ஸ்பில்பேர்கின் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’டும், ஷங்கரின் ‘இந்தியன்’ வாக்குமூலமும்! சுரேஷ் கண்ணன் தொடர் - 2
பிரம்மாண்ட திரைப்படங்களின் இயக்குநர் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்டாலும் ஷங்கர் இயக்க விரும்பிய முதல் திரைப்படம் என்பது சிறிய பட்ஜெட் படம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பாரதிராஜா இயக்கிய ’பதினாறு வயதினிலே’ மாதிரி கிராமத்துப் பின்னணியில் அமைந்த ‘அழகிய குயிலே’ என்கிற எளிமையான படத்தைத்தான் ஷங்கர் இயக்க விரும்பினார். ஒருவேளை அது சாத்தியமாகியிருந்தால் ஷங்கரின் பயணம் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம்.
‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற ஹை-பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி, பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தந்திருந்தாலும் தனது முதல் படத்தின் எளிமையான கனவு ஷங்கரிடமிருந்து அகலவில்லை. அகல் விளக்கின் வெளிச்சம் மாதிரி அதைப் பொத்தி பத்திரமாக வைத்திருந்தார்.
ஷங்கர் இயக்க விரும்பிய லோ-பட்ஜெட் திரைப்படம்
ஒரு கட்டத்தில் 'அழகிய குயிலே’ படத்தை இயக்க முடிவு செய்து எழுத்தாளர் சுஜாதாவிடம் அது குறித்து ஆலோசனை கேட்ட போது “அந்த மாதிரியான படங்களை இயக்குவதற்கு நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை மிக அரிதானது. இப்படிப்பட்ட பெரிய பிராஜக்ட்டுக்களை வெற்றியடைய வைப்பதுதான் சவாலான விஷயம்” என்கிற மாதிரியான ஆலோசனையை சுஜாதா சொல்ல தன்னுடைய கனவுப்படத்தை மீண்டும் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டார் ஷங்கர்.
சுஜாதா சொன்னது அராஜகமான ஆலோசனையாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால் அதுதான் சிறந்த யோசனை. வணிகத்தையே பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஹை-பட்ஜெட் படங்களை நானும் கூட ஒரு காலத்தில் திட்டித் தீர்த்திருக்கிறேன். அவைதான் சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் உருவாவதற்கு தடையாக இருக்கின்றன என்று நினைத்திருக்கிறேன். ஆனால் அது தவறான அபிப்பராயம்.
ஒரு காடு வளமாக இருப்பதன் அடையாளம் என்பது அங்கு வாழும் புலி வளமாக இருப்பதுதான். எனில் அங்கு நிறைய மான்கள் வாழ்கின்றன என்று பொருள். எனில் அங்கு நிறைய பசுமையான புற்கள் இருக்கின்றன என்று அர்த்தம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்த வனம் மிகுந்த வளத்துடன் இருக்கிறது என்பதற்கு புலிதான் ஒருவகையான சிறந்த குறியீடு. இதையே தமிழ் சினிமாவிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
புறக்கணிக்கப்படும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள்
ஒரு துறையின் வணிகம் வளமாக நிகழ்ந்து கொண்டே இருந்தால்தான் அது தொடர்ச்சியாக இயங்க முடியும். ஒரு ஹை பட்ஜெட் படத்தின் மூலம் நிறைய சினிமா தொழிலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வாய்ப்பும் சம்பளமும் கிடைக்கிறது. அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. அப்படித்தான் சினிமா என்னும் துறை தொடர்ந்து சுவாசிக்க முடியும். உயிர் வாழ முடியும். இந்தத் துறையை நம்பியே எத்தனையோ பேரின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.
