ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் 
சினிமா

மனுநீதி சோழன் கதையும், ஷங்கரின் இந்தியன் தாத்தா கதையும் ஒன்றுதான் - சுரேஷ் கண்ணன் தொடர் - 4

தப்பிய ஆசுவாசத்தில் மகன் திட்டும் போது உறுமியபடி செல்லும் தாத்தா, ஒரு கணம் நிதானித்து பின்னால் திரும்பி மகனைப் பார்ப்பார். அந்தப் பார்வையில் இருப்பது கோபமா, ஆதங்கமா, பிள்ளையே தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்கிற மன வலியா… என்று பிரித்தறியவே முடியாது.

Suresh Kannan

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தில், மனோரமாவின் உணர்ச்சிகரமான நடிப்பு வெளிப்பட்ட தருணங்களை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதை விடவும் ‘இந்தியன் தாத்தா’ உருவாக்கியிருந்த பல நடிப்புத் தருணங்கள் அபாரமாக இருந்தன. 

உதாரணத்துக்கு ஒரு காட்சியைச் சொல்லலாம். தன்னுடைய பிரியமான மகள் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட தன் கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நிற்பார் இந்தியன் தாத்தா. லஞ்சம் தரப்படாத காரணத்தால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுவார். அதற்குள் மகளின் உயிர் பிரிந்து விடும். “நீதான்யா காரணம்... அப்பவே பணத்தைக் கொடுத்திருக்கலாம்ல” என்று மருத்துவமனை ஊழியர் அலட்சியமாக சொல்லி நகரும் போது ‘’நானா.. நானா காரணம்?” என்று குரல் தழுதழுக்க தாத்தா உடைந்து நொறுங்கும் போது நெகிழ்வடையாதவர்கள் எவருமே இருக்க முடியாது. 

இந்தியன் 1-ல் கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பு!

தன் மகள் இறந்த துக்கம் ஒருபுறம், இவர்கள் கடமையை ஒழுங்காகச் செய்யாமல் நேர்மையைப் பின்பற்றும் தன்மீது அந்தப் பழியை எளிதாக தூக்கிப் போடுகிறார்களே என்கிற வேதனை ஒருபக்கம்… என்று பல கலவையான உணர்ச்சிகளை ஒரே ஷாட்டில் வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் கடுமையான வேதனைதான் அவரை வன்முறைப் பாதையில் நடப்பதற்கான முடிவை எடுக்கச் செய்யும். பிறகுதான் களை பறிக்கும் கொலைச்சம்பவங்கள் களை கட்டும். 

இது மட்டுமல்லாமல், மகளுக்கு கொள்ளி போடும் சமயத்தில் அதை பிடுங்கிக் கொள்ளும் மகன், “நேர்மை, நேர்மைன்னு சொல்லி என் வாழ்க்கையை அழிச்சீங்க... இப்ப கஸ்தூரியையும் சாகடிச்சிட்டிங்க… மிச்சமிருக்கிறது அந்தக் கிழவிதான்… போங்க” என்று கொள்ளி போட விடாமல் துரத்தியடிக்கும் போது மகனை எதிர்த்து ஒரு சொல் கூட பேசாமல் கனத்த மௌனத்துடன் கடந்து போகும் போது தாத்தாவின் மனவலி நமக்குள்ளும் தன்னிச்சையாகப் பாயும். 

இந்தியன் - சுகன்யா, கமல்

இன்னொரு காட்சி. நாற்பது பள்ளிப் பிள்ளைகள் பேருந்து விபத்தில் செத்துப் போனதற்கு, லஞ்சம் வாங்கிய தன்னுடைய மகனே காரணமாக இருந்தான் என்பதை அறிந்து அவனையும் கொல்வதற்கு முனைவார் இந்தியன் தாத்தா. “அப்பா... உங்களுக்கு பல வருஷம் குழந்தை இல்லாம கோயில் கோயிலா ஏறி இறங்கி தவமிருந்து பெத்த பிள்ளை நான்… என்னைக் கொல்வீங்களா… என் மேல பாசமே இல்லையாப்பா?” என்று மகன் சென்டிமென்ட்டாக பேசி தப்பிக்க முயல “இன்ஸ்பெக்டருக்கு கலர் டிவி… பெத்த அப்பனுக்கு பாசமா?.. நான் உன் அப்பன்டா... எனக்கு குத்தாத... காது” என்று கத்தியுடன் பாய்வார். 

