விஜய் சேதுபதி - கமல்ஹாசன் 
டிவி

விஜய் சேதுபதி எக்ஸ்போஸ் செய்யப்போவது பிக் பாஸ் போட்டியாளர்களையா அல்லது தன்னையேவா?

ஒரு பிரபலத்தை ஏன் நமக்குப் பிடித்துப் போகிறது அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு அந்தப் பிரபலத்தின் புறத்தோற்றம், நிறம், பிரதேசம், இனம் போன்ற பல காரணங்கள் உண்டு. இன்னும் சற்று ஆழமாகப் போனால் சாதியும், மதமும் கூட உள்ளே வந்து விடும்.

Suresh Kannan

அக்டோபர் 6-ம் தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆரம்பமாக இருக்கிறது. போட்டியாளர்கள் யார் என்கிற ஆவலையும் தாண்டி, இந்த சீசனின் புதிய அட்ராக்ஷன் அதன் தொகுப்பாளர்தான். ஆம், இதுவரை கமல் அமர்ந்திருந்த நாற்காலியில் விஜய் சேதுபதி அமரவிருக்கிறார். எனவே அது குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் எகிறியிருக்கிறது.

இதுவரையான சீசன்களில் கமல் என்னவெல்லாம் செய்தார் என்பது நமக்குத் தெரியும். அவரைத் தவிர்த்து இந்த நிகழ்ச்சியை யோசிக்க முடியுமா என்கிற அளவிற்கு கமல் திறம்பட கையாண்டார்.  நிகழ்ச்சியை சுவாரசியமாகவும் புத்திசாலித்தனமாகவும் அறிவுப்பூர்வமாகவும் நடத்தினார். 

பிக்பாஸ் என்பதை  வெறுமனே பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக, வம்பு பேசும் வாய்ப்பாக மாற்றி விடாமல் ஆரோக்கியமான விஷயங்களையும் உறுத்தாமல் உள்ளே புகுத்தினார் கமல்ஹாசன். புத்தகப் பரிந்துரை, திரை அனுபவங்கள், வாழ்வியல் அறிவுரைகள்,  குறும்பான தமிழ் வார்த்தைகளில் பன்ச் வசனங்கள், சான்றோர் அறிமுகம் என்று இந்த நிகழ்ச்சியை எவ்வளவு சுவாரசியப்படுத்த முடியுமா அத்தனையையும் கமல் செய்தார்.  

தனக்கான மேடையாக பிக் பாஸை உபயோகப்படுத்திக் கொண்டதோடு பார்வையாளர்களை அறிவு சார்ந்து வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியின் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொண்டார்.  கமலுக்காகவே வீக்கெண்ட் எபிசோடுகளை தவறாமல் பார்த்தவர்கள் ஏராளம். சமயங்களில் அவர் எடுத்த அல்லது எடுக்க வைக்கப்பட்ட முடிவுகளின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் தன் தரப்பிலிருந்து அவற்றிற்கான விளக்கங்களை நழுவாமல் முன்வைத்தார். 

இப்படியொரு சென்சிட்டிவ்வான ரியாலிட்டி ஷோவை பெரும்பாலான பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளுமளவிற்கு கையாள்வது மிகப் பெரிய சவால். அந்தப் பொறுப்பை கமல் பெரும்பாலும் நிறைவாகவே நிறைவேற்றினார்.  இப்போது அந்த  வெற்றிடத்தை நிரப்புபவர் இந்தச் சவாலை திறம்பட நிகழ்த்துபவராக அமைய வேண்டும். விஜய்சேதுபதி இதற்கு தாக்குப் பிடிப்பாரா?

விஜய் சேதுபதி - கமல்ஹாசன்

விசேவிற்கு குவியும் இலவச அட்வைஸ்கள்

விஜய்சேதுபதி இப்படியெல்லாம் செய்ய வேண்டும்… இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்கிற அறிவுரைகளும்.. ஆலோசனைகளும்.. எதிர்பார்ப்புகளும் இந்நேரம் கணிசமாக குவிந்திருக்கும். உண்மையில்  எட்டாவது சீசனின் டீஸரே இதையொட்டித்தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  காய்கறிக்கடைக்காரர் முதல் கட்டிங் போடுபவர் வரை பலரும் ‘இங்க பாருங்க சேது..’ என்று தரும் அட்வைஸ்கள் குறும்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மக்களின் எதிர்பார்ப்பை இந்த டீஸர் ஜாலியாக கலாய்த்திருந்தது. இன்னொரு வகையில் வழிமொழிந்திருந்தது. 

