‘’என் படங்கள் சரியா போகலனதும் தப்பா பேசுனாங்க'’ - ‘மகாராஜா’ வெற்றிக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி!

நித்திலன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. நான் லீனியர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப்படம் பாலியல் வன்முறைபற்றி பேசியிருந்தது.

கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பையும், திரைக்கதையில் திருப்பங்களையும் கொண்டிருந்ததால் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாக, தியேட்டர்களில் கூட்டம் கூடியது. 

இந்த ஆண்டு இதுவரையிலுமான படங்களில் ‘கருடன்' வசூலை ‘மகாராஜா’ முந்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார் விஜய் சேதுபதி.

‘’கடைசியா நான் நடிச்ச படங்கள் சரியா போகலைனதும் என்னைப்பத்தி தப்பா பேசுனதா நண்பர்கள் சொன்னாங்க. பேனர் ஏத்துனா விஜய் சேதுபதிக்கு கூட்டமா கூடப்போகுதுன்னு ஒருத்தர் சொன்னார்னு சொன்னாங்க. அவங்களுக்கு பதில் சொல்றதுக்காக நான் இந்தப்படம் பண்ணல. அப்படி பண்ணா அது நல்லா வராது. ஆவரேஜ் படமா இது இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நீங்க பெரிய வெற்றிப்படமா மாத்திட்டீங்க. பத்திரிகையாளர்கள் படம் பார்த்துட்டு என்கிட்ட கேள்விகேட்ட அன்றைய நாளை மறக்கமுடியாது. ஒவ்வொருத்தர் முகத்துலயும் ஒரு சந்தோஷம் தெரிஞ்சது. எப்பவுமே நான் நடிச்ச படங்களை நான் திரும்ப பார்க்கமாட்டேன். ஆனா, அன்னைக்கு இரவு நான் படம் பார்த்தேன். அது ரொம்ப இனிமையான இரவு'’ எனப்பேசினார் விஜய் சேதுபதி.

logo
News Tremor
newstremor.com