பிக்பாஸ் வந்தாச்சு. இனிமேல் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ‘ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு’ என்று டேக்லைன் சொன்னார்கள். என்ன புதுசா இருக்கப் போகுது என்று நினைத்த ரசிகர்களுக்கு அறிமுக நிகழ்ச்சியிலேயே சிக்ஸர் அடித்தார் விஜய் சேதுபதி. கமலுக்கு ஈடாக மாட்டார் என்ற விமர்சனத்தை முதல் நாளே உடைத்தெறிந்தார். விஜய்சேதுபதிக்காக இனி ஒவ்வொரு சனி-ஞாயிறு ஒரு கூட்டம் டிவி முன்பு அமரும் என்பதில் சந்தேகமில்லை.
அறிமுக விழாவில், அர்னாவ் பேசும் போது ‘'பிரச்னைன்னு வந்துட்டா சண்டக்கோழி மாதிரி மோதுவேன். நாமெல்லாம் ஆம்பள... விட்டுடுவோமா? என்றதும் “அது என்ன தைரியத்துல ஆம்பள... பொம்பள'’ என்று போட்டு தாக்கினார் சேதுபதி.
''என் குரல் ஸ்வீட்டா இருக்கா'' என செளந்தரியா நம்பமுடியாமல் ஆச்சரியமாக கேட்ட போது ''நான் கிண்டல் பண்ணவே இல்ல... குரல்ல இல்லம்மா ஸ்வீட்னஸ்... குணத்துல இருக்கு'' என்று அசத்தினார்.
அதே மாதிரி, அருண் பேசும் போது ''சினிமாவுக்கு வர்றவங்க முதல்ல பணத்துக்கு ஆசைப்பட்ட மாட்டாங்க’' என்று சொன்னதற்கு ''இல்ல நான் பணம் சம்பாதிக்கணும்னு தான் சினிமாவுக்கு வந்தேன்'' என எதார்த்தமாக பேசியிருந்தார் விஜய் சேதுபதி.
''இவர் தான்யா.. நம்ம ஆளு... எல்லாருக்கும் புரியுற மாதிரி பேசுறாரு. நாம நினைக்கிறத பேசுறார்'’ என்று சேதுபதிக்கு ஸ்கோர் கார்டு கூட ஆரம்பித்துவிட்டது.
பிக்பாஸ் டீமுக்கும் இது எதிர்பார்க்காத ட்விஸ்ட் தான். விஜய்சேதுபதியால் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறப்போவது உறுதி. அறிமுக நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குள் வந்தவர்களுக்கு முதல் ஷாக் வீட்டுக்கு நடுவில் இருந்த கோடு தான். பாய்ஸ் Vs கேர்ள்ஸ் என்ற விதிப்படி தான் இந்த சீசன் 8 ஆட்டம் இருக்கப் போகிறது.
''கோட்டை போட்டாச்சு... கோட்டை விட்டுறாதீங்க'' அப்டிங்கிறது தான் பிக்பாஸ் கொடுத்த முதல் அட்வைஸ். அதோடு, முதல் நாளிலேயே ஒரு எவிக்ஷன், இரண்டு நாமினேஷன் மற்றும் தலைவர் போட்டி என ஆட்டம் அனல் பறந்தது.
முதல் நாள் காலை...
முதல் நாள் காலை ''எங்க ஏரியா உள்ள வராத'’ பாடலோடு தொடங்கியது. போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வைத்த முதல் செக் ’24 மணிநேரத்துக்குள் ஒரு எவிக்ஷன்’ என்பது தான். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த 24 மணி நேரத்தில் வெளியேறப்போவது யார் என்பது தான் முதல் பரபரப்பு. அதனால், ஒவ்வொரு போட்டியாளரும் 24 மணி நேரத்துக்குள் ஏன் நான் வெளியேறக்கூடாது என்று பேசினார்கள்.
அதில், தர்ஷா ''1 மாசத்துக்கு டிரெஸ் எடுத்துட்டு வந்திருக்கேன். அதனால், ஒரு மாசம் இருந்து நல்லா டிரெஸ்லாம் போட்டு ராம்ப் வாக் பண்ணிட்டு தான் போவேன்'’ என்று யதார்த்தமாக ஜாலியாக ஆரம்பித்தார்.
