கமல்ஹாசன், சித்தார்த், ஷங்கர் 
சினிமா

இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட வீழ்ச்சியும், ‘இந்தியன் 3’ சதுரங்க வேட்டையும்! சுரேஷ் கண்ணன் - 6

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் எழுதும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மினி தொடரின் கடைசி அத்தியாயம் இங்கே!

Suresh Kannan

'இந்தியன் 2' படம் சுவாரசியமில்லாமல் போனதற்கு சில பல காரணங்களை சமூகவலைத்தளங்களில் பார்வையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். எழுத்தாளர் சுஜாதாவின் அழுத்தமான வசனங்கள் இல்லாதது, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள், பின்னணி இசை இல்லாதது உள்ளிட்ட சில யூகங்கள் அவை. 'Success has many fathers, but failure is an orphan’ என்றொரு பொன்மொழி உண்டு. அதைப் போல தோல்விக்கு பல காரணங்களை அடுக்குவது பார்வையாளர்களின் விருப்பத்தின் மீது அமைந்த யூகங்கள் மட்டுமே.

ஒரு சினிமா என்பது பல்வேறு திறமைகளின் கலவையில் உருவாவது. ஒரு சிறந்த இயக்குநர் சம்பந்தப்பட்ட திறமையாளர்களை தேர்வு செய்து கச்சிதமாக ஒருங்கிணப்பார். அவர்களின் கலைத்திறமையை படத்திற்கு ஏற்றவாறு சரியாக பயன்படுத்திக் கொள்வார். இந்த விஷயத்தில் ஷங்கர் கில்லி.

ஏ.ஆர்.ரஹ்மான். சுஜாதா இல்லாததுதான், இந்தியன் 2 தோல்விக்கு காரணமா?

எழுத்தாளர்களை, ஸ்கிரிப்ட் ரைட்டர்களை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விமர்சனக் குரல் நெடுங்காலமாக இருந்தாலும், ‘கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், இசை’ என்று பல டிபார்ட்மெண்ட்களை தன்னுடைய லேபிளில் அசட்டுப் பெருமையாக அடுக்கிக் கொள்ளும் இயக்குநர்கள்தான் அதிகம். இதற்கு வணிகரீதியான உள்காரணங்களும் உண்டு. ‘கதை’ என்று ஒரு எழுத்தாளரின் பெயரை போட்டு விட்டால், அந்தப் படம் வெற்றி பெற்று ரீமேக் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும் தன்னிச்சையாக உரிமை வந்து விடும். இதைத் தடுக்கவே தன்னுடைய பெயரை பல இயக்குநர்கள் முன்னிறுத்திக் கொள்கிறார்கள்.  

இந்தியன் 2 டீம்

இந்த விஷயத்தில் ஷங்கர் வித்தியாசமானவர். தன்னுடைய திரைப்படங்களில் எழுத்தாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ உள்ளிட்ட ஆரம்ப காலத்திரைப்படங்களில் எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதினார். உணர்ச்சிகரமான காட்சி மற்றும் வசனங்களை எழுதுவதில் பாலகுமாரன் சிறந்தவர். “பசிக்கும்டா. வயிறு கபகபன்னு பசிக்கும்... போய் இந்த முறுக்கையெல்லாம் வித்துட்டு வா” என்று ஜென்டில்மேன் படத்தில் நம்பியார் வசனம் பேசும் காட்சியில், அந்தச் சூழலின் உக்கிரம் பார்வையாளனின் மனதிற்குள் நேரடியாக வந்து தாக்கும். 

பாலகுமாரனுக்குப் பிறகு ஷங்கரின் திரைப்படங்களில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு தொடர்ச்சியாக இருந்தது. இந்தக் கூட்டணியில் ஒரு ரகளையான மேஜிக் நிகழ்ந்தது. சுஜாதா எழுதிய பல வசனங்கள் ரசிகர்களால் இன்றளவும் சிலாகிக்கப்படுகின்றன. “வெளிநாட்லயும் லஞ்சம் இருக்கு. அங்க எல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம். இங்க கடமையைச் செய்யறதுக்கே லஞ்சம்” என்று இந்தியன் படத்தில் வருவது போன்ற பல வசனங்கள் இன்றும் ரசிகர்களால் பரவசத்துடன் நினைவுகூரப்படுகின்றன. சுருக்கமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் வசனம் எழுதுவதில் சுஜாதா விற்பன்னர். போலவே திரைக்கதையிலும் அவர் ஞானஸ்தர் என்பதால் ஷங்கரின் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பலமாக சுஜாதா அமைந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது. 

