விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வீட்டுக்கேச் சென்று வாழ்த்தினார். அப்போது அவரிடம் ‘தங்கலான்' படம் குறித்து கேட்கப்பட்டபோது படத்தைப் பார்க்கவில்லை என பதில் அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 6) பெங்களூருவில் ‘தங்கலான்' படத்தைப் பார்த்திருக்கிறார் தொல்.திருமாவளன். படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நீண்ட விமர்சனமாக படம் குறித்து ஒரு தேர்ந்த விமர்சகர் போல எழுதியிருக்கிறார்.
‘’நடிகர் விக்ரம் அவர்களும் இயக்குநர் இரஞ்சித் அவர்களும் இணைந்துள்ள இப்படைப்பு, நிகழ்காலத்துக் கலை ஆர்வலர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. கதையின் காலத்தோடும் களத்தோடும் இருவரும் முழுமையாக ஒன்றித்து இயங்கியிருப்பது சிறப்புக்குரியது.
வரலாற்று உண்மையைக் கருவாகக் கொண்ட படைப்பு எனினும், திரைக் கதைகளுக்கான புனைவுகளும் கலை நயத்துக்கான ஒப்பனைகளும் குழைந்தவொரு கலவைக் கலையே தங்கலான் என்னும் இவ்வார்ப்பாகும். காடு கழனிகளில் காலமெல்லாம் கிடந்துழலும் கடைநிலை மக்கள் கடைத்தேற பாடுபடும் களப்போராளியே தங்கலான். பண்ணையார்களின் மிரட்டலுக்குப் பணியாத போர்க்குணத்தான்.
மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் மமதைக் கும்பலின் ஆணவத்திற்கு மண்டியிடாதவன். குருதியும் வேர்வையும் கொட்டி உழுது பயிர்செய்யும் உன்னத வேளாண்குடிகளின் வறுமையை வீழ்த்தி வாழ்வை மீட்க வெகுண்டெழுந்த வீரன்.
வேலூர் மாவட்டம் வேப்பூர் சேரியிலிருந்து வெளியேறி, வெள்ளையர் அழைப்பையேற்று கோலார் பகுதியில் தங்கம் வெட்டியெடுக்கச் செல்லும் தொழிலாளியாகப் பரிணாமம் பெறும் தங்கலான், வழியிலும் களத்திலும் அவன் சந்தித்த சவால்கள், அவனோடு அவனை நம்பி புலம்பெயர்ந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் மற்றும் இழப்புகள் போன்றவற்றை உரத்துப் பேசும் உரைக் காவியம்.
ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் மொத்த வடிவமாக விளங்கும் ஆளும் அதிகார வர்க்கக் கும்பலுக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த எளிய மக்களுக்கும் இடையில் வெடித்தெழும் முரண்களையும் மோதலையும் விவரிக்கும் திரைச் சித்திரம். உழைத்துப் பொருளீட்டிப் பறிபோன நிலத்தை மீட்கும் தங்கலான், பண்ணை ஆதிக்கம் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தனது உறவுகளை மீட்கவே கோலாருக்குப் புலம் பெயர்ந்து, சொல்லொணா துயரங்களைத் தாண்டிச் சுடர்வீசும் தங்கத்தை வெட்டியெடுத்துத் வெற்றிக் களிப்பில் தகத்தகாய ஒளியென மின்னுகிறான்.
அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை வீழ்த்தி அறம் தவறாது நேர்மையாய் உழைத்து தலைநிர்ந்து வாழும் ஒரு சமூகத்தின் அடையாளம் தான் தங்கலான். இரஞ்சித்துக்கும் விக்ரமுக்கும் எனது பாராட்டுகள்… வாழ்த்துகள்’’ என மனதார பாராட்டியிருக்கிறார் தொல்.திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரின் பாராட்டுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் நெகிழ்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார். ‘’சமூக, அரசியல் பணிச்சுமைகளுக்கிடையே ‘தங்கலான்’ திரைப்படத்தை பார்த்ததோடு இப்படைப்பு குறித்த உங்கள் கருத்தை ஒரு ஆய்வாளருக்குரிய நேர்த்தியோடு பதிவு செய்தமைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர்,அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நன்றியும் அன்பும்!’’ என நெகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்!