ஓகே.. இந்தக் கட்டுரையில் நாமும் அதைத்தான் செய்யப் போகிறோம்… கமலுக்கு மாற்றாக வரப்போகும் விசே என்னவெல்லாம் செய்வார் என்கிற யூகங்கள், என்னவெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் போன்றவற்றை நாமும் ஆலோசனைகளாக அள்ளிக் கொட்டுவோம். அபத்தம்தான். இருந்தாலும் செய்து வைப்போம்.


கமல்ஹாசனுக்கும் விஜய் சேதுபதிக்கும் அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இருவருமே தங்களின் நடிப்புத் திறனை நிரூபித்தவர்கள்.  கமலுடைய மிகப் பெரிய டிராக் ரெகார்டு முன்னால் விசேவை ஒப்பிடுவது நியாயமல்ல என்றாலும் திருநங்கை, முதியவர், சுமார் மூஞ்சி குமாரு, காமெடி ரவுடி என்று பல வெரைட்டியான பாத்திரங்களை ஏற்க விசே தயங்கியதில்லை.  இந்த விஷயத்தில் கமலும் விசேவும் தங்களின் இமேஜ் பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள். வித்தியாசமான வேடங்களுக்கு முக்கியத்துவம் தந்தவர்கள். 

கமல் மாதிரி புரியாத மாதிரியே பேசாத”

ஒருவகையில் இருவருமே சிறந்த பேச்சாளர்கள்.  இருவருமே மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் பேசக்கூடியவர்கள். ஆனால் அடிப்படையான வித்தியாசம் என்னவென்றால் ‘பேசறதே புரியலைங்க’ என்கிற மாதிரி கமல் தூய்மையான தமிழில் அறிவுஜீவித்தனமாக சமயங்களில் உரையாடுவார்.  அதை ஜீரணிக்க முடியாமல் பலர் தடுமாறி ஒவ்வாமை அடைந்து விலகி வெறுப்பைக் காட்டுவார்கள். ஆனால் விசே இதற்கு நேர்மாறானவர். சினிமாவில் நடிப்பதைப் போலவே  மேடைப் பேச்சிலும் மிக இயல்பான மொழியைக் கையாள்பவர். வெற்றான சம்பிதாயங்களை ஓரமாக வைத்து விட்டு பாசாங்கில்லாத இயல்பான மொழியில் பேசுவதாலேயே விசே பலரைக் கவர்ந்திருக்கிறார். நேர்காணல்களின் போது சிக்கலான கேள்விகளுக்கு நழுவி விடாமல் வெளிப்படையாகவும் யோசித்து தத்துவார்த்தமாகவும் பேசுவதால் விசேவை நிறையப் பேருக்கு பிடிக்கிறது. 

ஒரு பிரபலத்தை ஏன் நமக்குப் பிடித்துப் போகிறது அல்லது பிடிக்கவில்லை என்பதற்கு அந்தப் பிரபலத்தின் புறத்தோற்றம், நிறம், பிரதேசம், இனம்  போன்ற பல காரணங்கள் உண்டு.  இன்னும் சற்று ஆழமாகப் போனால் சாதியும், மதமும் கூட உள்ளே வந்து விடும். சிறந்த நடிகர் என்பதால் கமலை பலர் விரும்பினாலும் அவருடைய  எலீட்தனமான தோற்றம், புரியாத மொழியில் நிகழும் அறிவுஜீவித்தனமான பேச்சு போன்ற காரணங்களுக்காகவே விலகலாக நிற்கிறவர்கள் பலர் உண்டு.  (இந்த ஏரியாவில்தான் ரஜினி ஸ்கோர் செய்கிறார்).  

விஜய் சேதுபதி

விசே இதன் எதிர்முனையில் இருக்கிறார். நிறம், இயல்பான பேச்சு, யதார்த்தமான அணுகுமுறை போன்ற காரணங்களால் ‘நம்மாளுடா இவன்!’ என்கிற தோழமையை உணர வைத்து  இளைய தலைமுறையையும்  கவர்கிற பிரபலமாக இருக்கிறார்.  ஆனால்  கமல், விசே என்று இருவருக்குமே ரசிகைகள் அதிகம் என்பது ஒரு தற்செயல் ஒற்றுமை. 

இப்படியாக சில அடிப்படையான ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் கமல் மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையே இருக்கிற நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விசே எப்படி நடத்தினால் நன்றாக இருக்கும்?

அதிரடியான முடிவுகளை அசால்ட்டாக எடுப்பாரா விசே?

