முன்னணி இயக்குநர்கள் எப்படி ‘வாழை’, ‘கொட்டுக்காளி'யைக் கொண்டாடுகிறார்கள்? மோலிவுட் Vs கோலிவுட் - 6
தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் மலையாள சினிமாவை தொடர்ச்சியாக கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை ஆராயும் விதமாகத்தான் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிலைமையில் இப்போது ஒரு புதிய மறுமலர்ச்சியான மாறுதல் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆம், ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ ஆகிய இரண்டு தமிழ் சினிமாக்களைப் பற்றிய உரையாடல் பெருகியிருக்கிறது. இரண்டுமே சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள். சினிமா ரசனையும் நுண்ணுணர்வும் உள்ள இயக்குநர்களால் உருவாக்கப்பட்டவை. ‘கொட்டுக்காளி’யின் இயக்குநரான பி.எஸ்.வினோத்ராஜின் முந்தைய திரைப்படமான ‘கூழாங்கல்’ சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்தது. பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்றது. இப்போது வெளியாகியிருக்கும் ‘கொட்டுக்காளி’யும் அதே போன்ற அங்கீகாரத்தை பெற்று வருகிறது.
கவனத்தைப் பெறும் ‘வாழை’யும் ‘கொட்டுக்காளி’யும்
ஒரு சிறிய பயணத்தின் மூலமாக, ஆணாதிக்க உலகத்தையும் அதை தன்னுடைய பிடிவாதமான மௌனத்தால் உக்கிரமாக எதிர்கொள்ளும் பெண்ணின் உலகத்தையும் மிகச் சிறப்பான திரைமொழியில் ‘கொட்டுக்காளி’ படத்தின் வழியாக பதிவு செய்திருக்கிறார் பி.எஸ்.வினோத்ராஜ்.
அதைப் போலவே கவனத்திற்குரிய படங்களை தொடர்ச்சியாக உருவாக்கி வரும் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படமும் பேசுபொருளாகியிருக்கிறது. படிப்பும் விளையாட்டுமாய் இருக்க வேண்டிய வயதில் பணிச்சுமையின் பளுவைத் தாங்க இயலாமல் தள்ளாடும் சிறார்களின் வலியை இயல்பான காட்சிகளின் மூலம் விவரித்து மனம் கலங்க வைக்கிறது ‘வாழை’. உழைப்புச் சுரண்டல் என்பது பெரியவர்களின் உலகத்தைத் தாண்டி சிறுவர்களின் மீதும் நிகழ்த்தப்படுகிற சமூக அவலத்தை கலையமைதியுடன் கூடிய அரசியல்மொழியில் இந்தப் படம் பேசுகிறது.
‘கொட்டுக்காளி’, ‘வாழை’ ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களையும் பற்றி ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் படைப்பாளிகளும் இயக்குநர்களும் இணைந்து கொண்டாடுவதுதான் இந்தச் சூழலின் மகத்துவத்தை இன்னமும் அதிகப்படுத்துகிறது. ஆம், முன்பெல்லாம் தமிழில் ஒரு நல்ல மாற்று முயற்சி வந்தால் இதர இயக்குநர்கள் பொதுவாக அதைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். நல்ல சினிமா வரவேண்டும் என்று மனதார விரும்புகிற கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் மட்டும் அவற்றைப் பாராட்டி பொதுவில் உரையாடுவார்கள். சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு கடிதம் எழுதி மகிழ்வார்கள். மற்றபடி ஒருவகையான கள்ளமௌனம் மட்டுமே நிகழும். அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல மாற்று முயற்சி தோற்றுப் போனால் அதற்கு உள்ளூற ரசித்து மகிழ்கிற கமர்சியல் இயக்குநர்களும் உண்டு. “ஆர்ட் பிலிமாமாம்’ என்று எள்ளலான மனநிலையில்தான் இந்த முயற்சிகளை அணுகுவார்கள்.