ரவீந்தர் சொன்ன காரணம் அவரின் தந்திரமான பேச்சுத் திறனை வெளிப்படுத்தியது. என் உடல்நிலையை காரணம் காட்டி என்னை யாரும் வெளியேற்ற முடியாது என்று முன்னமே தெளிவுபடுத்தி விட்டார் ரவீந்தர். தீபக், ஜெஃப்ரி, முத்துக்குமரன் சொன்னது தான் தெளிவான உண்மையான காரணங்கள்.
இப்படியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாயின்ட் சொன்னார்கள். அப்போது, 'மகாராஜா' படத்தில் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா சொல்லும் போது, ''நான் வெளியே போனாலும் ஃபீல் பண்ண மாட்டேன்'' என்று கூறினார். ''பெண்கள் அணி எடுத்த முடிவுக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்... அதனால, நான் வெளியேறலாம்னு நினைக்கிறேன்'' என்று குற்றவுணர்ச்சியையும் வெளிப்படுத்தினார் சச்சனா.
அதன்பிறகு, பிக்பாஸ் கொடுத்த முதல் டாஸ்க்: ஆண்களும் பெண்களும் அவரவர் வீட்டின் விதிமுறையை உருவாக்க வேண்டும் என்பது தான். ஏனெனில், ஆண்கள் இருக்கும் வீட்டில் தான் ஸ்டோர் ரூமும், கிச்சனும் இருக்கிறது. அதுபோல, பெண்கள் வீட்டுக்குள் தான் லிவ்விங் ஏரியாவும், கன்ஃபஷன் ரூமும் இருக்கிறது.
ஆண்கள் வைத்த விதிமுறைகள்!
ஸ்டோர் ரூமுக்கு பெண்கள் வரவேண்டுமென்றால் டாஸ்க் கொடுக்கும் உரிமை. மூன்று வேளைக்கான உணவு சமைத்தால் மட்டுமே பெண்களுக்கு உணவு கிடைக்கும். பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது ஆகியவையும் பெண்கள் தான் செய்ய வேண்டும். சம்பந்தமில்லாமல் கோட்டை தாண்டி வந்தாலோ, வேலையில் தவறு செய்தாலோ பெண்கள் அணிக்கு ஆண்கள் தண்டனை கொடுக்கும் அதிகாரம் ஆகியவை வேண்டும் என்று ஆண்கள் தரப்பின் விதிமுறையை கன்ஃபஷன் ரூமுக்குள் சென்று சொன்னார் முத்து.
பெண்கள் வைத்த விதிமுறைகள்!
கன்ஃபஷன் ரூமுக்கு வந்து ஆண்கள் வெளியே போனால், அவர்கள் கொடுத்த முதல் டாஸ்க்கை வாபஸ் வாங்க வேண்டும். கன்ஃபஷன் ரூமுக்குள்ளேயே கால் எடுத்து ஆண்கள் வைக்கக்கூடாது என்பது போல விதிமுறைகளை வகுத்திருந்தார்கள் பெண்கள் அணியினர். ஆனால், முத்துக்குமரன் பேசும் போது இருந்த கோர்வை, சாச்சனா பேசும்போது தடுமாற்றம் தெரிந்தது. 'நீங்க என்ன விதிமுறை வேணாலும் சொல்லுங்க... ஆனா, அதெல்லாம் எனக்கு பொருந்தாது. தெரியும்ல, ஏன்னா நான் தான் பிக்பாஸ்' என்ற தொனியில் கெத்து காட்டியதுடன், அடுத்த கலவரத்தை தொடங்கினர்.
பிக் பாஸ் வீட்டில் அநீதி
24 மணிநேரத்துக்குள் எவிக்ஷனுக்கு நாமினேஷன் தொடங்கியது. அதில், ஒவ்வொருவரும் தானாக வந்து சிக்கிய ஆட்டையே பழி கொடுத்து விடலாம் என்று முடிவெடுத்தார்கள். அதன்படி, வெளியே போக நான் ரெடி என்று முன்னரே சாச்சனா பேசியிருந்ததால் அவரையே டார்கெட் செய்து பெரும்பாலான போட்டியாளர்கள் பேசியிருந்தார்கள்.
பலர் சாச்சனா பெயரை நாமினேட் செய்தார்கள். ஜாக்குலின், ரவிந்தர் பெயர்களும் அதிகம் அடிபட்டது. அவர்கள் ட்ரிக்கியாக சாச்சனா பெயரை நாமினேட் செய்துவிட்டனர். எனவே அதிக வாக்குகள் அடிப்படையில் சாச்சனா வெளியேற்றப்பட்டார்.
இதற்கு நடுவே, ரஞ்சித் வழக்கம் போல என்னையே நான் நாமினேட் செய்ய முடியும்னா நாமினேட் செய்திருப்பேன் என்று ஒரு உருட்டு உருட்டிவிட்டு சாச்சனா பெயரை சொல்லிவிட்டு சென்றார். அதுபோல ரவீந்திரன் அனைவரின் மனதிலும் சாச்சனா பெயரை பதிய வைக்க செய்த ட்ரிக் தந்திரமானது.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எவிக்ட் ஆகி இருப்பது இதுவே முதல் முறை. சாச்சனாவை வேண்டுமென்றே பலர் நாமினேட் செய்தது வெளிப்படையாக தெரிந்தது. ஈசி டார்கெட் ஆகிவிட்டார். 24 மணிநேரத்தில எந்த பகுப்பாய்வும் இல்லாமல், மக்கள் தீர்ப்பும் இல்லாமல் நடந்த முதல் எலிமினேஷன் இது தான். பிக்பாஸ் விதிமுறைகளில் இல்லாத ஒன்று.
இது அநீதி என்று ரசிகர்கள் பலர் சாச்சனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். எனவே அவர் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்க வாய்ப்புகள் அதிகம். அதிக நாமினேஷனைப் பெற்ற சாச்சனா அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அர்னாவ் அழுதார். ரஞ்சித் முகத்தில் சோகம். சாச்சனா உடைந்து அழுதார்.
ஜாக்குலின் மன்னிப்பு கேட்டார். ரவீந்திரன் தன்னம்பிக்கை ஊட்டினார். ''திரும்பி வா'' என்று அனைவரும் வாழ்த்தி சாச்சனாவை வழி அனுப்பிவைத்தார்கள். மாடல் கோப்பையை உடைத்து விட்டு அதே சோகத்துடன் சாச்சனா வெளியேறினார்.
முதல் கேப்டன்
அடுத்தக்கட்டமாக கேப்டனுக்கான போட்டியை ஆரம்பித்தார் பிக் பாஸ். 'நாற்காலி... யார் காலி' டாஸ்க்கில் நிஜமாகவே பெண்களும் ஆண்களும் போட்டி போட்டனர். எதிரெதிர் திசையில் இருக்கும் நாற்காலியில் வந்து அமர வேண்டும். அமர முடியாதவர்கள் எதிரணிக்கு சுவராக நிற்கலாம். ரவீந்தர் ரியல் சுவர். ஆண்கள் அத்தனை முயற்சி செய்தும் பெண்கள் அணி வென்றது. தர்ஷிகா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் கேப்டன் ஆனார். நிஜமாகவே இது பெண்களுக்கான வெற்றி தான்.
ஒன்று முடிந்ததும் இன்னொன்றை தொடங்குவது தான் பிக்பாஸின் ஸ்பெஷாலிட்டி. கேப்டனை தேர்ந்தெடுத்ததும், இந்த வாரத்துக்கான நாமினேஷனை துவங்கிட்டார் பிக்பாஸ். இந்த நாமினேஷனில் ரவீந்திரனுக்கும் ஜாக்குலினுக்கும் அதிக வாக்குகள் குவிந்தன. அடுத்தடுத்த இடங்களில் அருண், முத்துக்குமரன் இருக்கிறார்கள்.