மலேசியா
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா மலாய், சீனர்கள், இந்தியர்கள் நிறைந்த செழிப்பான நாடாக விளங்குகிறது. மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் கடந்த சில வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்திய நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்தார்.
Indian Rupee INR 100 = 5,28430 MYR (Malaysian Ringgit)
மலேசியா சிறந்த கடற்கரை விடுமுறை இடம். அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட மலேசியாவில் தங்கும் செலவு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் முதல் ஆகலாம். முன்பே திட்டமிட்டு கோலாலம்பூரில் ஹோட்டல் ரூம்களை புக் செய்துவிடவேண்டும்.
சீஷெல்ஸ் (Seychelles) தீவுகள்
குறைந்த பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைத் திட்டமிட விரும்பினால், சீஷெல்ஸ் தீவுகள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியப் பெருங்கடலின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஆப்பிரிக்க நாடு, அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தீவுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமானப் பகுதி. இயற்கை சூழல் விரும்பிகள், கடல் விரும்பிகளுக்கான ஸ்பாட் இது.
ஒரு குடும்பத்துக்கான பயணச்செலவு தோராயமாக INR 40,000 வரை ஆகலாம். தங்கும் செலவு நாம் தேர்வு செய்யும் ஹோட்டலை பொறுத்து ரூ.6,000 முதல் கிடைக்கும்.
சென்னையில் இருந்து சில சுற்றுலா ஏஜென்சிகள் ஒரு வாரக் கால சீஷெல்ஸ் சுற்றுலாப் பயண பேக்கேஜை வழங்குகின்றன. மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு 7 நாட்கள் சுற்றுலா பேக்கேஜ் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
வியட்நாம்
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் மலைப் பிரதேசங்கள் நிறைந்த பகுதி. அமைதியான வாழ்க்கை முறை, வண்ணமயமான சாலைகள், பாரம்பரிய உணவு என நிம்மதியாக விடுமுறையை கழிக்க சிறந்த இடம்.
Indian Rs.100 = 29775.54 Vietnamese dong
தங்கும் செலவு இங்கு மிகவும் குறைவு. 2000 ரூபாய் முதலே உயர்தர ஹோட்டல் அறைகள் கிடைக்கும். சென்னையில் இருந்து விமான டிக்கெட்டுகள் விலை 13,000 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.
வியட்நாமில் எங்கு சென்றாலும், நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த சிறந்த வழி, ஒரு சிறிய படகு சவாரியை புக் செய்வது. அங்கு படகு சவாரிகள் மிகவும் பிரசித்தி பெற்றது. உள்ளூர் சந்தை மற்றும் வனவிலங்கு பார்வையிடும் பகுதிகளும் சிறந்த தேர்வாக இருக்கும்.
பூட்டான்
'தண்டர் டிராகன்களின் நிலம்' என்று அழைக்கப்படும் பூட்டான், இயற்கை எழில் கொஞ்சும் நாடு. இயற்கைக்கு மிக நெருக்கமாக வாழும் அனுபவத்தை கொடுக்கும் பகுதிகள் இங்கு அதிகம்.
இமயமலையின் ஷாங்க்ரி லா மிகவும் பிரபலமான இடம். பூட்டானுக்கு நேரடி விமானத்தைக் கண்டறிந்து புக் செய்வதை விட பூட்டான் எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையமான பாக்டோக்ரா ( Bagdogra Airport) விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானத்தைப் பிடிக்கவும். சென்னையில் இருந்து விமான டிக்கெட்டுகள் INR 6000 முதல் கிடைக்கும். அங்கிருந்து 5 மணி நேரப் பேருந்துப் பயணத்தை மேற்கொண்டு பூட்டானை அடையலாம். பூட்டானில் இருவர் தங்குவதற்கான வசதியான ஹோட்டல் அறை 500 ரூபாய் முதல் எளிதாகக் கிடைக்கும். இந்தியா ரூபாயும் Bhutanese Ngultrum-யும் ஒரே மதிப்பில் இருக்கும் கரன்சிகள்.