அதற்குள் அந்த அறையை போலீஸ் படை சூழ்ந்து கொள்ளும். அதையும் மீறி தாத்தா தப்பிக்க முயல ஒரு நாற்காலியை எடுத்து அப்பாவின் தலை மீது எறிவான் மகன். தடுமாறி போலீஸிடம் சிக்கிக் கொள்வார். “கொண்டு போய் தூக்குல போடுங்க சார்... பைத்தியம் பிடிச்ச நாயி… பெத்த பிள்ளய கொல்லுவானாம்.. கிழட்டு…” என்று உயிர் தப்பிய ஆசுவாசத்தில் மகன் திட்டும் போது உறுமியபடி செல்லும் தாத்தா, ஒரு கணம் நிதானித்து பின்னால் திரும்பி மகனைப் பார்ப்பார். அந்தப் பார்வையில் இருப்பது கோபமா, ஆதங்கமா, பிள்ளையே தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்கிற மன வலியா… என்று பிரித்தறியவே முடியாது. ஒரேயொரு பார்வையில் அப்படியொரு மகத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கமல்ஹாசன். 

வேட்டி, சட்டையில் வந்தவர்தான் சூப்பர் தாத்தா

ஆனால், ‘இந்தியன் -2’ல் அப்படி எந்தவொரு காட்சியையும் சொல்ல முடியவில்லை. வயதில் நூற்றைக் கடந்திருந்தாலும், நவீனமாக மாறியிருந்த தாத்தாவிடம் விதம் விதமான தோரணைகள் மட்டும்தான் வெளிப்பட்டன. மிகையான ஒப்பனையைத் தாண்டி உணர்ச்சிகரமான நடிப்பு என்பது தெரியாமல் போனதற்கு கமலை விடவும் அவருடைய கலைத்திறனை சரியாக கையாளாமல் போன ஷங்கரைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். நவீனமாக மாறியிருந்த தாத்தாவை விடவும் வேட்டி சட்டை அணிந்திருந்த அந்த எளிய தாத்தாவால் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிய முடிந்தது. 

வழக்கமான ஆக்ஷன் ஹீரோக்கள் போல எழுபது வயது தாத்தாவால் பறந்து பறந்து சண்டை போட முடியாது. எனவே உடம்பை அதிகம் அசைக்காமல் எதிரியை வீழ்த்துவதற்காக ‘வர்மக்கலை’ விற்பன்னர் என்பது போல் இந்தியன் தாத்தா வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது யூகம். எனவே இந்த லாஜிக் முதல் பாகத்தில் சரியாகவும் கம்பீரமாகவும் பொருந்தியிருந்தது. சிபிஐ ஆபிசர் கிருஷ்ணசாமியுடன் இடும் சிறிய சண்டைக்காட்சி தவிர, இதர தருணங்களில் தன்னுடைய வர்மக்கலை திறமையை வைத்தே எதிரியை வீழ்த்தி விடுவார் சேனாபதி.

சித்தார்த், ஷங்கர், கமல்

ஆனால் ‘இந்தியன்-2’ல் இந்த லாஜிக் நிறைய மீறப்பட்டிருந்தது. அதிலும் ஒற்றை சக்கர சைக்கிளில் நிகழும் சேஸிங் காட்சியானது, 29சி பேருந்தில் ஏறியது போல முடிவே இல்லாமல் நீளமாக பயணித்து நம்மைச் சோர்வாக்கியது மட்டுமல்லாமல் நம்பகத்தன்மையற்றும் இருந்தது. இதை விடவும், சட்டையைக் கழற்றி விட்டு தாத்தா சண்டை போடும் காட்சிகள் நகைப்பை உண்டாக்கியது. 

ரசிகர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வர்மத்தாக்குதல்

முதல் பாகத்தில் ஒவ்வொரு கொலைக்கும் முன்னால் அதற்கான வலுவான காரணம் முன்பே நிறுவப்பட்டிருந்தது. குற்றத்தை நிகழ்த்தியவர்கள் மீது வெறுப்பும் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாபமும் கணிசமாக வரும் அளவிற்கு பார்வையாளர்கள் தயார்படுத்தப்பட்டிருந்தார்கள். எனவே ‘குத்துங்க எஜமான் குத்துங்க’ என்று ரசிகனும் அந்த வன்முறையில் உற்சாகமாக பங்கேற்றான். ஆனால் இரண்டாம் பாகத்தில் இந்த முன்கதை உணர்ச்சிகரமாக அமைக்கப்படவில்லை.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் தாத்தாவால் விதம் விதமாக கொல்லப்படும் போது, பார்வையாளானால் எவ்வித எமோஷனல் கனெக்ட்டும் இல்லாமல் அசுவாரஸ்யமாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதிலும் ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் வர்மக்கலை புத்தகத்திலிருந்து அது தொடர்பான பகுதியை பிள்ளைகளுக்கு வகுப்பெடுப்பது போல விளக்கம் சொல்லி தாத்தா லெக்சர் தந்த போது, தங்களின் மீதே வர்மத் தாக்குதல் நடந்தது போல் ரசிகர்கள் துடித்துப் போனார்கள். அந்த அளவுக்கு பொறுமையை இழக்க வைக்கும் அநாவசியமான வியாக்கியானம். 


