ஷங்கர், கமல்ஹாசன்
ஷங்கர், கமல்ஹாசன்

ஷங்கர் எனும் கலைஞன் வியாபாரியாக மாறி தோற்றுப்போனதன் அடையாளமே 'இந்தியன்-2' - சுரேஷ் கண்ணன் தொடர் - 3

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட வீழ்ச்சியின் அடையாளமாக மாறியிருக்கும் 'இந்தியன் -2' படத்தைப் பற்றியும், ஷங்கரின் திரைக்கதை நுணுக்கங்கள் ஏன் 'இந்தியன் - 2'வில் தோல்வியடைந்தது என்பது பற்றியும் சுரேஷ் கண்ணன் ஆராய்ந்து எழுதும் தொடரின் மூன்றாம் பகுதி இங்கே!
Published on

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் 1996-ல் வெளியானது. அதாவது இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு. ஆனால் இன்றைக்குப் பார்த்தாலும் அத்தனை எண்டர்டெயினிங்காக இருக்கிறது. ஒரு வெகுசன திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு கச்சிதமான கலவை. ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். 

சுவாரஸ்யமான திரைக்கதை, அசர வைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி,  இன்றைக்குப் பார்க்கும்போது சற்று அமெச்சூராக தெரிந்தாலும் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள VFX மாய்மாலங்கள், ரஹ்மானின் அட்டகாசமான பாடல்கள், பின்னணி இசை, சுஜாதாவின் குண்டூசி, கடப்பாறை குத்தல் வசனங்கள், கமல்ஹாசனின் பிரமாதமான நடிப்பு, கவுண்டமணி + செந்தில் கூட்டணியின் நகைச்சுவை போன்ற சமாச்சாரங்கள் இந்தத் திரைப்படத்தை  இன்று பார்த்தாலும் கூட சுவாரசியமான அனுபவமாக ஆக்குகிறது.

ஷங்கர், கமல்ஹாசன்
ஸ்பில்பேர்கின் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’டும், ஷங்கரின் ‘இந்தியன்’ வாக்குமூலமும்! சுரேஷ் கண்ணன் தொடர் - 2

எனில் இதன் அடுத்த பாகத்தின் மீது பார்வையாளர்களுக்கு தன்னிச்சையாக ஒரு பயங்கர எதிர்பார்ப்பு உண்டாகும் அல்லவா? மேலும் இந்த எதிர்பார்ப்பை பிரமோஷன்களின் மூலம் மேலும் ஊதிப் பெருக்குவதே சினிமாக்காரர்கள்தானே?! முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் அசத்தலாக இருக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கொலைவெறியுடன் எதிர்பார்ப்பார்கள் என்பது ஷங்கருக்கு தெரியாமலா இருந்திருக்கும்?! நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் எப்போதுமே கடைக்கோடி ரசிகனின் எதிர்பார்ப்பைக் கூட பூர்த்தி செய்ய அசாதாரணமாக மெனக்கிடும் இயக்குநர். 

பார்வையாளர்களின் மீது வர்மத்தை கக்கிய இந்தியன் 2!

ஆனால் இந்த எதிர்பார்ப்பிற்கு… பெரும்பாலும் கூட வேண்டாம்… சிறிது கூட ‘இந்தியன் 2’ நியாயம் செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கொரானோ காலகட்டம், படப்பிடிப்பில் நடந்த விபத்து, கமலின் தேர்தல் பணி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த ப்ராஜெக்ட் இழுபறியாக பயணித்ததைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஒரு முழு டைனோசரை, முட்டை பிரியாணிக்குள் மறைக்க முயல்வதைப் போல, ஒரு முழு நீள பாகத்தையே ‘இந்தியன் 2’ எனறு நைசாக லேபிள் இட்டு வணிகமாக்க முயன்றது யாருடைய குற்றம்?  இரண்டாம் பாகத்திற்காக உருவாக்கிய ஃபுட்டேஜ்கள் ஆறு மணி நேரத்திற்கு நீண்டு விட்டதால் அதை இரண்டாக துண்டித்து பிஸ்னஸ் ஆக்க முயன்ற டெக்னிக் தோற்றுப் போய் பூமராங் மாதிரி திருப்பியடித்து விட்டதா?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

