கோலிவுட் Vs மோலிவுட் 
சினிமா

இயக்குநர் மகேந்திரனால் செய்ய முடிந்ததை ஏன் மற்ற இயக்குநர்கள் செய்யவில்லை?! சுரேஷ் கண்ணன் தொடர் - 4

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் எழுதும் கோலிவுட் Vs மோலிவுட் தொடரின் நான்காம் பகுதி இங்கே!

Suresh Kannan

சமீபத்தில் OTT-யில் ‘மனோரதங்கள்’ என்கிற ஆந்தலாஜி திரைப்படத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ஒன்பது சிறுகதைகள், படமாக்கப்பட்டதின் தொகுப்பு இது. ஒவ்வொரு எபிசோடிலும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களும் இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்களித்திருக்கிறார்கள். 

மம்முட்டி, மோகன்லால் முதற்கொண்டு பல முன்னணி நட்சத்திரங்களும் பிரியதர்ஷன், ரஞ்சித், ஷ்யாம்பிரசாத் போன்ற சிறந்த இயக்குநர்களும் சந்தோஷ் சிவன் போன்ற மகத்தான ஒளிப்பதிவாளர்களும் கைகோர்த்து கூட்டணி அமைத்து  இந்த ஆந்தாலஜியை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். எம்.டி.வி. என்கிற எழுத்தாளருக்கு மலையாள சினிமா செலுத்தியிருக்கும் மரியாதை இது. இந்த ஆக்கத்தை தொகுத்து முன்னுரை வழங்கியிருப்பவர் நம்மூர் கமல்ஹாசன். 

எழுத்தாளர்களை மதிக்கும் மலையாள சினிமா

மலையாளத்தை விடவும் மூத்த வயதுள்ள மொழி தமிழ். இங்கும் பல மகத்தான படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படியொரு ஆந்தாலாஜி முயற்சி தமிழில் சாத்தியமா? அப்படியே சாத்தியப்பட்டாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்க சம்மதிப்பாளர்களா? நிச்சயம் அதுவொரு பகற்கனவுதான். 

கி.ராஜநாராயணன் என்கிற தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் முதற்கொண்டு அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி என்று அகர வரிசையில் பட்டியலிடக்கூடிய அளவிற்கு சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் படைப்புகளை தமிழ் சினிமாத்துறை படமாக கூட எடுக்க வேண்டாம்.. குறைந்தபட்சம் அவர்களை அறிந்திருக்குமா… வாசித்திருக்குமா? என்றால் அது பெரிய கேள்விக்குறிதான். 

மனோரதங்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசாதாரண முயற்சிகள் நிகழ்ந்திருக்கலாம். இலக்கிய வாசிப்பைக் கொண்ட, எழுத்தாளர்களின் மகத்துவத்தை அறிந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர்கள் தமிழில் இருக்கலாம். இருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் மிக அரிதாக சாத்தியப்பட்டவை  மட்டுமே. 

‘நவரசா’ என்றொரு ஆந்தாலாஜி  தமிழில் கூட வந்தது. ஆனால் அந்தத் தொகுப்பில் ஒன்றே ஒன்று மட்டுமே எழுத்தாளரின் கதையை அடிப்படையாகக் கொண்டது.  இயக்குநர் வசந்த், இலக்கிய ருசியும் சிறந்த வாசிப்பும் கொண்டவர் என்பதால் தி.ஜானகிராமனின் ‘பாயசம்’ என்கிற சிறுகதையை படமாக்கினார். இதே வசந்த் இயக்கிய இன்னொரு ஆந்தாலஜியில் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்) அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதையைப் படமாக்கினார். 

தமிழ் இலக்கியமும் சினிமாவும்!

இப்படியாக இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை அறிந்த சில இயக்குநர்களால் மட்டுமே இத்தகைய அறிய முயற்சிகள் நடந்துள்ளன. பூமணி எழுதிய ‘வெக்கை’ என்கிற குறுநாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்’ என்கிற திரைப்படத்தை உருவாக்கினார் வெற்றிமாறன். 

