பிக்பாஸ் வீட்டின் நான்காவது வாரத்தின் முதல் நாள். வழக்கம்போல நாமினேஷன், கேப்டன் தேர்வு, புகுந்த வீடு, ஷாப்பிங் டாஸ்க் என சம்பிரதாயமான ஆட்டங்கள் நடைபெற்றது. அதைத்தாண்டி, பிக்பாஸ் வீட்டின் விஷ பாட்டிலாக ஒருவர் மாறியிருக்கிறார். அவர் யார்? பெண்கள் வீட்டுக்குள் மற்றுமொறு புழுக்கம் ஆரம்பித்திருக்கிறது. அது என்ன ? விரிவாகப் பார்க்கலாம். இது BB Tamil 08 Day 22
முதல் வேலையாக வீட்டின் கேப்டனை முடிவெடுத்துவிட்டார்கள். அதன்படி, கேப்டன் டாஸ்க்கான தலைவனா தலைவியா போட்டியில் ட்விஸ்டு மேல ட்விஸ்ட் எனும் கேமை விளையாடினார்கள் ஆனந்தியும் முத்துக்குமரனும். கார்டன் ஏரியாவில் பலகைகள் கீழே கிடக்கும்.
ஒரு பக்கம் தலைவன், இன்னொரு பக்கம் தலைவி என இருக்கும். யார் பெயர் அதிகமாக மேல் நோக்கி இருக்கிறதோ அவர்களே வின்னர். இந்த டாஸ்க்கில் வேகம் தான் முக்கியம். முத்துக்குமரனின் வேகத்துக்கு ஆனந்தியால் ஈடுகொடுக்க முடியவில்லை. வீட்டின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்துக்குமரன்.
கேப்டனின் சாமர்த்தியம்
கேப்டன் பதவிக்கு வருவதற்கு முன்பாக சாமர்த்தியமாக ஒரு காயை நகர்த்தினார் முத்துக்குமரன். நடப்பு கேப்டன் தர்ஷிகா இந்த வாரம் கேப்டனாக எல்லா வேலையையும் சிறப்பாக செய்தார். ஆனால், ஒரு வேலை மட்டும் மிச்சம் இருக்கிறது. அதை முடித்துவிட்டால் நன்றாக இருக்கும், அதை முடிக்காமல் விடுவதை அவரே விரும்ப மாட்டார் என்று தர்ஷிகாவை இழுத்துவிட்டார் முத்து.
அதுதான், ஆண்களை ஒரு வாரம் மட்டும் நாமினேஷன் செய்ய மாட்டோம் என்று வீட்டுக்கு வந்த போது ஆண்களுக்கு பெண்கள் கொடுத்த வாக்குறுதி. தர்ஷிகாவின் பதில், ‘வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு நான் சொல்ல வரும் அட்வைஸ் இதுதான். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறினார்.
உடனடியாக, முத்துக்குமரன், ‘ உங்க மனசுக்கு துரோகம் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இது கட்டாயமில்லை. ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் விடுவதும் உங்கள் கையில்’ என்று சூசகமாக பேசினார் முத்து. அதன்பிறகு கேப்டன் பொறுப்புக்கு வந்தார் மிஸ்டர் MK.
கேட்பன் ஆனதும் மூன்று விஷயங்களை முன்னெடுத்தார் முத்து. தீபாவளி வாரம் என்பதால் வீட்டினை சுத்தம் செய்வது. அனைவருமே காலையில் கார்டனில் சேர்ந்து டான்ஸ் ஆடுவது, தினமும் இரவு உணவை மட்டும் இரு வீட்டினரும் கார்டனில் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து சாப்பிடுவது. இப்படி அனைவரையும் ஒன்றிணைத்து சில வேலைகளை செய்யலாம் என்பதை கடந்த மூன்று வாரத்தில் யாரும் முன்னெடுக்காத விஷயம். அதை செய்ய விரும்பிய முத்துவுக்கு பாராட்டுகள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரிய பிரச்னை உணவுப் பற்றாக்குறை தான். அதை சரி செய்யும் நடவடிக்கையாக முத்து மூன் லைட் டின்னர் என்னும் செயலை முன்னெடுத்திருப்பது நல்ல விஷயம்.
