சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’… சிவகார்த்திகேயனுடன் ‘SK23’… பவர்ப்ளே ஆடும் ஏ.ஆர்.முருகதாஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்குமார் நடித்த ‘தீனா’ படம் மூலம் தமிழ்சினிமாவுக்குள் இயக்குநரான அறிமுகமான முருகதாஸ் ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி' எனப் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
விஜய்யின் ‘கத்தி'க்குப்பிறகு இவர் இயக்கிய ‘ஸ்பைடர்’, ‘சர்க்கார்’, ‘தர்பார்' என எந்தப்படமும் சூப்பர் ஹிட் ஆகவில்லை. ரஜினியை வைத்து இயக்கிய ‘தர்பார்' படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தையும், சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்' படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் முருகதாஸ்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படம் என்பதால் ‘SK23’ என அழைக்கப்படும் இந்தப்படத்தின் இரண்டு ஷெட்யூல்களை முருகதாஸ் இயக்கிமுடித்துவிட்டார். சிவகார்த்திகேயனோடு இந்தப்படத்தில் விக்ராந்த், பிஜு மேனன், டான்ஸிங் ரோஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக ‘துப்பாக்கி' படத்தில் நடித்த வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். ‘துப்பாக்கி' படத்தின் சாயலிலேயே சிவகார்த்திகேயன் படத்துக்கான ஸ்டில்ஸும் வெளியாகியிருப்பதால் ஒருவேளை முருகதாஸ் 'துப்பாக்கி 2' எடுக்கிறாரோ என செய்திகள் பரவுகின்றன. இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதற்கிடையே சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பையும் நேற்று தொடங்கிவிட்டார் முருகதாஸ். 'சிக்கந்தர்' படத்தில் ராஷ்மிகா மந்தனா சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிக்கந்தர் என்றால் பெர்ஷிய மொழியில் போர்வீரன் என அர்த்தம்.
ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் கடுமையாக வேலைகளை இழுத்துப்போட்டு செய்துகொண்டிருக்கிறார் முருகதாஸ். தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்தவன் என்கிற அவப்பெயரை மாற்ற கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும், 'சிக்கந்தர்' அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.