இந்தியன் - 2, கமல்ஹாசன்
இந்தியன் - 2, கமல்ஹாசன்

‘இந்தியன் 2’ தோல்விக்கான மிக முக்கிய காரணம் இது மட்டும்தான்?! - சுரேஷ் கண்ணன் தொடர் - 5

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் எழுதும் 'பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்' மினி தொடரின் ஐந்தாம் பாகத்தில் 'இந்தியன் - 2' படத்தில் இருந்த மிக முக்கியமான அடிப்படை பிரச்சனைப் பற்றி அலசியிருக்கிறார்.
Published on

ஷங்கரின் திரைப்படங்களில் மையக்கருத்தாக வெளிப்படும் சமாச்சாரம் என்பது ஒரு சராசரி மனிதனிடமிருந்து உருவாகுகிற சமூகக் கோபமாகத்தான் பெரிதும் இருக்கும். அரசியல்வாதிகள் செய்யும் ஊழல், மோசடி, அரசு இயந்திரங்களின் மெத்தனம், அரசாங்க அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்ய கலாசாரம், குடிமகன்களின் பொறுப்பற்ற தன்மை, எங்கும் நிறைந்திருக்கும் சுயநலப் போக்கு போன்றவற்றை அழுத்தமாகவும் காரசாரமாகவும் விமர்சிக்கிற காட்சிகளாகவும் வசனங்களாகவும் இருக்கும். 

குற்றங்களையும் ஊழல்களையும்  அநாயசமாக நிகழ்த்துபவர்கள் மிக உல்லாசமாக வலம் வந்து கொண்டிருக்க, இயன்ற வரையிலான நேர்மையைக் கடைப்பிடிக்கும் மிடில் கிளாஸ் ஆசாமிகள்  அதைப் பார்த்து பார்த்து மனப்புழுக்கத்துடனும் மனஉளைச்சலுடனும் இருப்பார்கள். ‘’ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும், ஒரு கெட்டவனுக்குத்தான் கிடைக்குது. தட்ல வெச்சு கொண்டு போய் மரியாதையைக் கொடுக்கறாங்க’’ என்று ‘மகாநதி’ திரைப்படத்தின் கிருஷ்ணசாமி புலம்புவது அவனுடைய குரல் மட்டுமல்ல. ஒவ்வொரு மிடில் கிளாஸ் ஆசாமியின் மைண்ட் வாய்ஸூம் கூட. 

இந்தியன் - 2, கமல்ஹாசன்
மனுநீதி சோழன் கதையும், ஷங்கரின் இந்தியன் தாத்தா கதையும் ஒன்றுதான் - சுரேஷ் கண்ணன் தொடர் - 4
இந்தியன் - 2, கமல்ஹாசன்
ஷங்கர் எனும் கலைஞன் வியாபாரியாக மாறி தோற்றுப்போனதன் அடையாளமே 'இந்தியன்-2' - சுரேஷ் கண்ணன் தொடர் - 3

கெட்டவனுக்கு கிடைக்கும் மரியாதை

இந்தக் கோபத்தைத்தான் ஷங்கர் தனது பெரும்பான்மையான திரைப்படங்களின் மையச்சரடாக எடுத்துக் கொள்கிறார். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’ போன்ற திரைப்படங்களைப் பார்த்தால் நேர்மையான ஒரு தனிமனிதனுக்கும் அரசாங்க இயந்திரம் என்கிற பிரம்மாண்டமான ராட்சசனுக்கும் இடையில் நிகழ்கிற அறம் சார்ந்த போராக அது இருக்கும். ‘’அப்படிக் கேளுங்க.. சார்’’ என்று பார்வையாளன் அடக்கி வைத்திருக்கும் கோபத்தை கச்சிதமாக பிரதிபலிப்பதாக இருக்கும்.  

இந்தியன் - 2
இந்தியன் - 2

ஷங்கரின் திரைப்படங்கள், பார்வையாளர்களைக் கவர்ந்து பெரும்பான்மையாக வெற்றி பெறுவதற்கான அடிப்படை சூத்திரம் இதுவே. தனிமனிதனின் மௌனக் கோபத்தை முதலீட்டாக்கி அதனுடன் பிரம்மாண்டமான பாடல், சண்டைக்காட்சிகள், ஸ்டார் நடிகர்கள், என்று வெகுசன திரைப்படத்திற்குரிய அத்தனை மசாலாக்களையும் கலந்து கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் தரத் தெரிந்த திறமையான இயக்குநர் ஷங்கர். 