புகுந்த வீடு யாருக்கு லாபம் :
இந்த வாரத்துக்கான SWAP யார் என்று பெண்களும் ஆண்களும் முடிவெடுத்தனர். விஷாலும், செளந்தர்யாவும் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் சென்றனர். செளந்தர்யாவினால் ஆண்கள் டீமுக்கு எந்த பயனுமில்லை. ஏனெனில், பெண்கள் வீட்டிலேயே டீமுடன் ஒத்துப் போகவில்லை. சரியாக கேம் விளையாடவில்லை என்று அவரை கட்டம் கட்டியது பெண்கள் தான். அதனால், ஆண்கள் டீமிலும் அவரால் எந்த பயனும் இருக்காது.
செளந்தர்யா ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதி. அது முதல் நாளிலேயே வெளிப்பட்டது.
பெண்கள் வீட்டுக்குச் செல்லும் ஆண்களால் எப்போதுமே ஒரு பயன் இருந்திருக்கிறது. முத்துக்குமரன், தீபக், ஜெப்ரி என சென்றவர்கள் அனைவருமே அந்த டீமுக்காக சிறப்பாக விளையாடிக் கொடுத்தனர். அவர்களால் பெண்கள் டீம் டாஸ்குகளில் ஜெயித்ததை பார்க்கலாம். அப்படி, விஷாலும் திறமையாக விளையாடக்கூடியவர் தான். ஆக, இந்த வாரம் பெண்கள் டீமுக்கு லாபம் வரும். ஆண்கள் டீமுக்கு லத்தி வரும்.
வெடித்த குரூப்பிஸம் சர்ச்சை
பெண்கள் டீமில் குரூப்பிஸம் இருப்பதாக தன்னுடைய புகாரை ஒவ்வொரு நேரமும் வைக்க சாச்சனா தவறவில்லை. அந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் வீட்டுக்குள் விவாதமாக மாறியது. தர்ஷாவுக்காவும், செளந்தர்யாவுக்காகவும் ஃபேவரிசம் செய்வதாக ஆனந்தி குறை கூறினார். குருப்பிஸம் செய்யும் ஆறு நபர்கள் யாரு? என்று கேள்வி உருவானது. அந்த நேரத்தில் நுழைந்த சுனிதா, சாச்சனாவை கட்டம் கட்டினார். ‘மேக்கப் போடுறேன்னு எப்படி சொல்லலாம். என் உரிமை அது. அதை எப்படி குறையாக சொல்லலாம்?’ என்று செளந்தர்யா சொன்ன புகாருக்கு சாச்சனாவிடம் சண்டைக்குச் சென்றார்.
சாச்சனாவுக்கு ஆதரவாக ஜாக்குலின் குரல் வந்தது. ‘சுனிதாவுக்காக அன்ஷிதா வேலை செய்யுறாங்க. அது தப்பில்லையா?’ என்று ஜாக்குலின் அன்ஷிதாவை இழுத்துவிட்டார்.
தர்ஷா இல்லையென்றாலும் அவர் செய்து விட்டுச் சென்ற சம்பவம் இன்னும் வெடித்துக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. சுனிதாவும் அன்ஷிதாவும் ஒரு டீம். தர்ஷிகாவும் பவித்ராவும் ஒரு டீம்.
செளந்தர்யாவும், சாச்சனாவும் ஒரு டீம். ஜாக்குலின் நேரத்துக்கு ஏற்ப ஒரு டீமுக்குள் பார்க்கலாம் என்பதே பெண்கள் டீமில் இருக்கும் பிளவு அரசியல். இப்போது சாச்சனாவுடன் ஜாக்குலின் ஜோடி சேர்வதால் சுனிதாவையும் அன்ஷிதாவையும் கொம்பு சீவி விடும் வேலையை ஆனந்தி செய்கிறார். அதை பார்க்கும் போது, இந்த பிக்பாஸ் சீசனின் விஷ பாட்டிலாக ஆனந்தி மாறுகிறாரோ என்று தோன்றுகிறது.
நாமினேஷன் :
இந்த வார நாமினேஷனில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டது. பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் நாமினேட் செய்ய வேண்டும். புகுந்த வீடு சென்ற சலுகையாக அன்ஷிதாவை ஜெஃப்ரியும், தீபக்கை சாச்சனாவும் நேரடி நாமினேட் செய்தனர். அதோடு, 5 ஓட்டுடன் அருண், 4 ஓட்டுடன் ஜாக்குலின் , சத்யா 3 ஓட்டுடன் ரஞ்சித், 2 ஓட்டுகளுடன் சுனிதா, ஜெப்ரி, பவித்ரா ஆகியோர் நாமினேட் ஆனார்கள்.