'’ஒரு கலைஞன் வியாபாரியாகும் போது தோற்றுப் போகிறான்’’ என்பது ஒரு பொன்மொழி. ஷங்கர் உருவாக்குகிற திரைப்படங்கள் அப்பட்டமான வணிக நோக்கம் கொண்டவைதான். மறுப்பில்லை. ஆனால் அவை ரசிகர்களை எப்போதுமே ஏமாற்றாத வகையில் ஃபுல் மீல்ஸ் சாப்பாடாக இருக்கும். ஆங்காங்கே சுவை முன்னே பின்னே இருந்தாலும் ரசிகர்கள் திருப்தியுடன் வெளியே செல்வார்கள். ஆனால் ‘இந்தியன் -2’ ‘’வேண்டாவெறுப்பாக புள்ளைய பெத்துட்டு காண்டாமிருகம்ன்னு பெயர் வைத்த கதையாக’’ மாறிப் போயிருக்கிறது. 

ஷங்கர், கமல்ஹாசன்
‘இந்தியன் 2’ ரிஜெக்டட்… ஷங்கரின் வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன? - சுரேஷ் கண்ணன் எழுதும் மினி தொடர் - 1

இதை படக்குழுவினர் முன்பே யூகித்து வைத்திருந்தார்ளோ, என்னமோ!. ‘ஹிஹி.. இது டிரெய்லர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான்” என்கிற மாதிரி இரண்டாம் பாகத்தின் இறுதியில், ‘இந்தியன் -3’ன் பகுதியை சற்று காண்பித்து ‘நன்றி மீண்டும் வருக!’ என்று ஆசை காட்டியிருக்கிறார்கள். “ஒருத்தனை ஏமாத்தணும்னா.. அவனோட ஆசையைத் தூண்டனும்” என்கிற ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் வசனம் நினைவிற்கு வருகிறது. 

இரண்டாம் பாகத்தைப் பார்த்து எழுந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் முதல் பாகத்தைப் பார்த்துதான் ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசமே இந்த இரண்டிற்கும் உள்ளது. 

அட்டகாசமான முறையில் எடுக்கப்பட்டிருந்த இந்தியன் 1

இந்தியன் முதல் பாகத்தில் உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைய இருந்தன. அவை சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டு அழுத்தமாக வெளிப்பட்டன. இதனால் பார்வையாளர்களுக்கும் திரைக்கதையுடன் உணர்ச்சிரீதியான பிணைப்பு ஏற்பட்டது. இரண்டு காட்சிகளை மட்டும் உதாரணத்திற்குப் பார்ப்போம். 

ஒன்று மனோரமா வயிறெரிந்து மண்ணைத் தூற்றி சாபமிடும் காட்சி. சாலையோரத்தில் செருப்பு தைக்கும் கணவன், போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக இறந்து விடுவார். அரசாங்கம் அறிவித்திருக்கும் நஷ்டஈட்டுத் தொகையை பெறுவதற்காக கருவூல அலுவலகத்தின் வாசலில் பழியாக கிடப்பார் மனோரமா. அங்குள்ள சிறுதெய்வங்கள் அனைத்திற்கும் முறையான படையலை இட்டிருப்பார். மாற்றுத் துணிக்கு கூட வழியில்லாத அளவிற்கு அனைத்தையும் இழந்திருப்பார். தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகை்காக சூதாட்டம் போல கடைசிப் பொருள் வரை பணயம் வைத்திருப்பார். 

ஆனால் காரியம் கனியும் சமயத்தில் பெருந்தெய்வம் ஒன்று குறுக்கிடும். ஆயிரம் ரூபாயை தட்சணையாகக் கேட்கும். “ஐயா.. கொடுக்கறதுக்கு ஒண்ணுமே இல்லய்யா” என்று மனோரமா அழுது கதறினாலும் அது மனம் இறங்கி வராது. “வேண்டுதலுக்கு முடிஞ்சு வெச்ச காசு இருக்கு… அத வேணா எடுத்துக்கிட்டு செக்கை கொடுத்துருங்கைய்யா” என்று இந்த சூதாட்டத்தில் கடைசியாக எஞ்சியுள்ளதை மேஜையில் எடுத்து வைப்பார் மனோரமா.

“சோத்துக்கு இல்லைன்னாலும் உங்களுக்கெல்லாம் திமிருக்கு குறைச்சல் இல்லை. மாரியாத்தா காசை கொடுத்து என் குடும்பத்துக்கு சாபம் விடறியா... உனக்கு செக்கு கிடையாது. போ வெளியே..” என்று பெரிய அதிகாரி எரிச்சலில் துரத்தும் போது அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் மனோரமாவிற்குள் பெருக ஆரம்பிக்கும். “ஏன்.. போகணும்.. எதுக்கு போகணும்... ஒரு சர்ட்டிபிகேட் விடாம கொடுத்திருக்கேன்” என்று ஆங்காரத்துடன் பேச ஆரம்பிப்பார்.

ஷங்கர், கமல்ஹாசன்
Indian 2 விமர்சனம் : ஊழல் செய்திருப்பது வில்லன்களா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியா?!

உணர்ச்சிகரமான நடிப்பைத் தந்திருந்த மனோரமா

அவருடைய மனு காகிதங்களை அப்படியே கசக்கி கிழித்து எறியும் அதிகாரி “நீ முனுசாமிக்கு பொண்டாட்டி இல்ல… கூத்தியான்னு சொல்றேன்… இப்ப என்ன பண்ணுவே… போ… வெளியே” என்றவுடன் மனோரமாவுக்கு பணம் வாங்கும் பிரச்சனை பின்னால் போய் தன்மானவுணர்வு முன்னுக்கு வந்து விடும். “என்னடா சொன்னே… பிச்சைக்கார நாயே... யாரைப் பார்த்து கூத்தியான்னு சொல்ற… ஏழைங்க வயத்துல அடிக்காதடா” என்று ஆத்திரமும் அழுகையுமாக பேச ஆரம்பிக்க, பியூன் மூலமாக வெளியே அப்புறப்படுத்தப்படுவார். 

மனோரமா, கமல்ஹாசன், நாகேஷ்
மனோரமா, கமல்ஹாசன், நாகேஷ்

பொதுமக்கள் முன்னிலையில் அலுவலகத்தின் வாசலில்  நின்று வயிறு எரிந்து மண்ணை வாரித் தூற்றி “லஞ்சம் வாங்கற உங்க கையெல்லாம் புழுத்துப் போகணும்.. பொணத்து வாயில இருந்து கூட அரிசிய புடுங்கித் திம்பீங்க... நீங்கள்லாம் நாசமாப் போகணும்” என்று சாபமிடும் காட்சியில் சன்னதம் வந்த சாமி போல அத்தனை ஆக்ரோஷமாக நடித்திருப்பார் மனோரமா. சிறிய காட்சிதான் என்றாலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிகாரியாக பாலாசிங்கும் பாதிப்பு அடைந்த ஏழைப் பெண்மணியாக மனோரமாவும் தங்களின் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருப்பார்கள். 

மனோரமா வெளிப்படுத்தும் அந்த ஆக்ரோஷமான கோபமும் சாபமும் அவருடையது மட்டுமல்ல. அதை வெறும் நடிப்பு என்று சுருக்கி விட முடியாது. பொதுமக்களில் கணிசமானவர்கள், குறிப்பாக அடித்தட்டு மக்களும் கீழ் நடுத்தர வர்க்க மக்களும் தங்களின் மனங்களில் இருந்து வெளிப்படுத்துபவை. 

இந்தியன் கமல்ஹாசன்
இந்தியன் கமல்ஹாசன்

அடித்தட்டு மக்களின் கோபத்தைப் பிரதிபலித்த தருணங்கள்

அரசாங்க அலுவலகத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் தன்னிச்சையாக  ஏற்படும் பதட்டத்தையும் மனஉளைச்சலையும் எதிர்கொள்ளாத மிடில்கிளாஸ் ஆசாமியே இருக்க முடியாது. அரசு இயந்திரத்தின் மெத்தனமும் அதிகாரிகளின் அலட்சியமான அலைக்கழிப்பும் நமக்குள் ஏற்படுத்தும் கோபமும் அதை எதிர்க்க முடியாத எரிச்சலும் மனதில் ஒரு வெறுப்புப் பந்தாக உறைந்திருக்கும். அந்த வெடிகுண்டின் திரியைப் பற்ற வைக்குமளவுக்கு மனோரமாவின் நடிப்பு சிறப்பாக இருக்கும் போது “ஆமாம் ஆத்தா… நல்லா கேளு… அய்யோ பாவம்” என்று அவருடைய ஆத்திரம் பார்வையாளனுக்குள்ளும் பரவும். நம்மை அவருடைய நிலையில் நிறுத்தி பரிதாபம் பெருகி வழியும். 

தைக்கத் தந்திருந்த தன்னுடைய இடுப்பு பெல்ட்டை தேடி வரும் ‘இந்தியன்’ தாத்தா, இந்தக் கொடுமையான சூழலைக் கண்டு இரக்கமே காட்டாத அரசு அதிகாரிக்கு தானும் கருணையே காட்டாமல் மரண தண்டனை அளிப்பார். குடோனை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியவரை “யாரு நீங்க.. எந்த டிபார்ட்மென்ட்?” என்று அதிகாரி விசாரிக்க “களை புடுங்கற டிபார்ட்மெண்ட்” என்று தாத்தா நச்சென்று சொல்லும் வசனம், கத்தியால் குத்தப்பட்டு சரியும் அதிகாரியின் வாயில் மூட்டையின் கிழிசலில் இருந்து சரியும் அரிசி கொட்டுவது என்று இந்தத் தண்டனைக் காட்சி வரும் போது “அப்படித்தான் குத்துங்க எஜமான்… குத்துங்க” என்று பார்வையாளனும் இணைந்து உணர்ச்சிவசப்படுவான். 

ஷங்கர், கமல்ஹாசன்
லைகாவின் சாம்ராஜ்யத்தையே முடித்துவிட்டாரா ஷங்கர்… ‘இந்தியன் - 3' படத்துக்கானப் பின்னணி என்ன?!

இதே போல் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்திலும் மனோரமாவின் நடிப்பு உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். மகனுடைய படிப்பிற்கு மேடையில் ஜம்பமாக வாக்களித்து விட்டு தனிச்சந்திப்பில் லஞ்சம் கேட்கும் கல்வி அமைச்சரிடம் உருக்கமாக வேண்டும் போதும் சரி, பணத்தை ஈட்டுவதற்காக தன்னையே எரித்துக் கொள்ளும் காட்சியிலும் சரி, நெகிழ வைக்கும் நடிப்பை மனோரமா தந்திருப்பார். 

இம்மாதிரியான உணர்ச்சிகரமான தருணங்களை காட்சிகளாக உருவாக்குவது திரைக்கதையின் முக்கியமான பலம் என்கிற இலக்கணத்தை அறியாதவர் அல்ல ஷங்கர். ஆனால் ‘இந்தியன் -2’ல் இப்படியொரு எந்தவொரு காட்சியுமே மனதில் நிற்கவில்லை. பார்வையாளர்களால் எங்குமே எமோஷனலாக கனெக்ட் ஆக முடியவில்லை. ‘’செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்ததைப் போல’’ என்றொரு உள்ளூர் பழமொழி இருக்கிறது. அதைப் போல எவ்வித உணர்ச்சிப் பிணைப்பும் இல்லாமல்தான் இந்தியன் -2வை பார்க்க வேண்டியிருந்தது. கமல்ஹாசனின் ஒட்டாத பிளாஸ்டிக் ஒப்பனையைப் போலவே எந்தவொரு காட்சியும் பார்வையாளனின் மனதில் ஒட்டாததுதான் இந்தியன் தாத்தா இரண்டிற்கு கிடைத்த பரிதாபமான தோல்விக்கு காரணம் எனலாம். 

இது மட்டும்தானா? இன்னமும் நிறைய இருக்கின்றன!

தொடர்ந்து பேசுவோம். 

சுரேஷ் கண்ணன் தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளிக்கிழமை (26-07-2024) வெளியாகும்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com