எழுத்தாளர்களின் படைப்பை சினிமாவாக மாற்றும்போது படைப்பின் ஆன்மாவை சினிமாவுக்கு கச்சிதமாக கடத்துவதில் சில இயக்குநர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதர இயக்குநர்கள், கதையின் அவுட்லைன் மற்றும் சில சுவாரசியமான சமாச்சாரங்களை மட்டும் உருவிக்கொண்டு அதை சினிமாவின் வழக்கமான மசாலாவில் போட்டு கதையின் ஆன்மாவை கருணையே இல்லாமல் கொன்றுள்ளனர். 

எழுத்து, சினிமா ஆகிய இரண்டுமே வெவ்வேறு மீடியம். எனவே எழுதப்பட்ட கதையை அப்படியே சினிமாவாக்க முடியாது. கூடவும் கூடாது. ஆனால் எழுத்தின் ஜீவநாடியை சினிமாவின் மையமாக நிறுத்துவதற்கு இயக்குநர்கள் மெனக்கெட வேண்டும். அந்த மாதிரியான மெனக்கெடலும் உழைப்பும் நுண்ணுணர்வும் தமிழில் மிகக் குறைவு. படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காக வணிக சமரசங்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்குநர்கள், கதையின் ஜீவனை அப்படியே கை விட்டு விடுவார்கள்.

இதற்கு மாறாக சுமாரான எழுத்தைக் கூட சிறந்த சினிமாவாக மாற்றி விடும் மகத்தான கலைஞர்களும் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் முதன்மையானவராக இயக்குநர் மகேந்திரனைச் சொல்லலாம். ‘’தரமான சினிமாவை தமிழில் பார்த்து விட முடியாதா?..’’ என்கிற ஆதங்கத்திலும் கோபத்திலும் சினிமாப் பயணத்தில் தற்செயலாக விழுந்த மகேந்திரன், ஆரம்ப காலக்கட்டத்தில் ‘தங்கப்பதக்கம்’ போன்ற வெகுசன திரைப்படங்களுக்கான கதை, வசனத்தைத்தான் எழுத முடிந்தது. ஆனால் இயக்குநரான பின்பு அவர் நிகழ்த்திய அசாதாரணமான சாதனைகள் அநேகம். 

இயக்குநர் மகேந்திரன்

மகேந்திரன் என்கிற மகத்தான கலைஞன்

எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து சினிமாவை உருவாக்கிய இயக்குநர்களில் முதன்மையானவராக மகேந்திரனைச் சொல்லலாம். சில திரைப்படங்கள் தவிர, மகேந்திரன் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள், எழுத்தாளர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டவைதான். ‘’ஒரு நல்ல கதை கிடைக்கலை சார்… அது மட்டும் கிடைச்சுதுன்னா…’’ என்று பாவனையாக அனத்தும் பல இயக்குநர்கள், தமிழ் இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களை அறியாமல் ‘சீன் போடுவது’ நகைப்புக்கு உரியது. 

சினிமா தொடர்பாக நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் வணிக சினிமா இயக்குநர் ஒருவர் பேசும் போது “தமிழ்ல நல்ல சினிமா அதிகமா வரலைன்னு சொல்றாங்க.. நல்ல ஸ்கிரிப்ட் இருந்தா கொண்டாங்க… பார்க்கலாம்’’ என்று சவால் விடுவது போல பேசிக் கொண்டே சென்றார். அந்தக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்ததே ஒரு பெரிய நூலகத்தின் கட்டிடத்திற்குள்தான். சவால் விட்ட இயக்குநர் சற்று நேரம் நூலகத்தைச் சுற்றிப் பார்த்து புத்தகங்களைப் புரட்டிப் பார்த்திருந்தால் கூட இப்படியொரு கேள்வியை பொதுவில் முழங்கியதற்கு நாணி கூசியிருப்பார். “சிவகாசியில் இருந்து கொண்டே தீப்பெட்டியைத் தேடுபவர்கள் இவர்கள்” என்று இந்த மாதிரியான இயக்குநர்களைப் பற்றி நையாண்டியாக சொன்னார் மகேந்திரன். 

உதிரிப்பூக்கள்

புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ என்னும் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம், இன்றளவும் ஒரு கிளாஸிக் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. சினிமாவின் பிரத்யேக மொழியை அறிந்தவர் மற்றும் வாசிப்பு அனுபவம் மிக்கவர் மகேந்திரன் என்பதால் இது சாத்தியமானது. இத்தனைக்கும் அந்தக் குறுநாவலுக்கும் மகேந்திரன் இயக்கிய சினிமாவிற்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. எழுத்தில் இருந்த இரண்டு இளம் கதாபாத்திரங்களின் பாதிப்பு மட்டுமே மகேந்திரனைச் செலுத்தியது. 

குறுநாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெரிதும் தொடர்பேயில்லை என்றாலும் கூட தமக்கு பாதிப்பை ஏற்படுத்தின படைப்பிலிருந்து உருவான திரைக்கதை என்பதால் புதுமைப்பித்தனின் குடும்பத்தை தேடிப் போய் அதற்கான உரிய மரியாதையை செய்திருக்கிறார் என்பதை அறியும் போது மகேந்திரனின் மீதான பிரியம் மேலும் கூடுகிறது. அயல் சினிமாக்களின் டிவிடிகளிலிருந்து மொத்தமாகவோ துண்டு துண்டாகவோ கதையையும் காட்சிகளையும் உருவி விட்டு "ஆக்சுவலி பார்த்தீங்கன்னா.. இது ரொம்பவும் டிஃப்ரண்டான ஸ்கரிப்ட்" என்று அலட்டிக் கொள்ளும் அழுகுணி இயக்குநர்கள், மகேந்திரனின் இந்த அரிய பண்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

முள்ளும் மலரும்

உமா சந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’ என்பது வெகுசன பாணியில் அமைந்த சுமாரான நாவல்தான். ஆனால் அதில் விவரிக்கப்பட்டிருந்த அண்ணன் - தங்கை பாத்திரங்களினால் பாதிக்கப்பட்ட மகேந்திரன், அந்த நாவலை ‘முள்ளும் மலரும்’ என்கிற மகத்தான சினிமாவாக மாற்றினார். பூட்டாத பூட்டுக்கள் (பொன்னீலன்), நண்டு (சிவசங்கரி), சாசனம் (கந்தவர்வன்) என்று மகேந்திரன் இயக்கிய சிறந்த திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் எழுத்தாளர்களின்  படைப்புகளை அடிப்படையாகக் கொண்டவைதான். 

இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்க வேண்டிய பாலம்

ஆக இலக்கியத்திற்கும் சினிமாவிற்கு நெருக்கமான பிணைப்பும் உறவும் இருந்தால் அங்கு நல்ல சினிமாக்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மலையாளத்தில் அவ்வாறான சூழல் இருப்பதால், வணிக முயற்சிகளைத் தாண்டியும் சிறந்த சினிமாக்கள் உருவாகின்றன. அதன் தொடர்ச்சியே சமீபத்தில் புதிய தலைமுறை இயக்குநர்களின் மூலம் அடைந்திருக்கும் மறுமலர்ச்சிக் காலக்கட்டம். 

எழுத்தாளர்களாக இருந்து இயக்குநர்களாகவும் திரைக்கதையாசிரியர்களாகவும் மாறியவர்கள் மலையாள சினிமாவில் அதிகம். தமிழில் அம்மாதிரியான முன்னுதாரணங்கள் மிகக்குறைவு. ‘‘வெகுசனப் பத்திரிகைகளில் இலக்கியத்தரமான கதைகள் இல்லை என்கிற வசை என்னால் கழிந்தது’’ என்று பெருமிதமாகச் சொன்ன ஜெயகாந்தனை அந்த வரிசையில் முதன்மையானவராகச் சொல்ல முடியும். தமிழ் சினிமா ஏன் இப்படி கேடு பிடித்துக் கிடக்கிறது என்கிற கோபத்திலும் ஆதங்கத்திலும் தானே களத்தில் இறங்கியவர் ஜெயகாந்தன். அங்கு அவர் முட்டி மோதி அடைந்த பாடுகள், ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு தனி நூலாகவே எழுதப்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து பேசுவோம்… 

சுரேஷ் கண்ணன் தொடரின் அடுத்தப்பகுதி வரும் வெள்ளிக்கிழமை (23-08-2024) அன்று வெளியாகும்!