பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று வெற்றிகரமாக தொடங்கியது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்பதால் விஜய் சேதுபதி மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. ஆனால் சேதுபதி முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
முதலில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற தயாரிப்பாளர் ரவீந்தரிடம் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ''எத்தன வருஷமா பிக் பாஸ் ரிவ்யூ பண்றீங்க, நல்ல வருமானம் போல” என்று முகத்துக்கு நேராக கேட்டார். இது யாரும் எதிர்பாராதது.
நடிகர் ரஞ்சித்தையும் நேரடியாகவே பேசினார் சேதுபதி. ரஞ்சித் மேடைக்கு வந்ததும்,''நான் சின்ன வயசுல இருந்து உங்க படம் பார்த்திருக்கேன். அப்ப உங்கள பத்தி ரொம்ப அன்பானவர், பாசமானவர்னு ஒரு அபிமானம் இருந்துச்சு. ஆனா நீங்க இப்ப எடுத்த படமும் (கவுண்டம்பாளையம்) , அதற்கு நீங்க கொடுத்த பேட்டிகளும் உங்கள வேற மனிதரா காட்டுச்சு. அது உண்மை? முன்னாடி இருந்த பாசமான ரஞ்சித்தா இல்ல இப்ப இருக்க ரஞ்சித்தா?” என்று கேட்டார்.
ரஞ்சித் முகமே சுருங்கி விட்டதே. ஒரு கட்டத்தில் அந்த படம் எடுத்தது தப்புன்னு உணர்ந்துட்டேன் என்பது போல பதில் சொன்னார் ரஞ்சித்.
ரஞ்சித் இயக்கி, நடித்த படம் 'கவுண்டம்பாளையம்'. இதில் கலப்பு திருமணங்களை கொச்சைப்படுத்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதை பற்றி கேள்வி கேட்ட ஊடகங்களிடம், ஆணவக் கொலைகளை ஆதரிக்கும் கருத்துகளை சொல்லி ரஞ்சித் சர்ச்சையில் சிக்கினார். விஜய் சேதுபதி முதல் நாளே ரஞ்சித்தை நிற்க வைத்து கேள்வி கேட்டது மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
மேலும் ரஞ்சித் கோயம்புத்தூரில் இருந்து தன் நண்பர்கள் வந்திருப்பதாக அறிமுகப்படுத்தினார். விஜய் சேதுபதி அவர்களை பார்த்து வணக்கம் என்று சொன்னதற்கு, ரஞ்சித்தின் நண்பர், ``நல்லாருக்கீங்களா, சாப்டீங்களா” என்று கேட்டுவிட்டு, கோவைல எல்லாரும் அப்படி தான் கேட்போம் என்று ஊர் பெருமை பேசினார்.
அதற்கு விஜய்சேதுபதி, ''எங்க ஊர்லையும் அப்படி தான் சார் கேட்பாங்க, இதில் என்ன ஊர் பெருமை? எங்க ஊர்ல மட்டும் என்ன வர்றவங்கள வராதீங்கன்னா சொல்வாங்க. எல்லா ஊர்லயும் விருந்தோம்பல் இப்படி தன் பண்ணுவாங்க” என்று மூக்குடைத்துவிட்டார்.
முதல் நாளே ஊர் பெருமை, சாதி பெருமை போன்ற விஷயங்களுக்கு எதிராக ஆழமாக தன் குரலை பதிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி.