விஜய்யின் சேலம் மாநாடு… விஜயகாந்த், ஜெயலலிதா வழியில் தமிழக வெற்றிக் கழகம் போடும் அதிர்ஷ்டக் கணக்கு!
2026 தேர்தலில் போட்டியிடத்தயாராகும் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்த இருக்கிறார். சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் மாநாட்டை நடத்துவதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான அனுமதி வாங்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது.
ஏன் சேலம்?!
சேலம் நாழிக்கல்பட்டியில் 10 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்கக்கூடிய அளவுக்கு பல ஏக்கர் கணக்கில் இடம் அமைந்திருக்கிறது. இது மட்டுமே சேலத்தை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் இல்லை. 2011 தேர்தலுக்கு முன்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தத் திடலில் கூட்டம் நடித்தியப்பிறகுதான் எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தார் என்கிற வரலாறு இருக்கிறது. அதேப்போல் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் நாழிக்கல்பட்டியில் இருந்துதான் தனது பிரசாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா. இந்த பொதுக்கூட்ட மேடையில்தான் ‘’கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’’ என்று பேசிய ஜெயலலிதா இந்த தேர்தலில் 37 தொகுதிகளை வென்றார்.
அதேப்போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கிய இடமும் இதே நாழிக்கல்பட்டி மைதானம்தான். இந்த இடத்தின் ராசியால்தான் மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் மோடி என்கிறார்கள் அரசியல் கட்சியினர். அதனால் அதே சேலம் ராசியை நம்பிருக்கிறார் விஜய்.
ஆகஸ்ட் மாநாடு!
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சேலத்தில் விஜய்யின் முதல் அரசியல் கட்சி மாநாடு நடைபெற இருக்கிறது!
விஜய் சேலத்தின் அதிர்ஷ்டத்தை நம்பி, அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். விஜய்யின் முதல் அரசியல் கட்சி மாநாடு வெற்றி கண்டால், தமிழகத்தின் புதிய அரசியல் புயலாக விஜய் உருவாகப்போவது உறுதி!