள் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஆனால், இதுவரை அவர் பொதுக்கூட்டங்களிலோ, சிறிய அளவிலான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களிலோ கலந்துகொள்ளவில்லை. பவன் கல்யாண் தொடங்கிய ‘ஜன வாணி' போன்று மக்களை சந்திக்கும் கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க நடத்தவேண்டும்.
பவன் கல்யாண் நில ஆக்கிரமிப்பு, மலைகள் மீட்பு, விவசாயிகள் நலன் என தொடர்ந்து அரசுக்கு எதிரானப் போராட்டங்களை நடத்திகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இவரது போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு குவிவதைப் பார்த்த ஆளும்கட்சி இவரைப் போராட்டங்களை நடத்தவிடாமல் செய்தது. பல ஊர்களுக்குள் இவரை நுழையவேவிடவில்லை. காரைவிட்டே இறங்கமுடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் நடந்தது. ஆனால், பயப்படாமல்,அதிகாரத்துக்கு அடிபணியாமல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டார் கல்யாண்.
விஜய்யும் மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும், முன் நின்று நடத்தவேண்டும். தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் அவரது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சமூக நீதி, ஊழல் ஒழிப்பு என்கிற மூன்று கொள்களைத்தான் அதிகமாக முன்வைத்துப் பேசினார் பவன். அதேப்போல் நடிகர் விஜய்யும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் குறளை அடிப்படையாகக்கொண்டே தன் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். பிறப்பால் அனைவரும் சமம் என்கிற அவரது கோட்பாட்டை மக்களிடம் தெளிவாகக் கொண்டுசெல்லவேண்டும்.
பவன் கல்யாண் இளைஞர்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசிவந்தார். இளைஞர்களின் பிரச்சனைகளில் முக்கியமானது வேலைவாய்ப்பின்மை. தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது வேலைவாய்ப்பின்மைதான். விஜய்க்கு இளைஞர்கள்தான் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்பதால் இளைஞர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி பேசவும், போராட்டங்களை நடத்தவும் வேண்டும்.
மக்களின் துயரங்களில் மீட்புப் பணிகளில் தொடர்ந்து பங்கெடுத்தார் பவன் கல்யாண். ஆந்திராவில் அடிக்கடி புயல் தாக்குதல் அதிகம் இருக்கும் என்பதால் இயற்கைப்பேரிடர்களின்போது கட்சியின் சார்பில் களத்தில் நின்றார் பவன். தமிழ்நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக வர்தா புயல், சென்னை வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். இந்தப் பேரிடர்களின்போது தன் கட்சியினரை மட்டும் களத்தில் இறக்காமல் விஜய்யும் களமிறங்கும்போது அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் தொடர்ந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் தலித்துகளுக்காக குரல் எழுப்பிக்கொண்டிருந்தார் பவன் கல்யாண். இவரது கட்சியில் தலித்துகளுக்கு அதிகப்படியாக பதவிகள் கொடுக்கப்பட்டது. இப்போது வெற்றிபெற்றிருக்கும் 21 எம்எல்ஏ-களில் இருவர் தலித்.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தலித்துகளின் வாக்குகள் வெற்றிபெற மிக முக்கியத்தேவை. விஜய்யே சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர்களது குரலாக அவர் முழங்கவேண்டியது அவசியம்.
பவன் கல்யாண் தன் நடிகர் என்கிற செலிபிரிட்டி செல்வாக்கை முழுவதுமாகப் பயன்படுத்தினார். தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் மக்கள் கூட்டங்களைக் கூட்டினார். அதேப்போல் நடிகர் விஜய்யும் தொடர்ந்து தனது கூட்டங்களுக்கு அதிகப்படியான மக்கள் கூட்டத்தை தனது சினிமா செல்வாக்கைப் பயன்படுத்திக்கூட்ட வேண்டும். அரசியல் கட்சியாக மாறினாலும் சாதாரண ரசிகர்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் தரவேண்டும்.
2014-ல் கட்சி தொடங்கும்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தார் பவன் கல்யாண். பின்னர் 2017-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகியவர், 2019-ல் மீண்டும் சேர்ந்துகொண்டார். 2024 தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சியை வெற்றிபெறவைத்திருக்கிறார் பவன் கல்யாண். அதேப்போல் நடிகர் விஜய்யை இப்போதே சீமான் கூட்டணிக்கு இழுக்கிறார். விஜய் சரியான கூட்டணியை தேர்ந்தெடுத்து 2026 தேர்தலை சந்திக்கவேண்டும்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் கட்சி நிர்வாகத்தை வெளிப்படையாக வைத்திருந்தார் பவன் கல்யாண். தோல்விகளுக்கு முதல் ஆளாக நின்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதேப்போல நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிலும் விருப்பு வெறுப்பில்லாமல் நடந்துகொள்ளவேண்டும். கட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். ஒரு சாராருக்கு மட்டுமே பதிவிகளையும், பொறுப்புகளையும் தரக்கூடாது. அதேப்போல வெற்றி தோல்விகளுக்கு விஜய்யே முன்நின்று பொறுப்பேற்க வேண்டும்.