இந்தியன் - 2, கமல்ஹாசன்
ஸ்பில்பேர்கின் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’டும், ஷங்கரின் ‘இந்தியன்’ வாக்குமூலமும்! சுரேஷ் கண்ணன் தொடர் - 2

லோ பட்ஜெட் எஸ்.ஏ.சி = ஹை பட்ஜெட் ஷங்கர்

இந்த சமூகக் கோபம் என்கிற ஆதாரமான கதையமைப்பு, ஷங்கருக்கு அவருடைய குருநாதரிடமிருந்து வந்ததாக இருக்கலாம். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஷங்கர். எஸ்.ஏ.சியின் பெரும்பான்மையான திரைப்படங்களின் ஆதார மையம் என்பது சமூகக்கோபம்தான். சமூகத்தின் பிரச்சனைகளை விஜயகாந்த் போன்ற நடிகர்கள் சிவப்பான கண்களுடன் முட்டியை உயர்த்தி ஆவேசமாக முழங்கும் போது அது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மனிதர்களுக்கு பெரிதும் ஆறுதலாக இருந்தன. அத்தகைய மனிதர்களின் மனஉளைச்சலை தணிக்கும் படங்களாக இவை இருந்திருக்கின்றன. ஒருவகையில் இதுவே இந்தப் படங்களின் பலம் மற்றும் பலவீனம். 

எஸ்.ஏ.சந்திரசேகர் லோ-பட்ஜெட்டில் செய்து கொண்டிருந்த அதே விஷயத்தைத்தான் ஷங்கர் பிரம்மாண்ட படங்களின் மூலமாக செய்து கொண்டிருக்கிறார் எனலாம். இந்த நோக்கில் பதினாறு அடி தாவிப் பாய்ந்த திறமையான குட்டியாக ஷங்கரைச் சொல்லலாம். 

இந்தியன் 2, ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த்
இந்தியன் 2, ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த்

ஷங்கர் திரைப்படங்களில் உள்ள ஆபத்தான நீதி

என்னதான் ஷங்கரின் திரைப்படங்களில் தனிமனிதனின் சமூகக்கோபம் என்பது மையக்கருத்தாக இருந்தாலும் அதற்கான தீர்வு என்பது பெரும்பாலும் அபத்தமான மற்றும் ஆபத்தான கருத்தியலைக் கொண்டதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ‘அந்நியன்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைப் பார்த்தால் சாலையில் எச்சில் துப்பிச் செல்கிறவனைக் கொன்று விட்டால் இந்தியா வல்லரசாகி விடும் என்பது போல் காட்சி வைத்திருப்பார். ‘அந்நியன்’ திரைப்படம் என்றல்ல, இத்தகைய பாணியிலான அனைத்துத் திரைப்படங்களிலும், குற்றங்களுக்கு கொலைதான் தீர்வு, தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்பது ஷங்கருடைய திரைப்படங்கள் தொடர்ந்து சொல்லும் நீதி. ஆனால் இது ஆபத்தான நீதி. இது நம்மை காட்டுமிராண்டிகளின் காலத்திற்கு பின்னால் அழைத்துச் செல்லும் மோசமான கருத்தியல். 

இந்தியன் - 2, கமல்ஹாசன்
‘இந்தியன் 2’ ரிஜெக்டட்… ஷங்கரின் வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன? - சுரேஷ் கண்ணன் எழுதும் மினி தொடர் - 1

அரசு அலுவலர்களின் மூலம் சராசரி மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் போது ‘’மனச்சாட்சியே இல்லாம நடந்துக்கறான். இவன் செத்து ஒழிஞ்சா நல்லாயிருக்கும்’’ என்று வயிறெரிந்து சாபம் விடுவது இயல்பானது. எளிய மக்களால் அதை மட்டுமே யதார்த்தத்தில் செய்ய முடியும். ஆனால் தவறு செய்கிற ஒவ்வொருவரையும் கொன்று விட வேண்டுமென்றால் எவருமே சமூகத்தில் மிஞ்ச மாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொரு சமூகக் குற்றத்தின் பின்னாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகத்தில் உள்ள அனைவருக்குமே பங்கு இருக்கிறது. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியை அறச்சீற்றத்துடன் திட்டித் தீர்க்கும் அதே தனிமனிதன்தான், தனக்கு அந்த அதிகாரம் கிடைக்கும் போது இன்னொருவனை கருணையேில்லாமல் சுரண்டத் தொடங்குவான். 

