'வேட்டையன்' - த.செ. ஞானவேல், ரஜினிகாந்த் 
சினிமா

‘வேட்டையன்’ ட்ரெய்லர் சொல்வது என்ன : உச்ச நட்சத்திரங்களின் வணிகத்துக்கு பலியாகிறார்களா இயக்குநர்கள்?

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் ரஜினியின் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'வேட்டையன்' ட்ரெய்லர் குறித்தும், அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தான என்கவுன்ட்டர்கள் குறித்தும் தன்னுடைய முழுமையான பார்வையை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

Suresh Kannan

ரஜினிகாந்த்தின் 170-வது திரைப்படம் ‘வேட்டையன்’. ஒரு நடிகர் தனது முன்னணி அந்தஸ்தையும் வணிக மதிப்பையும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டு வருவது நிச்சயம் அசாதாரணமான விஷயம். இந்த வகையில் ரஜினியின் கமர்ஷியல் சாதனை மிகப்பெரியது. 

ஆனால் ‘ஜெய்பீம்’ என்கிற சிறந்த திரைப்படத்தைத் தந்த த.செ.ஞானவேல், அடுத்த படத்தில் ரஜினிகாந்த்துடன் கூட்டணி அமைக்கிறார் என்கிற தகவல் வெளியான போது நல்ல சினிமாவைத் தேடிப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒருவேளை அது அதிர்ச்சியைத் தந்திருக்கலாம். 

ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு எந்தவித பிரச்னையுமில்லை. தங்களுடைய ‘தலைவரின்’ திரைப்படம் ‘மாஸாக’ இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு. ரஜினிகாந்த்தின் நோக்கமும் எப்போதும் அதுதான். “மெசேஜ் சொல்றதுல்லாம் எனக்கு செட் ஆகாது. படம் கமர்ஷியலா நல்லா வரணும். தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரணும்” என்று ‘வேட்டையன்’ தொடர்பாக ரஜினி பேசியிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. இதுதான் தனது நிலைப்பாடு என்பதை எத்தனையோ காலமாக அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். 

ஆனால் தமிழில் சிறந்த சினிமாக்கள் வெளிவர வேண்டும் என்கிற தாகம் உடைய ரசிகர்கள், ஆர்வலர்கள், விமர்சகர்கள் போன்றவர்களுக்கு ரஜினி + ஞானவேல் கூட்டணி ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் தந்திருக்கலாம். ஏன் என்று சொல்கிறேன். 

ஸ்டார் நடிகர்களின் வணிகத்திற்கு பலியாகும் இயக்குநர்கள்

சில இயக்குநர்களின் அறிமுகத் திரைப்படங்கள் சிறிய பட்ஜெட்டில் உருவானதாக, சமூக அக்கறையுடன் கூடியதாக, லட்சியத் திரைப்படமாக, இயக்குநர்களின் கனவுப்படமாக இருக்கும். முதல் படம் என்பதால் நீண்ட காலம் யோசித்து செதுக்கி செதுக்கி உருவாக்கியிருப்பார்கள். இந்தப் படம் வெளியான பிறகு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கும். இது வணிகரீதியான வெற்றியையும் அடையும் போது சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு சந்தையில் ஒரு மதிப்பு உருவாகும். முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தங்களின் அடுத்த படத்திற்காக அந்த இயக்குநரை டார்கெட் செய்யத் தொடங்குவார்கள். 

பெரும்பாலான இயக்குநர்கள் சறுக்கி வீழ்வது இந்த இடத்தில்தான். ஸ்டார் நடிகரின் கால்ஷீட், பெரிய பட்ஜெட், சிறந்த டெக்னிக்கல் டீம், நல்ல சம்பளம் எனும் போது அந்த வாய்ப்பை மறுப்பது எவருக்குமே சிரமம்தான். ஆனால் கமர்ஷியல் பாதைக்குள் நுழையும் போது பல சமரசங்களுக்கு அந்த இயக்குநர் ஆளாக வேண்டியிருக்கும். ஏனெனில் அங்கு லாபம் என்பதுதான் பிரதான டார்கெட். அதற்காக கனவுகளையும் லட்சியங்களையும் மூட்டை கட்டி ஓரமாக வைத்து விட்டு லாபத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கும். சிறந்த திரைப்படங்களை தரக்கூடிய இயக்குநர்கள், கமர்ஷியல் பாதைக்கு திரும்புவதால் தரமான படங்களின் எண்ணிக்கை குறைந்து மீண்டும் மீண்டும் மசாலா திரைப்படங்களே நமக்கு கிடைக்கக்கூடிய அவல நிலை ஏற்படுகிறது. 

