பிக் பாஸ் தமிழ் 
டிவி

பிக் பாஸ் தமிழ்: யார் மனம் கவர்ந்த டாப் 5 போட்டியாளர்கள்?! சுரேஷ் கண்ணணின் ஃபேவரிட் லிஸ்ட்!

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இதுவரையிலான சீசன்களில் தனித்துவம் மிக்க போட்டியாளர்களை தேர்வு செய்து டாப் 5 லிஸ்ட்டை கொடுத்துள்ளார். இதில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களும் இருக்கிறார்களா?!

Suresh Kannan

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 துவங்கவிருப்பதையொட்டி அது குறித்து வெளியாகும் தகவல்களில் சூடும் சுவையும் விறுவிறுப்பும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கிறது. இந்த சீசனில் கமல் விலகியது, அதற்குப் பதிலாக விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்வது, அதன் ப்ரோமோ வீடியோக்கள், எட்டாவது சீசனின் கான்செப்ட் என்னவாக இருக்கும், அதன் புதிய விதிகள் எப்படியாக இருக்கும் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் பார்வையாளர்களின் மத்தியில் எகிறத் தொடங்கியுள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி ஒன்று இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார்.. யார்? ஒவ்வொரு வருடமும் இது குறித்த யூகங்களும் ஆருடங்களும் ‘அடிச்சு சொல்றேன்.. இந்த பதினைஞ்சு பேருதான் இந்த சீசன்ல வருவாங்க’ என்று சகட்டுமேனிக்கு  அடித்து விடும் உண்மையும் கற்பனையும் கலந்த பட்டியல்கள் இணையத்தின் மூலை, முடுக்குகள் எங்கும்  வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. 

போதாக்குறைக்கு இன்னொரு புதிய தகவலும் இப்போது இதில் இணைந்திருக்கிறது. முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட மூன்று பழைய போட்டியாளர்களை லேட்டஸ்ட்  சீசனில் களம் இறக்கப் போவதாக விஜய் டிவி முடிவு செய்திருக்கிறதாம். மிகவும் கவனமாகவும் கறாராகவும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பார்களாம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் ருசிகரமான தகவல். அந்த மூன்று பேர் யாராக இருக்கும்?...

ஓகே.. இந்த யூகங்களையெல்லாம் ஒரு பக்கம் ஓரமாக வைத்து விடுவோம்.

பிக் பாஸ் தமிழில், இதுவரை நடந்த சீசன்களில் யார் தங்களின் மிகச் சிறந்த பங்களிப்பைத் தந்த போட்டியாளர்… யார் பார்வையாளர்களின் உச்சபட்சமான ஆதரவையும் அன்பையும் பெற்றது, குறிப்பிட்ட சீசன் சுவாரசியமாகவும் சுவையாகவும் அமைந்ததற்கு காரணம் யார்? இந்த நோக்கில் அந்தந்த சீசன்களை அட்டகாசப்படுத்திய  டாப் 5 போட்டியாளர்களைப் பற்றி பார்க்கலாம். 

1. ஓவியா - ஒளி பொருந்திய தேவதை

இந்தப் பெயரை தவிர்த்து விட்டு பிக் பாஸ் தமிழ் வரலாற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்படியொரு ரகளையான போட்டியாளர். ‘களவாணி’, ‘மெரினா’, ‘கலகலப்பு’ போன்ற திரைப்படங்களில் நடித்த போது கூட இவருக்கு இத்தனை ரசிகர்கள் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ மாதிரி, பிக் பாஸ் ஷோ மூலம் ஓவியாவிற்கு கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை கோடிகளைக் கூடத் தாண்டியிருக்கக்கூடும். 

