23 மாடி லண்டன் அபார்ட்மென்ட் எரிந்து சாம்பலான வழக்கில் திருப்பம்...72 உயிர்களுக்கு நீதி கிடைக்குமா?
லண்டனில் உள்ள கிரென்ஃபெல் கட்டடத்தில் (Grenfell Tower fire) கடந்த 2017-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பிரிட்டனையும் நிலைகுலைய வைத்தது. அந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
`Grenfell Tower fire’ பேரழிவு குறித்த பொது விசாரணை வேண்டுமென்று அப்போது மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , கிரென்ஃபெல் கட்டட விபத்துக்கு லண்டன் அரசும், கட்டுமானத்துறையும் , தீ பிடிக்கூடிய வகையிலான சுவர் பூச்சுகளைக் கொடுத்த நிறுவனங்களுமே காரணம் என அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லண்டனின் பணக்காரப் பகுதி அது. ஜூன் 14, 2017 அன்று அந்த துயர சம்பவமானது நிகழ்ந்தது. 23 அடுக்கு கொண்ட உயர்ந்த குடியிருப்புக் கட்டடம் தான் கிரென்ஃபெல் டவர். அங்கே 120-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்துவந்தன. அங்கு ஏற்பட்ட தீ விபத்தானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட மிகக் கொடிய தீ விபத்தாகப் பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த நேர்மையான விசாரணை வேண்டுமென சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் நீதி வேண்டி நீதிமன்றத்தினை நாடினர். அப்போது, இப்பேரழிவு சம்பவத்தின் பின்னணியை ஆராய்வதற்காக இதுவரை 58 நபர்களிடமும், 19 நிறுவனங்களிடமும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக, ஆறு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையின் முடிவாக 1,700-பக்க அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில்...
கட்டடத்தின் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் அலட்சியப் போக்கு
நேர்மையற்ற உற்பத்தியாளர்கள்
தரமற்ற பொருட்களை கட்டடத்திற்கு பயன்படுத்தியவர்கள்
கட்டிட பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகளின் நேர்மையற்ற செயல்பாடு ஆகியவையே காரணம் என சுட்டிக்காட்டுகிறது.
"கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தானது, பல ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் பொறுப்பான பதவிகளில் உள்ள அரசு மற்றும் பிற அமைப்புகளின் தோல்வியின் உச்சம்" என்பதே அறிக்கையின் முதன்மையான சாராம்சம்.
முன்னதாக, 2019-ம் ஆண்டு வெளியான விசாரணையின் முந்தைய அறிக்கையில், குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ ஏற்பட்டதாகவும், 2016-ல் கட்டட மறுசீரமைப்பின் போது மாற்றப்பட்ட வெளிப்புற சுவர் பூச்சு எளிதில் தீப்பற்றக் கூடியதாக இருந்ததுமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவிர, கட்டடத்தின் வெளிப்புற சுவர் பூச்சு எரியக்கூடிய அலுமினிய கலவைப் பொருளைக் கொண்டிருந்தது தான், தீ மேலும் பரவியதுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விபத்தின் போது முறையாக வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலும், தீ விபத்தின் போது முன் திட்டமிடாத தீயணைப்பு வீரர்களாலும், மீட்புக்குழுவினருக்காக காத்திருந்ததாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் அம்பலமாகியுள்ளது.
எளிதில் எரியக்கூடிய சுவர் பூச்சு பிரச்னையால் ஐரோப்பா முழுவதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இருப்பினும், வலென்சியா, ஸ்பெயின், மற்றும் இத்தாலி போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இதேபோன்ற தீ விபத்துகள் கடந்த 2021-ல் நிகழ்ந்தன.
ஜூலை மாத நிலவரப்படி, பிரிட்டனில் 11 மீட்டருக்கும் மேல் உயரமாக 3,280 கட்டடங்கள் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற மேல்சுவர் பூச்சு கொண்டிருப்பதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இன்னும் சீரமைப்பு பணிகள் கூட தொடங்கப்படவில்லை என்பதே நிதர்சன உண்மை.
72 பேரின் உயிரைப் பறித்த இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் புதன்கிழமை அரசு சார்பில் மன்னிப்பு கேட்டார்.
தீ விபத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான அதன் மிக அடிப்படையான கடமையை நிறைவேற்றுவதில் நாட்டின் தோல்வியை ஸ்டார்மர் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ''உங்கள் ஒவ்வொருவரிடமும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களிடமும் பிரிட்டிஷ் அரசின் சார்பாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.