சிறந்த வசனங்கள், திரைப்படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்குமா?

சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு எழுத்தாளர் ஜெயமோகனுடன் கூட்டணி அமைத்தார் ஷங்கர். சுஜாதாவைப் போலவே அழுத்தமான காட்சிகளையும் வசனங்களையும் அமைப்பதில் ஜெயமோகன் வல்லவர். ஆனால்  பாலகுமாரன், சுஜாதா என்று முந்தைய கூட்டணிகள் சிறப்பாக அமைந்ததைப் போல இந்தக் கூட்டணி ரசிகர்களிடம் ஏனோ வரவேற்பைப் பெறவில்லை. இதுதவிர மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து உள்ளிட்டவர்களையும் தன்னுடைய திரைப்படங்களில் வசனத்திற்காக ஷங்கர் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

ஷங்கர்

ஆனால் ஒரு சிறந்த எழுத்தாளரோ, மகத்தான இசையமைப்பாளரோ ஒரு படத்தில் இருந்து விட்டாலே அதன் வெற்றிக்கு உத்தரவாதம் அமைந்து விடுமா? கிடையாது. சிறந்த கலைஞர்கள் இருந்தாலும் கூட வணிகரீதியாக தோல்வியைத் தழுவிய படங்கள் ஏராளம். மேலும் சினிமாவில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பது மிகக் குறைவானதுதான். முழுத் திரைப்படத்தின் பயணத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இயக்குநரின் தேவைக்கேற்ப அவர்களின் எல்லைக்குள் நின்று அதற்குரிய பங்களிப்பை மட்டுமே செய்ய முடியும். அந்தச் சிறிய இடத்தில் எழுத்தாளர் எந்த அளவிற்கு பிரகாசிக்கிறார் என்பதுதான் அவர்களுக்குள்ள சவால். 

மேலும் ‘வசனம்’ என்று போடப்பட்டாலும் கூட அனைத்து வசனங்களும் எழுத்தாளர் எழுதுவதல்ல. இயக்குநர் உருவாக்கும் அல்லது உதவி இயக்குநர்கள் சொல்லும் எந்தவொரு துண்டு வசனமும் அதில் இணையலாம். ‘சிவாஜி - தி பாஸ்’ படத்தில் ‘சாகிற நாள் தெரிஞ்சிட்டா, வாழற நாள் நரகமாயிடும்’ என்றொரு வசனம் வரும். ஒரு நேர்காணலில் ‘’சுஜாதா அருமையா எழுதியிருக்கிறார்’’ என்று கேள்வி கேட்பவர் பாராட்ட அதற்கு ‘’அந்த வரியை எழுதியது நான்தான்” என்கிறார் ஷங்கர். 

ஷங்கர், கமல்ஹாசன்

ரஹ்மானின் மேஜிக்கை அனிருத்தால் நிகழ்த்த முடியவில்லையா?

ஒருவேளை சுஜாதா வசனம் எழுதியிருந்தால், ‘இந்தியன் 2’ வெற்றியடைந்திருக்கும் என்று உத்தரவாதமாக சொல்லி விட முடியுமா? முடியாது. மிகச் சிறந்த வசனங்களால் மட்டும் ஒரு படத்தைக் காப்பாற்றி விட முடியாது.  ஒரு திரைப்படத்தின் வெற்றியை பெரிதும் தீர்மானிப்பது அடிப்படையில் அழுத்தமான கதையும் நேர்த்தியான திரைக்கதையும்தான். சிறந்த தொழில்நுட்பக் கூட்டணி, மார்க்கெட்டிங் மாய்மாலங்கள் போன்றவை இந்த வெற்றியின் உயரத்தை அதிகரிக்கச் செய்யலாம்.  

அடுத்ததாக இசை. ஷங்கர் + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்றாலே அதில் உத்தரவாதமாக ஒரு மேஜிக் நிகழும். இந்த விஷயம் தொடர்ந்து நிரூபணமாகியிருக்கிறது. இருவரின் கூட்டணியில் அமைந்த ஆல்பங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கின்றன. ரஹ்மானிடமிருந்து உச்சபட்சமான உழைப்பை வாங்கி விடுவதில் ஷங்கர் வல்லவர். ரஹ்மானும் அந்த உழைப்பைத் தருவதில் சோர்ந்து விடுவபவர் அல்ல. கடைசி நேரம் வரைக்கும் ஒரு பாடலை விதம் விதமாக அலங்கரித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள். 

