Bigg Boss Tamil 8 : முதல் முறையாக ஒரே அணியில் ஆண்கள் பெண்கள்... ஜெஃப்ரியை குறிவைத்த சாச்சனா | Day 17
பிக்பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் போட்டிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதையே முழு ஷோவாகவும் மாற்றிவிட்டார்கள். இப்போதைக்கு நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கிற்கும், வீக்லி டாஸ்கிற்குமான போட்டிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. அதன்படி, பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டல் செக்மென்ட் நடந்தது. நேற்றைய போட்டியின் தொடர்ச்சியாக, பெண்கள் ஹோட்டலை நடத்த ஆண்கள் விருந்தினர்களாக தொடர்ந்தனர்.
ரஞ்சித் கேட்ட சுடுதண்ணீர் வர அரைமணிநேரம் எடுத்ததால் அதையே குற்றச்சாட்டாக வைத்தனர். தீபக் ஆங்கிலத்தில் பேசுவதையே குறையாக பெண்கள் கூறினர். அதுபோல, பெண் வேடத்தில் இருக்கும் முத்துக்குமரன் (முத்தழகு) சத்யாவுக்கு ஹெட் மசாஜ் கிடைக்கவில்லையென்பதை புகாராக எழுதினர்.
ஒரு கட்டத்தில் ஜெஃப்ரியை வம்புக்கு இழுத்தார் சாச்சனா. ஜெஃப்ரியும் டேபிளில் டமால் என அடித்துவிட்டுச் சென்றார். ஹோட்டல் ஊழியருக்கு பொறுமையே இல்லையா எனும் கேள்வி சாச்சனாவுக்கு வரவில்லை. அதே நேரத்தில், ஜெஃப்ரியை ‘டேய் தம்பி’ என்று ஒருமையில் அழைத்ததை பெண்கள் புகாராக வைத்தனர்.
மொத்தத்தில் பெண்கள் முடிந்த அளவுக்கு பொறுமையுடன் ஹோட்டலை நடத்தினர். நாம பண்ண டார்ச்சருக்கு சேர்த்து வெச்சி செய்யப் போறாங்களே எனும் மனநிலையுடன் பிக் பாஸ் ஹோட்டலை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் ஏற்றனர்.
முதல் கட்டமாக, ஹோட்டல் மேனேஜராக முத்துக்குமரன், வரவேற்பில் விஷால், ரூம் சர்வீஸில் சத்யா, அருண் மற்றும் செஃப் ஆக தீபக், ரஞ்சித், சாச்சனா ஆகியோர் பொறுப்பேற்றனர். ஆட்டத்துக்காக சரியான ஆட்களை சரியான பொறுப்பில் அமர்த்தியது ஆண்கள் டீம்.
பெண்கள் செம ஜாலியாக ஆட்டத்தை துவங்கினர். கேள்வி மேல் கேள்வி கேட்பது, க்யூட்டான வம்புக்கு இழுப்பதென சிரிப்பாகவே கொண்டு சென்றனர்.
ஹீரோயின் ரோலில் தர்ஷா, அவரின் உதவியாளராக ஜாக்குலின், தர்ஷிகாவும், மாடல் ரோலில் செளந்தர்யா, யூடியூபராக ஆனந்தி, அவரின் மருமகளாக பவித்ரா , பாட்டியாக அன்ஷிதாவும் அவரின் பேரனாக ஜெஃப்ரியும் ஹோட்டலுக்கு வந்தனர்.
நடிகையாக என்னென்ன பண்ண முடியுமோ அதையெல்லாம் செய்தார் தர்ஷா. ஜாக்குலின் செம ஜாலியாக ஒவ்வொருவரையும் டார்சர் செய்துகொண்டிருந்தார். அடிக்கடி, ஜாக்குலினும் செளந்தர்யாவும் கிண்டல் செய்துகொண்டனர். அதை தடுப்பதே ஹோட்டல் ஊழியர்களின் வேலையாகிவிட்டது.
ஒருகட்டத்தில் செளந்தர்யா பாடி ஷேமிங் செய்து பேசியதால் கடுப்பானார் ஜாக்குலின். அட... என்னப்பா உங்களுக்குள்ளையே ட்விஸ்ட் ஆகிட்டீங்க.. என்றே தோன்றியது.
போட்டிக்கு நடுவே ஜாக்குலினும் செளந்தர்யாவும் மோதிக் கொண்டனர். பெரியளவில் பூகம்பமாக வெடிக்கவில்லை. ஆனால், செளந்தர்யா ஆக்டிவிட்டி நன்றாகவே இருந்தது.
அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் ஹோட்டலில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது ஆண்கள் டீம். பாடுவது, ஆடுவது என ஹோட்டல் விருதினர்களை குஷிப்படுத்தினர். குறிப்பாக, பெண் வேடமிட்டு வந்த விஷாலின் நடனம் ஹைலைட்.
ஒரே நேரத்தில் அனைத்து கஸ்டமர்களும் வந்ததால், கேட்ட நேரத்தில் உணவு தரவில்லை, சப்பாத்தி கொடுத்த பிளேட்டில் கரப்பான் பூச்சி இருந்தது என ஒவ்வொன்றுக்கும் பெண்கள் குறை கூறினர். அவை அனைத்தையும் ஃபீட் பேக் போர்டில் எழுதினர். அப்படி எழுதியே, முழு பலகையும் நிறைந்துவிட்டது.
இதனால், முத்துக்குமரன் மேனேஜர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ரூம் சர்வீஸூக்குப் போனார். அந்த பதவிக்கு விஷால் வந்தார். மொத்தத்தில், பெண்களை விட அதிக ஃபீட் பேக் வாங்கியது ஆண்கள் ஹோட்டல் தான். இன்னொரு பக்கம், கஸ்டமராக வந்த பெண்களும் ஆட்டத்தை ஜாலியாகவே எடுத்துச் சென்றனர். முழுக்க காமெடி செய்துகொண்டும், வேண்டுமென்றே ஆண்களுக்கு டாஸ்க் கொடுத்துக் கொண்டும் விளையாடியது சுவாரஸ்யமாக இருந்தது.
இதற்கு நடுவே, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கிற்கான போட்டியை நடத்தினார் பிக்பாஸ். அந்த போட்டி Dumb Charades தான். படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு பேர்களாக ஒவ்வொரு அணியிலும் அனைவரும் விளையாடினர். பெண்கள் டீம் செம ஷார்ப்பாக விளையாடியது. அசால்ட்டாக பதிலைச் சொல்லி அசத்தியது. ஆண்களும் ஈடு கொடுத்தாலும் இறுதியாக பெண்கள் 7 புள்ளியும், ஆண்கள் 5 புள்ளியும் பெற்றனர். இதனால், பெண்கள் டீம் வெற்றி பெற்றது.
நாமினேஷன் ஃப்ரீக்கான முதல் டாஸ்க்கான காயின் ஒட்டும் போட்டியானது உடல் பலத்தை பயன்படுத்தி விளையாட வேண்டிய கேம். அதில் ஆண்கள் வென்ற நிலையில், புத்தியை தீட்டி விளையாடி Dumb Charades போட்டியில் பெண்கள் டீம் அசால்டாக வென்றது. இரண்டு டீமும் சமநிலையில் இருக்கிறது. நாளை நடக்கும் ஃபைனல் போட்டியில் வெல்லும் அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் கிடைக்கும்.
இன்று முழுவதும் பிக்பாஸ் வீடானது பிக்பாஸ் ஹோட்டலாகவே இருந்தது. ஆண்கள் நடத்தி வந்த ஹோட்டலானது நாளையும் தொடரும். பெண்களிடமிருந்து கூடுதல் டிப்ஸ் வாங்க வேண்டுமென்பதால் பல வித்தைகளை காட்டிக் கொண்டிருக்கிறது ஆண்கள் டீம்.
பிக்பாஸ் ஹோட்டலை யார் பெஸ்டாக நடத்தியது? ஆண்களா பெண்களா எனும் ரிசல்ட், நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கிற்கான ஃபைனல் போட்டியில் யார் ஜெயிப்பார் என்பதெல்லாம் நாளை தெரிந்துவிடும்.
ஆக, இன்றைய ஆட்டத்தில் பெரிய அழுகையோ, கோவப்படுவதோ என்றே வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. முழுக்க முழுக்க ஜாலியாகவே முழு ஷோவும் நடந்தது.
அடுத்ததாக ஆண்கள் பெண்கள் அணி இணைந்து விளையாட உள்ளது. அதாவது இரண்டு அணிகளிலும், ஹோட்டல் டாஸ்க்கில் சரியாக பெர்ஃபார்ம் செய்யாதவர்கள் ஹோட்டல் ஊழியர்களாகவும், சிறப்பாக பெர்ஃபார்ம் செய்தவர்கள் கஸ்டமர்களாகவும் வரவுள்ளனர். எனவே முதல்முறையாக ஆண், பெண் அணிகள் இணைந்து ஒரு டாஸ்க்கில் விளையாட உள்ளனர். செம்ம சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.