தண்டனைகள் கடுமையானால் குற்றம் குறையுமா?

ஆக தனிமனிதர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவதை விடவும் ஒட்டு மொத்த அமைப்பை சீர்திருத்துவதும் நேர்மறையாக மாற்ற முயல்வதும்தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். ஷங்கரின் திரைப்படங்களில் வெளிப்படும் தீர்வுகள் ஆபத்தாக இருப்பதற்கு ‘ஜென்டில்மேன்’ படத்தின் சித்தரிப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். முற்பட்ட சமூகங்களால் பல்லாண்டு காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பிற்பட்ட சமூகங்கள், மைய நீரோட்டத்தில் இணைவதற்கு கொண்டு வரப்பட்ட கொள்கை சார்ந்த ஏற்பாடுகள்தான் ‘இடஒதுக்கீடு’ போன்றவை. இவை எளிதாக வந்து சேர்ந்து வந்த விஷயமல்ல. இதற்குப் பின்னால் பெரும் போராட்டங்களும் வரலாறும் இருக்கிறது. 

இந்தியன் - 2, கமல்ஹாசன்
Indian 2 விமர்சனம் : ஊழல் செய்திருப்பது வில்லன்களா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியா?!

முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஏழையாக இருக்கிற காரணத்தினால்தான் கனவு கண்ட உயர்படிப்பை படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான் என்கிற மாதிரியான சித்திரிப்பு ‘ஜென்டில்மேன்’ படத்தில் வரும். அதற்கு காரணம் அமைச்சர் கேட்கிற லஞ்சம் என்பது போல் இருந்தாலும் மறைமுகமாக அது இடஒதுக்கீடின் மீது கேள்வி கேட்கிற விஷயத்தைக் கொண்டிருந்தது. இது சமூகநீதிக்கு எதிரான ஆபத்து நிறைந்த குரல்.

‘ஜென்டில்மேன்’, ‘அந்நியன்’, ‘இந்தியன் -1’ போன்ற திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட அதே கருத்தாக்கம்தானே, இந்தியன் இரண்டாம் பாகத்திலும் இருந்தது? எனில் ஏன் அதை பார்வையாளர்கள் நிராகரித்தார்கள் என்கிற கேள்வி எழலாம். 

மக்களை விமர்சித்தால் ஒப்புக் கொள்வார்களா?

‘’ஊரைச் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’’ என்பதுதான் ‘இந்தியன் 2’-ன் ஒன்லைன். இது சரியான விஷயம்தான். “ஊர்ல இருக்கற களையெல்லாம் புடுங்கிட்டு இருந்தேன். ஆனா என் காலடியிலேயே ஒரு விஷச்செடி முளைவிட்டு வளர்ந்துட்டு இருந்திருக்குது” என்பது இந்தியன் முதல் பாகத்தில் தன் மகனை நோக்கி தந்தை சொல்லும் வசனம். அந்த நோக்கில் வீடு சுத்தமானால்தான் நாடும் சுத்தமாகும் என்று இந்தியன் 2 தாத்தா சொல்வது சரிதான். 

இந்தியன் - 2
இந்தியன் - 2

ஆனால் இரண்டாம் பாகம் பெரிதும் வரவேற்கப்படாமல் போனதற்கு அதன் சுவாரசியமற்ற திரைக்கதை முக்கிய காரணம் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அது தவிர வேறு சில மறைமுக காரணங்களும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.  அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் செய்யும் குற்றங்களை காரசாரமாக விமர்சிக்கும் திரைப்படங்களை மக்கள் கைத்தட்டி ரசிப்பார்கள். ஆனால் மக்களையே விமர்சிக்கும் படைப்புகளை மேலுக்கு கைத்தட்டினாலும் உள்ளூர ரசிக்க மாட்டார்கள். ஒருவனின் தவறைச் சுட்டிக் காட்டும் போது அவன் அதற்கான சப்பைக்கட்டு காரணங்களைத்தான் அடுக்குவானே ஒழிய, அவனுடைய தவறை அத்தனை எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டான்.