ஆனால் ‘அந்நியன்’ திரைப்படத்தின் போது இந்தக் கூட்டணியில் ஒரு இடைவெளி விழுந்தது. ‘பாம்பே டீரீம்ஸ்’ ஆல்பத்திற்காக ரஹ்மான் பிஸியாக இருந்த நேரம் அது. எனவே ஹாரிஸ் ஜெயராஜூடன் கூட்டணி அமைத்தார் ஷங்கர். பாடல்கள் அனைத்தும் ஹிட். படமும் வெற்றி. போலவே ‘நண்பன்’ படத்திற்காகவும் ஹாரிஸ் ஜெயராஜூடன் கூட்டணி நிகழ்ந்தது. இந்தப் படமும் ஹிட். வேறு இசையமைப்பாளருடன் இணைந்தாலும் ஷங்கரால் வெற்றியைத் தர முடிந்தது.

சித்தார்த், கமல்ஹாசன், ஷங்கர்

ஆக, ‘இந்தியன் -2’ல் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் போனதை தோல்விக்கான பெரிய காரணமாக கூறி விட முடியாது. சமகால இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில் இசையமைப்பதில் அனிருத் தொடர்ந்து வெற்றி பெற்று முன்னணி இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். எனவே அவரை ஷங்கர் தேர்வு செய்தது வணிகரீதியாக சரியான மூவ்தான். 

ஆனால் இந்தக் கூட்டணியில் நிகழ வேண்டிய மேஜிக் நிகழவில்லை. ‘தாத்தா வராரு’ உள்ளிட்ட இரைச்சலான பாடல்களை பெரும்பாலோனோர் ரசிக்கவில்லை. கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்கு அனிருத்தின் பின்னணி இசை பெரிய பலமாக அமைந்திருந்தது. ஆனால் ‘இந்தியன் 2’ படத்தில் அது நிகழவில்லை. மாறாக, சில காட்சிகளில் இந்தியன் 1-ல் பயன்படுத்தப்பட்ட ரஹ்மானின் பின்னணி இசை ஒலித்த போது பார்வையாளர்கள் பரவசப்பட்டு மகிழ்ந்தார்கள். 

இந்தியன் மூன்றாம் பாகம், எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

சினிமாவில் கூட்டணிகள் நீடிப்பதும் மாறுவதும் சகஜமானதொன்று. ஒரு சிறந்த கூட்டணியால் ஒரு படைப்பு கூடுதல் பிரகாசம் அடையும் என்பது உண்மை. ஆனால் அந்தக் கூட்டணிதான் வெற்றிக்கு உத்தரவாதம் என்பதை உறுதியாகச் சொல்லி விட முடியாது. 

ஆக, இந்தியன் -2 திரைப்படத்தின் பின்னடைவிற்கு திரைக்கதையைத்தான் பிரதான காரணமாகச் சொல்ல முடியும். கமலின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பிரமிக்கத்தக்க உழைப்பு போன்றவை இருந்தாலும் கூட, வழக்கமாக ஷங்கர் படங்களில் இருக்கும் சுவாரசியம் ஒரு சிறிய சதவிகிதம் இல்லாமல் போனது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. இது ஷங்கருக்கு ஒரு நல்ல படிப்பினையாக இருக்கக்கூடும். 

இந்தியன் மூன்றாம் பாகத்தின் டிரைய்லரை கடைசியில் காட்டுவதின் மூலம் பார்வையாளர்களின் ஆசையை திறமையாகத் தூண்டியிருக்கிறார்கள். அந்த டிரைய்லர் நன்றாகவே அமைந்திருப்பதோடு ஆவலையும் தூண்டியிருக்கிறது. ‘ஒருத்தன ஏமாத்தணும்னா, அவனோட ஆசையைத் தூண்டனும்’ என்பது ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் வசனம். அப்படியாக அல்லாமல், டிரைய்லரைப் போலவே இந்தியன் மூன்றாம் பாகம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்ப்போம். 

தொடர் நிறைவடைந்தது!