ஆண்கள் வீட்டுக்கு சமைக்க, தண்ணீர் குடிக்க, பாத்திரம் கழுவ வரும் பெண்களுக்கு வினோத டாஸ்குகளைக் கொடுக்க வேண்டுமென்ற முடிவில் இருக்கிறார் செளந்தர்யா. அப்படியாவது அவர்களை பழி தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். முதல் டார்கெட்டாக, ஜாக்குலினை ஆண்கள் வீட்டுக்குள் சேரில் அமர்ந்து கொண்டே வர வேண்டுமென்று டாஸ்க் ஐடியா கொடுக்கிறார். பெண்களே.. இன்னைக்கு ஜாலி.. நாளைக்கு நீங்க காலி என்ற மோடில் தான் இருக்கிறார் செளந்தர்யா..
ஷாப்பிங் டாஸ்க்:
நிதானத்தையும், பொறுமையையும் பரிசோதிக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. பெண்கள் டீமிலிருந்து தர்ஷிகா, அன்ஷிதா, பவித்ரா விளையாடினர். அதுபோல, ஆண்கள் டீமிலிருந்து ஜெஃப்ரி, அருண், சத்யா ஆடினர். பெண்கள் மொத்தமாக 6200 ரூபாயும், ஆண்கள் 8400 ரூபாயும் விளையாடி வென்றனர். பொதுவாக, இந்த டாஸ்கில் ஆண்கள் அதிக பணத்தை சம்பாதிப்பார்கள். இருந்தாலும் குறைவாக செலவு செய்வது அல்லது அதிகமாக செலவு செய்வது வழக்கம். இந்த முறை சரியாக செலவு செய்தார்கள்.
ஷாப்பிங் செய்வதற்காக தீபக்கும், முத்துக்குமரனும் சென்றார்கள். பெண்கள் டீமுக்காக விஷாலும் ஜாக்குலினும் சென்றனர். சென்ற முதல் நாளே விஷாலை நம்பி களமிறக்கியது பெண்கள் டீம். இரண்டு வாரம் ஷாப்பிங் டாஸ்கிற்கு சென்ற அனுபவத்தினால் , பெண்களுக்காக தரமாக ஷாப்பிங் செய்து கொடுத்தார் விஷால். அதிரசம், மைசூர்பாகு என தீபாவளி ஸ்பெஷல் பர்சேஸூம் செய்தார்கள்.
ஆனால், ஜாக்குலின் ஒரு சம்பவத்தை செய்தார். ஷாப்பிங் செய்த போது இருந்த எல்லா தக்காளியையும் ஜாக்குலின் தூக்கிவிட்டார். அதனால், ஆண்கள் டீமுக்கு ஒரு பாக்கெட் தக்காளி மட்டுமே கிடைத்தது. இதை வைத்து தான் இந்த வாரத்தை ஓட்டியாக வேண்டும். அதனால் கடுப்பாகி ஜாக்குலினை திட்டினார் தீபக். வேணும்னா ஒண்ணு கொடுத்துடுறோம்னா என்று ஜாக்குலின் சொல்ல.. லைனில் வந்துவிட்டார் பிக்பாஸ். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது.. ப்ளான் செய்து தக்காளியை தூக்கிட்டீங்க ஜாக்குலின்’ என்று அவர் பங்கிற்கு பிட்டினை போட்டு விட்டுச் சென்றார் பிக்பாஸ்.. இந்த பிட்டு போதுமா ஐய்யாச்சாமி என்றே இருந்தது.
இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக பல கொண்டாட்டங்களை பிக்பாஸ் வீட்டுக்குள் எதிர்பார்க்கலாம். அதோடு, வார டாஸ்க், டெய்லி டாஸ்க்குகள் அடுத்தடுத்து இருக்கிறது. செளந்தர்யா ஆண்கள் டீமை என்ன செய்யப் போகிறார், இந்த வார முத்துவின் கேப்டன்சி எப்படி இருக்கப் போகிறது, ஆனந்தியின் கேம் பிளான் என்ன, ஆண்களா பெண்களா யார் பக்கம் காற்று வீசப்போகிறது பொருத்திருந்துப் பார்க்கலாம்.