ஓவியா

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் பாக்கு விளம்பரம் மாதிரி, பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன தாத்தாக்கள் வரை திடீரென்று ஓவியா ரசிகர்களாக மாறிய வரலாற்றைப் பார்த்து தமிழகமே மிரண்டது. ஹை சுகரால் கைநடுக்கம் கொண்டவர்கள் கூட யூனிபார்மை உதறி மாட்டிக் கொண்டு விண்ணப்ப படிவத்தை அவசரமாக வாங்கி  ‘ஓவியா ஆர்மியில்’ உடனடி உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டார்கள். அதுவும் ஆயுட்கால உறுப்பினர்களாக.

அப்படியென்ன ஓவியா ஸ்பெஷல்? பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான தகுதிகளுக்கு ஓவியா பொருந்திப் போனாரா என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை. அவரிடம் பல பலவீனங்கள் இருந்தன.  பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான தகுதியே, அந்நிய மனிதர்களை சகித்துக் கொண்டு ஒரு புதிய சூழலில் கூடி வாழ முடிகிறதா என்பதின் பரிசோதனைதான். இந்த விஷயத்தில் படுபயங்கரமாக தோற்றுப் போனவர் ஓவியா. அவரால் அந்த வீட்டில் பலருடன் இணங்கிப் போக முடியவில்லை.போதாதற்கு வேலை செய்யாமல் டபாய்க்கும் சோம்பேறித்தனமும் கணிசமாக இருந்தது. 

எதிர் பாலினத்தவருடன் சில நாட்களுக்கு அருகாமையில் இருந்தாலே வந்து விடுவதற்குப் பெயர் காதல் அல்ல. அது பாலினக் கவர்ச்சி மட்டுமே (Infatuation).  சக போட்டியாளரான ஆரவ்வை உருகி உருகி காதலித்து அதனால் புத்தி பேதலித்துப் போய் வெளியேறிய ஓவியாவிற்கு இந்த விஷயத்திலும் முதிர்ச்சி இல்லாமல் போனது. 

என்றாலும் ஓவியாவை ஏன் மக்கள் அத்தனை வெகுவாக ரசித்தார்கள் என்றால் அவரிடம் இருந்தது அடிப்படையான நேர்மை. பாசாங்கற்ற தன்மை. உண்மை. ஆம், இன்று பலரிடம் காண முடியாத குணாதிசயங்கள் இவை. 

ஓவியாவின் பாசாங்கற்ற தன்மைக்கு ஒரேயொரு காட்சியை உதாரணமாக சொல்கிறேன். உடல்நலமும் மனநலமும் குன்றி பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறினார். அந்த வாரத்தின் இறுதியில் கமல் வரும் நாளன்று தனக்கேயுரித்தான பாணியில் பல அட்வைஸ்களை உறுத்தாமல் ஓவியாவிடம்  சொன்னார் கமல். இறுதியில் “வீட்ல இருக்கறவங்களுக்கு ஏதாச்சும் சொல்ல விரும்பறீங்களா?” என்று கமல் ஓவியாவிடம் கேட்ட போது பார்வையாளர்களின் மத்தியில் அத்தனை எதிர்பார்ப்பு. ஓவியா என்ன சொல்லப் போகிறார் அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கும் விதமாக, புன்னகையுடன் உரத்த குரலில் ஓவியா சொன்னது “ஆரவ்… ஐ லவ் யூ”...

நாம் மட்டுமல்ல, ஓவியாவும் ஆரவ்வும் யோசித்துப் பார்த்தால் இன்றைக்கு அந்தக் காட்சிகள் படு அபத்தம் என்பது புரியும். ஆனால் அந்த நேரத்து மனநிலையில் ஓவியா தன்னுடைய உள்ளத்தில் இருப்பதை ஒளித்து வைக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டிய நெருக்கடி கூட அவரிடம் இல்லை. அந்த இடத்தை விட்டு விலகியிருந்தார்.   என்றாலும் அந்த நேரத்தில் தோன்றியதை வெளிப்படையாகச் சொன்ன அந்த நேர்மைதான் ஓவியாவின் அடிப்படையான அடையாளம். அதனால்தான் பெரும்பாலான பார்வையாளர்களின் கண்களுக்கு ஒளி பொருந்திய  தேவதையாகத் தெரிந்தார். 