முதல் பாகத்தில், முந்தைய தலைமுறையின் லட்சியவாதத்திற்கும் நவீன தலைமுறையின் பொருளியல் மோகத்திற்குமான மோதல் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட நேர்மை மிகுந்த தந்தையாக கமல்ஹாசனும், லஞ்சம் தந்தாவது அரசுப் பணியில் இணையும் சுயநல தலைமுறையின் பிரதிநிதியாக மகன் கமல்ஹாசனும் சிறப்பாக நடித்திருந்தனர்.

ஷங்கர்

முதல் பாகத்தில் அசத்திய சேனாபதியும் சந்துருவும்!

ஒரே நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்கும் போது அதில் நிகழும் தொழில்நுட்பச் சிக்கல்கள், சவால்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இரண்டு பாத்திரமும் வேறு வேறு என்று பார்வையாளர்கள் மனதார நம்ப வேண்டும். ஒரே நடிகர்தான் விக் மாட்டிக் கொண்டு தந்தையாக வந்திருக்கிறார் என்று அசுவாரஸ்யமாக கருதி விடக்கூடாது. இந்த சமாச்சாரம் ஒவ்வொரு நடிகனுக்கும் முன்னால் உள்ள கடுமையான சவால். திறமையான நடிகரான கமல்ஹாசன், சேனாபதிக்கும் சந்துருவுக்கும்  இடையில் உள்ள வித்தியாசத்தை ஒப்பனை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என்று ஒவ்வொன்றிலும் கணிசமான வேறுபாட்டின் மூலம் காட்டியிருந்தார். எந்தவொரு காட்சியிலும் இரண்டுமே ஒரே நடிகர் என்கிற எண்ணம் துளிகூட பார்வையாளர்களுக்குத் தோன்றாதபடி அற்புதமாக நடித்திருந்தார். 

‘இந்தியன்’ திரைப்படத்தின் கதையை கமலிடம் ஷங்கர் விவரித்த போது 1977-ல் வெளியான ‘நாம் பிறந்த மண்’ என்கிற திரைப்படத்தின் கதைக்கும் இந்தியனின் கதைக்கும் அடிப்படையில் நிறைய ஒற்றுமை இருந்ததை உணர்ந்த கமல்ஹாசன், அந்தப் படத்தை ஏற்க மறுத்து விட்டார். சுதந்திரப் போராட்டத் தியாகியாக சிவாஜியும் துரோகம் செய்யும் மகனாக கமல்ஹாசனும் அந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஆனால் சுஜாதாவின் திரைக்கதை உதவியுடன் எழுதப்பட்ட வேறு மாதிரியான திரைக்கதையை ஷங்கர் விவரித்தவுடன் அதனால் கவரப்பட்ட கமல் நடிக்க ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. 

தவறு செய்வது மகனாக இருந்தால், அவனையும் தண்டிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக ‘தங்கப்பதக்கம்’ படத்திலும் சிவாஜி நடித்திருந்தார். குற்றமிழைக்கும் மகனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். மனுநீதி சோழன் கதையும் இதுதானே? எனவே கதையின் அடிப்படையான அம்சங்களில் தற்செயலான அல்லது திட்டமிட்ட ஒற்றுமை இருந்தால் கூட பிழையில்லை. அதை எப்படி வித்தியாசமான திரைக்கதையாக்கி படமாக ஆக்குகிறோம் என்பதுதான் விஷயம். அந்த வகையில் ‘இந்தியன் -1’ அனைத்து விதத்திலும் கில்லியாக ஜெயித்திருந்தது. 

ஆனால் இந்தியன் இரண்டாம் பாகத்தில் இது போன்ற சுவாரசியமான எதிரெதிர் முரண்கள், பாத்திரங்கள் பெரிய அளவுக்கு இல்லாமல் போனது அதன் படுபயங்கர தோல்விக்கு காரணமாக இருக்கலாம். இது மட்டும்தானா?

தொடர்ந்து பேசுவோம்…

சுரேஷ் கண்ணன் எழுதும் ஷங்கர் தொடரின் அடுத்த பகுதி வரும் திங்கட்கிழமை (29-07-2024) அன்று வெளியாகும்!