இந்த கமர்ஷியல் பயணத்தில் சம்பந்தப்பட்ட இயக்குநர், தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றிகளைத் தொடர்ந்து தந்தால் பிழைத்தார். ஆனால் அவருக்கு கிடைக்கும் ஒரேயொரு தோல்வி கூட மிகப் பெரிய வீழ்ச்சியை அவருக்கு கொண்டு வந்து விடும். அவரைத் துரத்திய நடிகா்களும் தயாரிப்பாளர்களும் அதற்குப் பிறகு திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அப்போது சந்தையில் வெற்றியைத் தந்த அடுத்த இயக்குநரை நோக்கி ஓடிப் போய் விடுவார்கள். முதல் படத்தில் சாதனை புரிந்த நல்ல இயக்குநர்கள் மாட்டிக் கொள்வது இது போன்ற சிக்கலில்தான். 

கிளாஸ் மற்றும் மாஸ் - இரட்டைக்குதிரை சவாரி

ஆனால் ஒரு சில புத்திசாலியான இயக்குநர்கள் இருக்கிறார்கள். முதல் படத்தில் அடைந்த வெற்றியின் மூலம் ஸ்டார் நடிகர்களை நெருங்க முடிந்தாலும் தங்களின் அடிப்படையான லட்சியத்தை விட்டுத்தர மாட்டார்கள். அதே கமர்ஷியல் பாணியில் தங்களின் லட்சியக்குரல்களை ஜனரஞ்சகமான கலவையில் பதிவு செய்து விடுவார்கள். அது ஸ்டார் நடிகரின் படமாக இருக்கும். அதே சமயத்தில் இயக்குநரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்து விடும். இப்படியொரு ஃபார்முலாவை பின்பற்றுவது சிரமம்தான் என்றாலும் சாதித்துக் காட்டிய இயக்குநர்களும் இருக்கிறார்கள். 

ரஜினிகாந்த், பா.இரஞ்சித், தனுஷ்

உதாரணத்திற்கு பா.இரஞ்சித்தைச் சொல்லலாம். அவரது முதல் திரைப்படமான ‘அட்டகத்தி’ எளிமையான நகைச்சுவைத் திரைப்படம். அடுத்த படமான ‘மெட்ராஸ்’-ல் முன்னணி நடிகரான கார்த்திதான் ஹீரோ என்றாலும்  தன்னுடைய அரசியலை வலிமையாக பதிவு செய்து கமர்ஷியல் வெற்றி + விமர்சகர்களின் பாராட்டு ஆகிய இரண்டையுமே பெற்றார் இரஞ்சித். இதன் மூலம் ரஜினிகாந்த்தின் கவனத்திற்கு வந்தார். 

அந்தச் சமயத்தில் சுமாரான படங்களைத் தந்து தோல்விகளைச் சந்தித்துக்  கொண்டிருந்த ரஜினிகாந்த்திற்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்டது. புதிய ரத்தமும் புத்துணர்ச்சியும் கொண்ட இளம் இயக்குநரின் கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டால் அது சாத்தியமாகும் என்று ரஜினி கணக்குப் போட்டார். திறமைசாலிகளைத் தேடிச் சென்று இணைந்து கொள்வதும் ரஜினியின் சக்ஸஸ் ஃபார்முலாவிற்கு ஒரு காரணம். இந்தக் கணக்கு சரியாக வேலை செய்தது. ‘கபாலி’ மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் இயக்குநர் முன்வைக்க விரும்பிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அதே சமயத்தில் ரஜினியின் இமேஜுக்கு உகந்த படமாகவும் இருந்தது. இந்தக் கலவையை இரஞ்சித் சரியாக அமைத்திருந்தார். 

ரஜினிகாந்த்

தனது கமர்ஷியல் வெற்றிக்காக இரஞ்சித்தை சூப்பர் ஸ்டார் பயன்படுத்திக் கொண்ட அதே வேளையில், தனது அரசியல் குரலை பதிவு செய்ய ரஜினியின் பிம்பத்தை இரஞ்சித் பயன்படுத்திக் கொண்டார். 