ஆனால் இப்போதைய நிலைமை அப்படியல்ல. இலக்கிய வாசிப்பும் நல்ல சினிமாவைத் தர வேண்டும் என்று மனதார விரும்பக்கூடிய, அதை செயல்படுத்துவதற்காகவும் போராடுகிற இயக்குநர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு திரைப்படங்களையும் பற்றி மற்ற இயக்குநர்கள் சிலாகித்துப் பேசி மகிழ்கிறார்கள். இந்தப் படங்களைப் பற்றி மேடைகளில் மிஸ்கின் வாயாரப் புகழ்கிறார். மாரி செல்வராஜின் படத்தைப் பார்த்து விட்டு அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு மௌனமான கனத்துடன் அமர்ந்திருக்கிறார் பாலா. தன்னுடைய சீடனின் திறமையைப் பார்த்து பரவசப்படுகிறார் ராம்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்காக போலியான, செயற்கைத்தனமான பாணியில் நம் தலை மீது குப்பை போல் கொட்டப்படும் பிரமோஷன்களையே பார்த்து பார்த்து அருவருப்பும் சலிப்பும் அடைந்திருக்கும் நமக்கு, இம்மாதிரியான ஆத்மார்த்தமான பாராட்டுக்களும் புகழுரைகளும் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன.
மலையாளத்தைப் போலவே தமிழிலும் உருவாகுமா மறுமலர்ச்சி?
கொரானோ காலக்கட்டத்தில் ஏற்பட்ட தொய்விற்குப் பிறகு மலையாள சினிமாவுலகில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியைப் போலவே தமிழ்த் திரையிலும் மாற்று முயற்சிகள் கவனத்திற்கு உள்ளாகத் துவங்கியிருப்பதின் ஆரம்ப அடையாளமாக ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ போன்ற படங்களின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு மென்மேலும் பெருகினால் இந்த புதிய டிரெண்ட் ஆரோக்கியமான முறையில் வளர்ந்து மலையாள சினிமாக்களைப் போலவே ஒரு மறுமலர்ச்சியான காலக்கட்டத்திற்குள் நாமும் நுழையக்கூடும்.
அதற்காக சமீப காலக்கட்ட தமிழ் சினிமாவில் சிறந்த முயற்சிகள் உருவாகவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ‘மகராஜா’, ‘லவ்வர்’, ‘ஜே.பேபி’, ‘விடுதலை-1’, ‘யாத்திசை’, ‘குட்நைட்’, ‘எறும்பு’, ‘தண்டட்டி’, ‘சித்தா’, ‘கிடா’, ‘பார்க்கிங்’, ‘கண்ணகி’, ‘கடைசி விவசாயி’, ‘டாணாக்காரன்’, ‘சேத்துமான்’ போன்ற நல்ல முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் சில திரைப்படங்கள் பரவலாக கவனிக்கப்பட்ட நிலையில், மற்ற திரைப்படங்கள் கவனிப்பாரன்றி முடங்கின என்பதுதான் பரிதாபம்.
மெகா பட்ஜெட் படங்களுடன் இவற்றால் வணிகரீதியாக போட்டி போட முடியாது. அதிக அளவில் விளம்பரங்களோ, ப்ரமோஷன்களோ செய்ய முடியாது. திரையரங்குகள் எளிதில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், ரசனையுள்ள ரசிகர்களின் வாய்மொழி மூலம் இதன் சிறப்பு பரவி, மேலும் ரசிகர்கள் வருவதற்குள் ‘அரங்கு போதுமான அளவு நிறையவில்லை’ என்கிற காரணத்தைக் காட்டி படத்தை ஒரே நாளில் தூக்கி விடுவார்கள்.
மாற்று முயற்சியில் அமைந்த ஒரு நல்ல சினிமாவை ஒருவர் தயாரிக்க முன்வருவதே ஆகக் கடினமான காரியம். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அதை தயாரித்து விட்டாலும் கூட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் அதைவிடவும் பெரிய சிரமமான விஷயமாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால் திரையரங்கிற்கு வராமல் அப்படியே முடங்கிப் போயிருக்கும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏராளம். இவற்றின் தயாரிப்புச் செலவுகளும் கோடிக் கணக்கான ரூபாயில் கூடவே முடங்கி விடுவது கொடுமையான விஷயம்.