ஏற்கெனவே பார்த்தபடி, கமலுக்கு பல ப்ளஸ் பாயின்ட்டுகள் இருந்தாலும் புரியாத தொனியில் அறிவுஜீவித்தனமாக பேசி குழப்புகிறார் என்கிற பொதுவான புகார் உண்டு. ஒரு விஷயம் புரியவில்லையென்றால் நாம்தான் அதைத் தேடிப் புரிந்து கொள்ள சற்று மெனக்கெட வேண்டும். பழந்தமிழில் உள்ள ஒரு பாடல் புரியவில்லையென்றால் நாம்தான் அதைப் புரிந்து கொள்ள பொழிப்புரையைத் தேடிப் போக வேண்டும். அறிவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மாறாக எழுதியவரை குறை சொல்லல் முதிர்ச்சியின்மை. அந்த வகையில் கமல் உபயோகிக்கும் தூய தமிழின் பொருளை நாம்தான் தேடி அறிய சற்றாவது முயற்சிக்க வேண்டும். மொழியின் பயன்பாடே ஏறத்தாழ அருகிக் கொண்டிருக்கும் போது நல்ல தமிழ் பேசுகிறவர்களை கிண்டலடிப்பதும் வெறுப்பதும் ஒருவகையான அறியாமையே. 

என்றாலும் பொதுமக்களிடம் உரையாடுபவர் அதற்கான இணக்கமான மொழியைக் கடைப்பிடித்தல், மக்களைக் கவரும் வகையில் பேசுவதேன்பது ஒரு அடிப்படையான விஷயம். விசே இந்த விஷயத்தில் கில்லியாக இருப்பார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். 

கமலுடைய இன்னொரு மைனஸ் பாயின்ட்டாக சொல்லப்படுவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கறாராக முடிவெடுத்து பட்டென்று சொல்ல வேண்டியதையெல்லாம்  வழவழ கொழகொழவென்று பட்டும் படாமல் சொல்லி கடந்து விடுகிறார் என்பது. இந்தப் புகாரும் முகாந்திரமற்றதுதான். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட விசாரணையில் கூட வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு தீர விசாரித்து ஆராய்ந்து பிறகு சமநிலையுடன்தான் தீர்ப்பு தருகிறார்கள். இந்த நிதானமும் சமநிலையுணர்வும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும் அவசியம் தேவை. ‘டேய்.. குத்துடா அவனை’ என்று மசாலா திரைப்படம் போல கத்தி, பார்வையாளர்களின் உணர்ச்சிகளுக்கு மேலதிகமாக தீனி போடுவது போல் நடப்பது முதிர்ச்சியின்மை மட்டுமல்ல, ஆபத்தும் கூட. 

கமல்ஹாசன்

கமலின் விசாரணையில் நிதானம் இருக்கும். அதே சமயத்தில் ஒருவரின் தவறை குண்டூசிக்குத்தல்களால் நறுக்கென்று சொல்லி விடுவார். ஒருவர் தாம் செய்த தவறை அவராகவே உணர வைக்கும் வகையில் செய்வதுதான் ஒரு நல்ல ஆலோசகரின் அணுகுமுறையாக இருக்க முடியும். இருக்க வேண்டும். கமலிடம் இது இருந்தது.  இதே அணுகுமுறையை விசேவிடம் எதிர்பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் பத்திரிகையாளர்கள் கோக்குமாக்காக கேட்கும் சில கேள்விகளுக்கு டென்ஷன் ஆகாமல் சமயோசித நகைச்சுவையுடன் பதில் சொல்லும் நிதானம் விசேவிற்கு இருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பார்வையாளர்களின் ஆவேசத்திற்கு தீனி போடும் வகையில் அல்லாமல் சமநிலையுடன் முடிவுகளை அவர் எடுக்கக்கூடும்.

நிதானமும் தத்துவத் தேடலும் கொண்ட விசே

புத்தகப் பரிந்துரை என்பது கமலின் ப்ளஸ் பாயின்ட்களில் ஒன்று. “நான் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட்.. பெரிசா படிக்கலை’ என்று தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்வது விசேவின் வழக்கம். படிப்பிற்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் சரி, சில விஷயங்களைப் பேசும் போது விசேவின் முதிர்ச்சியும் தத்துவார்த்தமான தேடலும் நன்றாகத் தெரிகிறது. எனவே இந்த நோக்கில் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் மனதைத் தொடுவது போன்ற உரைகளை அவர் ஆற்றக்கூடும். இதனுடன் சேர்ந்து புத்தகங்களையும் பரிந்துரை செய்தால் நல்லதுதான். 

ஒரு ஷோவுக்கு ஹோஸ்ட் ஆக இருப்பது விஜய்சேதுபதிக்கு புதிதான விஷயமில்லை. ‘நம்ம ஊரு ஹீரோ’, ‘மாஸ்டர் செஃப்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த முன்அனுபவம் உண்டு. போட்டியாளர்களிடம் நகைச்சுவையாகப் பேசியும் கண்ணியம் குறையாமல் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பண்பும் அவருக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. 

பிக் பாஸ் கமலின் இடத்தை நிரப்புவதென்பது பெரிய சவால் என்றாலும் விஜய்சேதுபதி தனக்கேயுரிய பாணியில் இதை வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று நம்புவோமாக!