ஒருவேளை ஞானவேலும் இதே பாணியில் கமர்ஷியல் பாதைக்கு முற்றிலும் அடிபணிந்து விடாமல் தனது அடிப்படையான லட்சியத்தை ஸ்டார் நடிகரின் பிம்பத்தின் மூலம் பதிவு செய்திருக்கலாம். அந்த நல்லெண்ண அடிப்படையிலான எதிர்பார்ப்போடு ‘வேட்டையன்’ ட்ரெய்லரைப் பற்றி பார்க்கலாம். 

குற்றங்களுக்கான தீர்வு, வன்முறை அல்ல

‘வேட்டையன்’ படத்தின் ட்ரெய்லர், ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தின் வழக்கமான அம்சங்களைக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் ஒரு சமூகப் பிரச்னையை தீவிரமாக எதிர்கொள்ளும் தன்மையையும் கொண்டிருக்கிறது. ஆனால் இது என்கவுன்ட்டரை ஆதரிக்கும் படமாக இருக்குமோ என்கிற சந்தேகத்தையும் கூடவே எழுப்பியிருக்கிறது. 

பெண்களின் மீது பாலியல் வன்முறைகள் நிகழ்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஏதாவதொரு கொடூரமான சம்பவம் நிகழும் போது மட்டும் ஒட்டுமொத்த தேசத்தின் மனச்சாட்சியும் ஆவேசமும் விழித்துக் கொள்கிறது. கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சமீபத்திய சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. 

இதே போன்றதொரு சம்பவம் தொடர்பாக பொதுமக்களும் மாணவர்களும் போராடும் காட்சியோடு ‘வேட்டையன்’ ட்ரெய்லர் தொடங்குகிறது. குற்றவாளியை கைது செய்ய வேண்டும், குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து எழும் ஆவேசம், சமூக ஆர்வலர்களின் கேள்விகள், மீடியா ஏற்படுத்தும் பரபரப்பு போன்றவை அரசியல், காவல் மற்றும் நீதித்துறைக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எதையாவது செய்து இந்த ஆவேசத்தை தணிக்க முற்படுகிறார்கள். விளைவு என்கவுன்ட்டர் கொலைகள். 

குற்றங்களை மூடி மறைக்கும் என்கவுன்ட்டர் கொலைகள்

குற்றவாளிகள் தங்களிடமிருந்து தப்பிப்பதற்காக வன்முறையை நிகழ்த்தும் போது தற்காப்பிற்காக காவல்துறையினர் நிகழ்த்தும் எதிர்வினைதான் ‘என்கவுன்ட்டர்’. ஆனால் நிஜத்தில் இப்படித்தான் நிகழ்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்கள் நிகழ்வதற்கு பெரிதும் துணை போவதுதான் நடைமுறையில் இருக்கிறது.  இதற்குப் பின்னால் அரசியல், பெருவணிகம் என்று பல பெரிய தலைகள் இருக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத பிரமாண்ட நெட்வொர்க்காக இது இயங்குகிறது. குற்றவாளிகள் பேச ஆரம்பித்தால் அது உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும், பல பெரிய மனிதர்களுக்கும் சிக்கலாக அமையக்கூடும். இதன் எளிமையான தீர்வு ‘என்கவுன்ட்டர்’. 

ரவுடிகளின் அராஜகங்கள் பெருகும் போதும் சரி, ஒரு பெரிய குற்றம் நிகழ்ந்து அதனால் சமூகத்தில் பதட்டம் அதிகரிக்கும் போதும் சரி, முக்கியமான ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்து அந்தப் பதட்டத்தின் அளவை குறைப்பதும் நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து சென்னையில் பல முக்கியமான ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பதும் இதற்கான உதாரணச் சம்பவங்கள்தான். 

ரஜினிகாந்த்

‘தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும்’ என்பது ஒருவகையில் காட்டுமிராண்டித்தனமான கருத்து. குற்றங்களின் சதவிகிதம் கணிசமான அளவில் குறையுமாறுதான் ஒரு நல்ல சமூகம் கட்டமைக்கப்பட வேண்டும். நல்ல குடிமகன்களை உருவாக்குவதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் அடிப்படையான வேலை. கல்வி, பணிவாய்ப்பு,  மருத்துவம் உள்ளிட்ட அடிப்படையான வசதிகள் போன்றவை சிறப்பாக அமைந்திருக்கும் பிரதேசங்களில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். இதன் எதிர்முனையில் வறுமை நிறைந்திருக்கும் பிரதேசங்களில் குற்றங்களின் எண்ணிக்கை மிகுந்திருக்கும். ஒரு சிறந்த அரசாங்கத்தின் ஆதாரமான பணி என்பது இம்மாதிரியான சமநிலையை சமூகத்தில் ஏற்படுத்துவதே. 

என்கவுன்ட்டருக்கு எதிரான விவாதமாக ‘வேட்டையன்’ இருக்குமா?

வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது அடிப்படையில் அது என்கவுன்ட்டருக்கு ஆதரவான மற்றும் எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை நிகழ்த்தும் குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு ‘என்கவுன்ட்டர்’  அவசியம் என்பது போல ஹீரோவின் (ரஜினி) குரல் ஒலிக்கிறது. ‘’ஒரு அநீதியை நீதியால்தான் எதிர்கொள்ள வேண்டும். இன்னொரு அநீதியால் அல்ல’’ என்று நீதிபதியின் (அமிதாப் பச்சன்) குரல் எதிர்தரப்பில் நின்று முழங்குகிறது. இந்தக் கருத்தாக்கத்தின் மோதல்தான் ‘வேட்டையன்’ படத்தின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

வழக்கை எளிதில் முடிப்பதற்காக அப்பாவி பழங்குடியின மக்களின் மீது பழியைப் போட்டு கைது செய்து அவர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்யும் காவல்துறையின் அராஜகத்தை, ஒரு நேர்மையான வழக்கறிஞர் தீவிரமான போராட்டத்திற்குப் பின் அம்பலப்படுத்துவதுதான் ‘ஜெய்பீம்’ படத்தின் உணர்ச்சிகரமான மையமாக இருந்தது. அப்படியொரு சிறந்த படத்தை எடுத்த இயக்குநர், நிச்சயம் காவல்துறை செய்யும் படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்க மாட்டார். எனவே ‘வேட்டையன்’ படம் என்கவுன்ட்டர் கொலைகளை காட்டமாக விமர்சிக்கும் படமாக இருக்கக்கூடும். இதன் மீது நிகழும் வாதப் பிரதிவாதங்கள் படத்தின் முக்கியமான காட்சிகளாக இருக்கலாம். 

‘‘அமிதாப் பச்சன் எனது சினிமா வழிகாட்டி மற்றும் குரு. அவரது பாணியைத்தான் நடிப்பில் பின்பற்றுகிறேன்’’ என்று வெளிப்படையாக சொன்னவர் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட குருவும் சிஷ்யனும் முதன்முறையாக ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் இணைவது ‘வேட்டையன்’ படத்தின் சிறப்பு அம்சங்களில் பிரதானமானதாக இருக்கும். 

குற்றத்தை தடுப்பதற்காக சட்டத்தை கையில் எடுக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும், அதை விமர்சிக்கும் நீதிபதிக்கும் இடையலான போராட்டமாக ‘வேட்டையன்’ படம் இருக்கலாம். இந்த நோக்கில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் முக்கியமான காட்சிகள், ஸ்கிரீன் ஸ்பேஸ்  இருக்கும் என்று தெரிகிறது. 

இது தவிர ரானா டகுபதி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் என்று இந்தப் படத்தின் காஸ்ட்டிங் வரிசை வசீகரமாக இருக்கிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்குமான படமாக இதை உருவாக்கியிருக்கும் வணிக அஜெண்டா தெரிகிறது. 

இந்திய சினிமாக்களில் காவல்துறை அதிகாரிகளாக நடிக்கும் நடிகர்கள் செய்யும் மிகையான சாகசங்கள் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பையும் பரவசத்தையும் தரலாம். ஆறுச்சாமிகளும் துரைசிங்கங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையைக் கிளப்பி கல்லாவை நிரப்பலாம். ஆனால் அதில் வெளிப்படும் வன்முறைகள் கருத்தாக்க நோக்கில் சமூகத்திற்கு ஆபத்தானவை. ‘வேட்டையன்’ அந்தப் பாதையில் செல்லாமல் ஆரோக்கியமான உரையாடலை முன்வைக்கும் என்று நம்புவோம்.