எண்பதுகளின் பொற்கால தமிழ் சினிமா
தமிழ் சினிமாவின் வரலாற்றைப் பார்த்தால் எண்பதுகளில் ஓர் அருமையான காலக்கட்டம் மலர்ந்தது. சர்வதேச அளவில் விருதுகள் பெறும் திரைப்படங்களின் தாக்கம் மற்றும் தமிழிலும் இது போன்ற சினிமாக்கள் வரவேண்டும் என்கிற தனிப்பட்ட ஆர்வம் போன்றவை காரணமாக ஒரு புதிய மறுமலர்ச்சியான சூழல் தோன்றியது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, ஜெயபாரதி, ஹரிஹரன், ஜான் ஆபிரகாம் போன்ற இயக்குநர்கள் தங்களின் சிறந்த முயற்சிகளை முன்வைத்தார்கள்.
எண்பதுகளில் உருவாகிய அந்த மறுமலர்ச்சிக் காலக்கட்டம் மெல்லப் பரவி நிலை பெற்றிருக்குமானால், மலையாளத்தைப் போலவே தமிழிலும் வணிகத் திரைப்படங்களின் அலையைத் தாண்டி நல்ல சினிமாக்களும் தொடர்ந்து வந்திருக்கக்கூடும். ஆனால் ‘சகலகலா வல்லவன்’, ‘முரட்டுக்காளை’ போன்ற திரைப்படங்களின் பிரமாண்டமான வணிக வெற்றி, இந்த மாற்று முயற்சிகளின் அலையைக் கவிழ்த்துப் போட்டது. முளையிலேயே செடியைக் கிள்ளி எறிந்தது போல, வணிகச் சூழல் நல்ல சினிமாக்களின் உருவாக்கத்தை ஆரம்பத்திலேயே கருக வைத்து விட்டது.
நல்ல திரைப்படங்கள் உருவாவதற்கு ரசிகர்களின் பங்களிப்பும் அவசியம்
ஒரு சமூகத்தில் கலையிலக்கியம் செழித்து வளர்வதற்கு சிறந்த படைப்பாளிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அவற்றை நுகரும் ரசிகர்களிடமும் இது சார்ந்த ரசனை செழுமையாக இருந்தால்தான் ஆரோக்கியமான சூழல் மலரும். இதற்கான பொறுப்பு எல்லோரிடமும் உள்ளது. குடும்பம், பள்ளி, சமூகம் என்று அனைத்து நிறுவனங்களிலும் உள்ள பெரியவர்கள், தங்களின் ரசனையைப் பட்டை தீட்டிக் கொள்வது மட்டுமல்லாது, தங்களது பிள்ளைகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே சிறந்த இலக்கியம், எழுத்தாளர்கள், சினிமாக்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஒரு சராசரி மனிதனுக்கு பொழுதுபோக்கு என்பது தேவைதான். ஆனால் அந்த எல்லையிலேயே நின்று தேங்கி விடாமல் தங்களின் அறிதல், நுண்ணுணர்வு, சமூக அக்கறை போன்றவற்றையும் கூடவே வளர்த்துக் கொள்வதுதான் ஆரோக்கியமான சமூகம் மலர்வதற்கு அடிப்படையான காரணங்களாக இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த இயக்குநர்களும் அவர்களின் படைப்புகளும் உருவாவதைப் போலவே சிறந்த ரசிகர்களும் கணிசமான எண்ணிக்கையில் பெருகினால் அந்தத் திரைப்படங்களின் வெற்றி மேலும் பல சிறந்த படங்கள் தமிழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்கும்.
அப்படியொரு சூழல் மலரும் போது மலையாளம் என்றல்ல, எந்தவொரு அயல்மொழித் திரைப்படத்திற்கும் ஈடான சிறந்த சினிமா தமிழிலும் உண்டு என்று நாம் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகும். அப்படியொரு நிலை வரும் போது சமூகவலைத்தளங்களில் சிறந்த தமிழ் சினிமாக்களைப் பற்றிய உரையாடல் பெருகும். இப்போதைய காலக்கட்டத்தில் ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ போன்ற படங்கள் அடைந்து வரும் கவனத்தை இதற்கான ஆரம்ப அடையாளம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
நிறைவடைந்தது