‘இந்தியன்- 2’ படத்தில் சொல்லப்படும் நீதி போல, லஞ்சம் வாங்கும் தன்னுடைய தந்தை அல்லது தாயின் மோசடியை சொந்த மகனோ அல்லது மகளோ நடைமுறை வாழ்க்கையில் நிச்சயம் அம்பலப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் அந்த சொகுசான வாழ்கையின் பங்குதாரர்களாக அவர்களும் இருக்கிறார்கள். எனவே அந்தக் குற்றத்திலும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களாக அமைகிறார்கள். இது தவிர,  ரத்த உறவுகள் தவறு செய்யும் போது அதை மூடி மறைத்து உடன்படுவதைத்தான் ஏறத்தாழ அனைவரும் செய்வாார்கள். “ஒருத்தன் தன்னோட குடும்பத்திற்காக எதை வேணா விட்டுக் கொடுப்பான். ஆனா குடும்பத்தையே விட்டுத்தர மாட்டான்” என்று இதே ‘இந்தியன் 2’ படத்தில் வரும் வசனம் மிகப் பொருத்தமாக இருக்கிறது.

இந்தியன் - 2, கமல்ஹாசன்
லைகாவின் சாம்ராஜ்யத்தையே முடித்துவிட்டாரா ஷங்கர்… ‘இந்தியன் - 3' படத்துக்கானப் பின்னணி என்ன?!

சுயநலம் பெருகும் இளைய தலைமுறை

தலைமுறைகள் மாறுவதற்கேற்ப இளைஞர்களின் மனநிலைகளிலும் கணிசமான மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் சமூகத்தின் மீதான அக்கறை மக்களுக்கு இருந்ததில் ஆச்சரியமில்லை. அப்போது பொதுவான எதிரியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்தது. ஆனால் அத்தகைய பொதுநலச் சிந்தனைகளும் சமூக அக்கறைகளும் இன்றைய தலைமுறையினரிடம் கணிசமான அளவில் காணாமல் போய் விட்டது. கூட்டுக்குடும்பங்கள் சிதறி நியூக்ளியர் குடும்பங்களாக மாறிய போக்கு எப்போதோ அதிகரித்து விட்டது. குடும்பம் என்கிற அமைப்பிலேயே கூட தனிமனித சுயநலம் பெருகி விட்டது. 

இன்றைய தேதியில், லஞ்சம் தந்து தனக்கான காரியத்தை அரசு அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்வதென்பது எவ்வித குற்றவுணர்வும் கோபமும் அல்லாத இயல்பான சடங்காக நடைமுறையில் ஆகி விட்டது. “ஒரு மாசமா அலையறேன்… வேலையே முடிய மாட்டேங்குது” என்று ஒருவர் புலம்பினால் “வெட்ட வேண்டிய  இடத்துல கரெக்டா வெட்டிடணும். அப்பத்தான் முடியும்” என்று இன்னொருவர் வலியுறுத்தி சொல்லுமளவிற்கு லஞ்சம் தருவதென்பது பொதுமக்களாலேயே தன்னிச்சையாக நியாயப்படுத்தப்படும் சூழலில் இந்தியன் தாத்தாக்களின் குரல் எப்படி எடுபடும்? ‘முதல்ல வீட்டைச் சுத்தப்படுத்து’ என்று பார்வையாளர்களின் மீதே குற்றம் சாட்டினால் அந்த யதார்த்தமான உண்மையை அவர்கள் ஜீரணித்துக் கொள்வது கடினமானது. இத்தகைய சித்தரிப்புகள், இந்தியன் 2 திரைப்படம் எடுபடாமல் போனதற்கு ஒரு வகையான காரணமாக இருக்கலாம். 

தொடர்ந்து பேசுவோம்…

சுரேஷ் கண்ணன் எழுதும் தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளிக்கிழமை 02-08-2024 அன்று வெளியாகும்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com