எனில் தரமான முறையில் எடுக்கப்படும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் தேவையில்லையா? நிச்சயம் அதுவும் தேவை. ஹைபட்ஜெட் படங்களும் லோ-பட்ஜெட் படங்களும் இணைக்கோடாக தொடர்ந்து பயணிக்க வேண்டும். இரண்டுக்குமே ரசிகர்களின் ஆதரவு வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக இங்கு ஹைபட்ஜெட் படங்கள் கவனிக்கப்படுவதைப் போல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்படுவதில்லை. ஆதரவு கிடைப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சிறுமுதலீட்டுத் திரைப்படம், மிகச் சிறந்ததாக அமைந்து, விருதுகள் பெற்று, பரவலாக கவனிக்கப்பட்டால் மட்டுமே ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறது. ஒரு சிறிய திரைப்படம் தரமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தால் கூட ரசிகர்களின் ஆதரவின்றி, விளம்பரத்தின் பலமின்றி சொற்ப நாட்களிலேயே அரங்கை விட்டு மறைந்து விடும் பரிதாபங்கள் நிறைய நடந்திருக்கின்றன.
பெரிய பட்ஜெட் படம்தான் வெற்றியின் அளவுகோலா?
ஹைபட்ஜெட்டில் உருவாக்கப்படும் அத்தனை திரைப்படங்களுமே சிறந்தவையா? இல்லை. வெறும் நுட்பங்களின் மாயத்தால், ஆடம்பரமான விளம்பரங்களின் துணையால் மட்டுமே ஒரு ஹைபட்ஜெட் படத்தை ஓட வைக்க முடியாது. தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அத்தனை முட்டாள்கள் அல்ல. அதன் திரைக்கதை உள்ளிட்டு பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இல்லையென்றால், அது எத்தனை பெரிய திரைப்படமாக இருந்தாலும் தூக்கியெறியத் தயங்க மாட்டார்கள். ‘இந்தியன் -2’ விற்கு நிகழ்ந்த கொடூரமான விபத்தும் இதுவே. ‘இந்தியன்’ முதல் பாகத்தை ஆரவாரமாக வரவேற்று இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே ரசிகர்கள்தான், ‘இந்தியன் 2’-வை கருணையே இன்றி புறக்கணித்திருக்கிறார்கள் என்பதிலிருந்து திரைக்கதைதான் எப்போதும் ராஜா என்கிற எளிய உண்மை மீண்டும் மீண்டும் புலனாகிறது.
இந்த அடிப்படையான உண்மையை நிதர்சனமாக உணர்ந்தவர் ஷங்கர். முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட், ஃபாரின் லொக்கேஷன், ஹைடெக் தொழில்நுட்பம், ஆடம்பரமான மார்க்கெட்டிங் மூலம் ஒரு திரைப்படத்தை ஓட வைத்து விட முடியாது என்கிற யதார்த்தத்தை அறிந்தவர். எனவேதான் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் அத்தனை பெரிய உழைப்பு இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ஃபிரேமையும் உருவாக்குவதற்கு தனது உச்சபட்சமான மெனக்கெடலைத் தருவார். தான் உருவாக்கிய கலைஞர்களின் கூட்டணியிடமிருந்து மிகச்சிறந்த உழைப்பை வாங்கி ஒருங்கிணைப்பார். முதல் படத்திலேயே ஹிட் தந்து பிரபலமாகி விட்ட ரஹ்மான், ஷங்கருடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்த காலகட்டத்தில் ‘ஷங்கரிடம் ஒரு டியூனிற்கான ஒப்புதலை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அப்படிப் பிழிந்து எடுக்கிறார்” என்று தன் தாயிடம் சொல்லி புலம்பியதாக ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது.
ஷங்கரின் மூலம் வெளியான நல்ல திரைப்படங்கள்
ஹைடெக் மேக்கிங் படமாக இருந்தாலும் கூட அதே சமயத்தில் அது எளிய மக்களுக்கும் புரிய வேண்டும், கவர வேண்டும் என்பதற்காக ஷங்கர் மிகவும் சிரத்தை எடுப்பார். மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி இருக்கிறது என்கிற காரணத்தினாலேயே ஒரு திரைப்படம் வெற்றியடைந்து விடும் என்கிற அலட்சியம் அவரிடம் இருக்காது. அவரது பெரும்பாலான திரைப்படங்கள் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்ததற்கான காரணம் இதுவே.
சிறிய பட்ஜெட்டில் அமைந்த தனது கனவுப்படத்தை ஷங்கரால் உருவாக்க முடியவில்லை என்றாலும் முன்னணி இயக்குநராகி நன்றாக சம்பாதிக்கத் துவங்கிய பிறகு தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் பல நல்ல சிறுமுதலீட்டுத் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார். அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களை இயக்குநர்களாக அமர்த்தி ஆதரித்தார். இதன் மூலம் நிறைவேறாத தன்னுடைய கனவை மற்றவர்களின் மூலம் நிறைவேற்றி அழகு பார்த்தார். ‘காதல்’, ‘இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’, ‘வெயில்’, ‘கல்லூரி’ போன்ற சிறந்த திரைப்படங்கள் வெளிவருவதற்கு ஷங்கரின் தயாரிப்பு நிறுவனம் காரணமாக அமைந்தது. இதன் மூலம் நல்ல சினிமாக்களின் மீது அவருக்கு இருந்த ஆத்மார்த்தமான விருப்பத்தை அறிய முடிகிறது.
பிரம்மாண்ட திரைப்படம் என்பது ஒருவகையில் ஷங்கர் தானே இட்டுக் கொண்ட பொன் விலங்கு. இனி அவரால் அந்தப் பாதையில் இருந்து திரும்ப இயலாது. அப்படித் திரும்பினால் அது அவரது அடையாளத்துக்கும், வணிகத்துக்கும் எதிராக அமைந்து விடும். ‘அழகிய குயிலே’ மாதிரியான எளிமையான திரைப்படத்தை ஷங்கர் ஒருவேளை இயக்கி வெளியிட்டால், அவரது வழக்கமான பாணியை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் ஏமாந்து அது தோல்விப்படமாக ஆகி விடும் ஆபத்து நிறையவே இருக்கிறது.
“சத்யம் தியேட்டர்ல கூட்டமே இருக்காது”
இதற்கு ரசிகர்களின் முதிர்ச்சியின்மையும் ஒரு வகையில் காரணம். ஒரு பிராண்டிடம் இருந்து குறிப்பிட்ட பாணியை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். ஹாலிவுட்டில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் முன்னணி கமர்ஷியல் இயக்குநராக இருந்தாலும் ‘Schindler's List’ மாதிரியான எளிமையான வரலாற்றுத் திரைப்படத்தைத் தந்தால் அதையும் வரவேற்கும் முதிர்ச்சி அங்கிருக்கிறது. ஆனால் இங்கு ஒரு கமர்ஷியல் இயக்குநர், தன்னுடைய பாணியிலிருந்து விலகி வேறு மாதிரியான பரிசோதனை முயற்சியைத் தந்தால் அது பெரும்பாலும் விபத்தைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம்.
‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் குறித்து இந்தியன் முதல் பாகத்திலேயே ஒரு வசனம் வருவது நினைவில் இருக்கலாம். “நேரா சத்தியம் தியேட்டர் போ... ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்ன்னு ஒரு படம் ஓடுது. அற்புதமான படம். ஆனா கூட்டமே இருக்காது. எண்ணி பத்து பேர்தான் இருப்பாங்க… நானும் வந்துடறேன்” என்று தன் காதலியிடம் ஹீரோ கூறுவான். அதுதான் நல்ல படம் என்பது ஷங்கரின் வழியாக வெளிப்பட்ட ஒருவகையான வாக்குமூலம் என்பதை மறைமுகமாக இதிலிருந்து உணர முடியும்.
சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் ஷங்கரின் பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. ‘பாய்ஸ்’, ‘ஐ’ போன்ற திரைப்படங்களின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் கூட அவற்றில் ரசிக்கத்தக்க அம்சங்கள் இருந்தன. ஆனால் ‘இந்தியன் 2’ பலருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே தந்தது. ரசிப்பதற்கு சின்னச் சின்னதாக ஆங்காங்கே சில அம்சங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த அளவில் அது சலிப்பூட்டும் பயங்கரமாக சோர்வூட்டும் படைப்பாக அமைந்தது. ஏன்?
தொடர்ந்து பேசுவோம்!.
சுரேஷ் கண்ணன் எழுதும் இயக்குநர் ஷங்கர் குறித்த இந்த தொடரின் அடுத்த அத்தியாயம் வரும் திங்கள் (22-07-2024) காலை வெளியாகும்!