இது தவிர, தொலைக்காட்சி சீரியல்களின் சம்பிரதாயமான நாயகிகளின் பாத்திரத்திற்கும் பிக் பாஸ் ஓவியாவிற்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் போனது.  நீங்கள் எந்தவொரு டிவி சீரியலையும் கவனித்துப் பாருங்கள். அதன் நாயகி பாவப்பட்ட ஜென்மமாக இருப்பார். மாமியார், நாத்தனார், கணவர், சுற்றத்தார் என்று அனைவராலும் துன்பப்பட்டு பார்வையாளர்களின் பரிதாபத்தைச் சம்பாதிப்பவராக இருப்பார். ஒரு கட்டத்தில் அதே நாயகி வீறு கொண்டு எழுவார். தன்னை துன்புறுத்தியவர்களுக்கு தக்க பதிலடி தரத் துவங்குவார். இந்த ஃபார்மேட்டை அப்படியே பிக் பாஸ்  ஓவியாவிற்குப் பொருத்திப் பாருங்கள். கச்சிதமாகப் பொருந்திப் போகும். சில பல பலவீனங்கள் இருந்தாலும் ஓவியாவிடம் இருந்த அடிப்படையான நேர்மையை மக்கள் சிலாகித்துக் கொண்டாடியதால் அவர் இந்த டாப் 5 வரிசையில் முதலிடத்தைப் பெறுவதென்பது காலத்தின் கட்டாயமாகிறது. 

2. ஆரி  அர்ஜூனன் -  கண்ணியத்தின் இருப்பிடம் 

நான்காம் சீசனின் டைட்டில் வின்னர். ஆரிக்குள் உண்மையாகவே ஒரு ஹீரோ இருந்தார் அல்லது அவ்வாறாக தன்னைத் திறமையாக காட்டிக் கொண்டார். மறுபடியும் அதேதான். சக மனிதர்களை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதுதான் பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையான சவால். இந்த விஷயத்தில் ஆரி பல தினங்களில் அபாரமாக ஸ்கோர் செய்தார்.  இத்தனைக்கும் பாலாஜி, அனிதா சம்பத் உள்ளிட்டவர்களுடன் பல சமயங்களில் மிகக் கடுமையான முட்டல்களும் மோதல்களும் நடந்தன.  ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே கைகலப்பு நடந்து விடுமோ என்று அஞ்சுமளவிற்குக் கூட சந்தர்ப்பங்கள் அமைந்தன. ஆனால் ஒருமுறை கூட ஆரி தன்னுடைய கண்ணியத்தைக் கைவிடவில்லை என்பதுதான் அவரைச் சிறப்புப் போட்டியாளராக ஆக்குகிறது. கண்ணியம் காத்தது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு அநீதி நிகழும் போது கள்ள மௌனத்துடன் ஒதுங்கிப் போய் விடாமல் அவர்களுக்காகவும் குரல் தந்ததுதான் ஆரியை வித்தியாசமான போட்டியாளராக  ஆக்கியது. இதுதான் அவரை டைட்டில் வின்னராகவும் ஆக்கியது. 

ஆரி அர்ஜூனன்

‘’அடப் போங்க பாஸூ… எல்லாம் நடிப்பு.. நல்லவனா நடிக்கறது ரொம்ப சுலபம்.. ஆரி அந்த மாதிரியான கேட்டகிரி’’ என்று கூட  சிலர் இந்தத் தேர்வை மறுக்கலாம். உண்மைதான். ஆனால் பிக் பாஸ் போன்ற நெருக்கடியான சூழலில் நீண்ட நாட்களுக்கு ஒருவர்  நல்லவராக நடிப்பது சிரமமான விