பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்
பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்

பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவுக்கு அவசியமா… ‘தங்கலான்', ‘வாழை’ சொல்ல வருவது என்ன?!

வரலாற்றுப் பின்னணியில் கைக்கு எட்டாத புனைவின் வழியாக பயணிக்கும் ‘தங்கலான்’ என்கிற மெகா பட்ஜெட் படத்தை விடவும், யதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக பயணிக்கும் ‘வாழை’ பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதில் ஒரு மகத்தான உண்மை அடங்கியிருக்கிறது.
Published on

தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் வரிசையில் எத்தனையோ டிரெண்ட்செட்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். புராண, இதிகாச திரைப்படங்களின் யுகம் முடிந்து சமூகத் திரைப்படங்களின்  காலம் துவங்கிய போது அதில் குறிப்பிடத்தகுந்த பாணியை உருவாக்கியதில் இயக்குநர் ஸ்ரீதருக்கு முக்கியமான பங்குண்டு. 

கல்யாணப் பரிசு போன்ற முக்கோண காதலின் சிக்கல்கள், ‘காதலிக்க நேரமில்லை’ மாதிரியான அட்டகாசமான நகைச்சுவை, சிவந்த மண் மாதிரியான சரித்திரப் பின்னணியில் அமைந்த சாகச திரைப்படம் என்று பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கி அசத்தினார் ஸ்ரீதர். சிவாஜி படம், எம்.ஜி.ஆர் படம்  நடிகர்களின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட சினிமாவை, ‘டைரக்டரின் படம்’ என்று ரசிகர்களால் குறிப்பிட வைத்த அளவிற்கு தனித்தன்மை கொண்ட படைப்பாளியாக ஸ்ரீதர் இருந்தார். 

பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்
தங்கலான் விமர்சனம் : பெண்ணும்,பொன்னும், மண்ணும், சில மர்மமும்… மின்னுகிறதா பா.இரஞ்சித்தின் தங்கலான்?

இதன் பிறகு கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகள் உருவாகி அந்தந்த காலக்கட்டத்தின் தமிழ் சினிமா பாணியை வெகுவாக பாதிக்கும் வகையில் தனித்தன்மையுடன் இயங்கினார்கள். இதன் பிறகு ஷங்கர், பாலா, மிஸ்கின், செல்வராகவன், வெற்றிமாறன் என்று இன்னொரு வரிசை மடமடவென்று களத்தில் இறங்கியது. இது ஒரு உத்தேசமான பட்டியல் மட்டுமே. 

புதிய அலையை உருவாக்கிய இளம் இயக்குநர்கள்!

இரண்டாயிரமாவது ஆண்டில் அடுத்த தலைமுறை இயக்குநர் வரிசை வந்தது. இதில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களின் பட்டியலில் பா.இரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரைச் சொல்லலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான நீதியை அதுவரையான தமிழ் சினிமா ஆதரித்துப் பேசியது; பூடகமாகப் பேசியது; பல சமயங்களில் மறைமுகமாக எதிர்த்தும் பேசியது. அதாவது சாதிய மேட்டித்தனத்திற்கு ஆதரவான படங்களும் வந்தன. 

இப்படியொரு சூழலில் ஒடுக்கப்பட்டோரின் அரசியலை புது விதமான, வெளிப்படையான மொழியில் பேசிய விதத்தில் பா.இரஞ்சித்தின் சினிமா துவக்கப் புள்ளியாக அமைந்து  ஒரு புதிய அலையைக் கிளப்பியது. மாரி செல்வராஜின் சினிமாவும் இதே மாதிரியான அரசியலைப் பேசுகிறது என்றாலும் தன்னுடைய தனித்துவமான பாணியைப் பின்பற்றி வருகிறது. 

'வாழை' மாரி செல்வராஜ்
'வாழை' மாரி செல்வராஜ்

பா.இரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்களுக்கான பின்னணியைப் பார்க்கலாம். இதில் கணிசமான அளவில் ஆச்சரியத்தக்க ஒற்றுமைகளும் அரிதாக சில வித்தியாசங்களும் இருக்கின்றன. பா.இரஞ்சித், சென்னையின் புறநகர் பகுதியான ஆவடிக்கு அருகில் பிறந்து வளர்ந்தவர். மாரி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இருவருமே தாங்கள் பிறந்த வளர்ந்த இடத்தின் சூழலையே சினிமாவின் களமாகவும் சித்திரிக்கிறார்கள். 

இருவருமே தங்களின் சுயவரலாற்றிலிருந்து அனுபவங்களை எடுத்து புனைவு வடிவில் சினிமாவாக படைக்கிறார்கள். இரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டகத்தி’யைப் பார்த்தவர்கள் எவருமே சொல்லி விட முடியும். புறநகரில் வாழும் ஒரு முதிரா இளைஞனின் விடலைத்தனமான காதலும் வாழ்க்கையும் கல்லூரி மாணவனின் கோணங்கித்தனங்களும் அதில் அச்சு அசலாக பதிவாகியுள்ளது. இதைப் போலவே மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்' படத்தில் ஆங்கிலப் பாடம் சரியாக வராத, சுயமரியாதை கொண்ட ஓர் இளைஞனின் சாதியக் கொடுமையின் வலியும் வேதனையும் பதிவாகியுள்ளது. 

பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்
‘Vaazhai’ Review : ‘வாழை’ மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற கட்டியிருக்கும் நோவா பேழை!

இரண்டு இயக்குநர்கள் - ஒடுக்கப்பட்டோருக்கான ஒரே அரசியல் 

முதல் திரைப்படத்தை சுயவரலாற்றுத்தன்மையுடன் படைத்த இரஞ்சித், அதில் கிடைத்த வெற்றி மற்றும் புகழ் காரணமாக அடுத்த திரைப்படமான ‘மெட்ராஸ்’ படத்தில் ஸ்டார் நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்கிறார். ஒரு சுவரை அரசியல் அதிகாரத்தின் உருவகமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமும் கல்வியும் எத்தனை முக்கியம் என்பதை வலிமையாகச் சொன்னதால் ‘மெட்ராஸ்’ பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

இதைப் போலவே மாரி செல்வராஜூம் தன்னுடைய இரண்டாவது திரைப்படமான ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் என்கிற ஸ்டார் நடிகரிடம் செல்கிறார். பரியேறும் பெருமாளில் ‘சாதிய வன்முறைக்குத் தீர்வு இன்னொரு பதில் வன்முறையல்ல. இரு தரப்பிற்கு இடையேயான இணக்கமே தீர்வு’ என்கிற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்தார் மாரி செல்வராஜ். இந்த யதார்த்தமான கோணத்தினாலேயே  இந்தத் திரைப்படம் வெகுவாக பாராட்டப்பட்டது. பக்கத்து பக்கத்தில் இருக்கும் இரண்டு தேநீர் கோப்பைகளின் இறுதிக்காட்சியை பலரும் பாராட்டினார்கள். அடுத்த திரைப்படமான ‘கர்ணன்’ படத்தில் இந்தக் கோணம் அப்படியே மாறியது. ‘ஒரு கட்டத்தில் திருப்பியடிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்பதை உக்கிரமான காட்சிகளுடன் மாரி செல்வராஜ் பதிவு செய்தார். முந்தைய படத்திற்கு நேர்மாறான ஆனால் தவிர்க்க முடியாத கோணம் இது. 

விக்ரம், ர ஞ்சித்
விக்ரம், ர ஞ்சித்

தன்னுடைய மூன்றாவது திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை பா.இரஞ்சித்தால் நெருங்க  முடிந்தது. தோல்விப் படங்களில் இருந்து மீள்வதற்காக, அப்போதைக்கு புகழ் பெற்றிருக்கும் இளம் இயக்குநர்களிடம் சரண் அடைவது ரஜினிகாந்த்தின் சக்ஸஸ்ஃபுல் பாணி. அந்த வகையில் பா.இரஞ்சித்தின் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டது புத்திசாலித்தனமான மூவ். உச்ச நட்சத்திரத்தின் ஃபவர்புல் வாய்ஸ் வழியாக தன்னுடைய அரசியல் முழக்கத்தை தமிழ் சினிமாவில் ஒலிக்கத் திட்டமிட்டார் பா.இரஞ்சித். ஒருவகையில் இருவருமே அவரவர் கோணத்தில் வெற்றிக்காக செய்து கொண்ட சமரசம்தான் இது. இந்த win win situation சரியாக வேலை செய்தது. ‘கபாலி’ திரைப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. 

ஸ்டார் நடிகர்களும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களும்!

பா.இரஞ்சித்தின் படங்கள் உரையாடும் அரசியலுடன் ரஜினிக்கு இணக்கமும் புரிதலும் இருக்கிறதா என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயம். “இயக்குநர்கள் சொல்லித் தரும் வசனங்களைப் பேசி நடிக்கிறேன். அவ்வளவுதான்” என்று ஒரு திரைப்படக் காட்சியிலேயே  அசந்தர்ப்பமான சூழலில் இருந்து தப்பிப்பதற்காக சொன்னவர் ரஜினி. ‘கபாலி’யின் வெற்றி காரணமாக இந்தக் கூட்டணி அப்படியே ‘காலா’வின் வழியாக தொடர்ந்தது. நிலம் என்பதுதான் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரம் என்கிற அரசியல் குரலை தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் இரஞ்சித். ‘காலா’விற்குப் பிறகு ‘2.0’, ‘பேட்ட’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ என்று தனது வழக்கமான டிராக்கிற்கு தாவினார் ரஜினி. அவருக்குத் தேவை எப்படியோ ஒரு வெற்றி. அவ்வளவுதான். 

அடுத்ததாக இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா’ ஸ்போர்ட்ஸ் டிராமாவின் வழியாக சமூகத்தில் உள்ள சாதிய அரசியலை வலுவாகப் பேசியது. முன்னணி நடிகர்களை தவிர்த்து விட்டு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற சிறு முதலீட்டுத் திரைப்படத்தை அடுத்ததாக இயக்கினார் இரஞ்சித். காதல் என்னும் நிறுவனத்தில் உள்ள சாதிய அரசியலை சிறப்பாகவும் நுட்பமாகவும் பேசிய படம் இது.  

ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் மாரி செல்வராஜ் தனது அடுத்த திரைப்படத்தை உதயநிதி என்னும் ஸ்டார் நடிகரை ஹீரேவாக வைத்து உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தகப்பன், சாதியக் கொடுமையை கோழைத்தனமான மௌனத்துடன் சகித்துக் கொள்கிறான். எம்.எல்.ஏ. என்கிற பாவனையான அதிகாரத்தை வைத்திருந்தும் அதனால் பெரிய பலனில்லை. அவருடைய  பிள்ளையோ சாதியக் கொடுமைக்கு எதிராக வீரத்துடன் பொங்குகிறான். ஒரு தலைமுறையின் வித்தியாசத்தை இந்தப் படம் சித்தரித்தது. 

ஃபகத் ஃபாசில், மாரி செல்வராஜ்
ஃபகத் ஃபாசில், மாரி செல்வராஜ்

2024-ம் ஆண்டு. பிரபலமல்லாத நடிகர்களை வைத்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கிய இரஞ்சித், அடுத்த திரைப்படத்தில் விக்ரம் என்கிற ஸ்டார் நடிகரை வைத்து ‘தங்கலான்’ என்கிற படத்தை இயக்கி வெளியிடுகிறார். ஆனால் இதே காலக்கட்டத்தில் வெளியான மாரி செல்வராஜின் ‘வாழை”, ஸ்டார் நடிகர்கள் அல்லாமல், கிராமத்துச் சிறார்களின் மீது சுமத்தப்படும் பணிச்சுமையை வர்க்கம் மற்றும் சாதிய அரசியலுடன் பேசுகிற சிறுமுதலீட்டுத் திரைப்படமாக அமைந்திருக்கிறது. வாழைத்தாறு சுமையை தலையில் சுமப்பதின் வலியை ஒரு துர்கனவாகவே உணர்ந்து பதறுகிறான், இதில் வரும் சிறுவன்.

மாய யதார்த்த பாணியை வென்றதா யதார்த்தம்?

தனக்குப் பரிச்சயமான சமகாலத்தின் களத்தை விட்டு நகர்ந்து வரலாற்றுப் பின்புலத்தில் மாய யதார்த்த பாணியின் வழியாக உழைப்புச் சுரண்டலின் வரலாற்றை ‘தங்கலான்’ படத்தில் பேசியிருக்கிறார் இரஞ்சித். சுவர், நிலம் போல தங்கம் என்பது இங்கு அதிகாரத்தின் உருவகமாக மாறியிருக்கிறது. விக்ரமின் அசுரத்தனமான உழைப்பு மற்றும் நடிப்பு, பார்வதி போன்ற கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய நேர்த்தியான பங்களிப்பு, பெரிய பட்ஜெட், VFX மாய்மாலங்கள் போன்ற பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இருந்தாலும் குழப்பமான, தெளிவற்ற திரைக்கதை காரணமாக ‘தங்கலான்’ பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. 

ஆனால் இதே சமயத்தில் வெளியான மாரி செல்வராஜின் ‘வாழை’ என்கிற சிறிய படம், ‘தங்கலான்' படத்தை முந்திக் கொண்டு பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. இதில் எந்தவொரு பிரபலமான நடிகர்களும் இல்லை. ஆனால் பொன்வேல், ராகுல் என்கிற இரண்டு சிறுவர்களின் நடிப்பைப் பாராட்டாதவர்கள் இல்லை. குறிப்பாக தேசிய விருதை வெல்லக்கூடிய அளவிற்கான நடிப்பை ‘சிவனணைந்தான்’ என்கிற பாத்திரத்தின் மூலம் தந்திருக்கிறான் பொன்வேல். சினிமா போஸ்டர்களில் இவனுடைய முகம் பிரதானப்படுத்திருப்பதை சிறுபடங்களுக்கான வெற்றி எனலாம். 

pa ranjith, vikram
pa ranjith, vikram

வரலாற்றுப் பின்னணியில் கைக்கு எட்டாத புனைவின் வழியாக பயணிக்கும் ‘தங்கலான்’ என்கிற மெகா பட்ஜெட் படத்தை விடவும், யதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக பயணிக்கும் ‘வாழை’ பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதில் ஒரு மகத்தான உண்மை அடங்கியிருக்கிறது. எளிய சமூகத்தினருக்கான நீதியைப் படைப்புகள் பேசும் அதே சமயத்தில், அவை அசலான வாழ்க்கைக்கு நெருக்கமானதாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே அது. 

பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் உருவாக்குகிற திரைப்படங்களின் பாணி வேறுபட்டாலும் அவை பேசும் அரசியலில் உள்ள உண்மையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான கரிசனமும் முக்கியமானது. அந்த வகையில் இரண்டு இயக்குநர்களின் பயணமும் தொடர்வது அவசியமானது. 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com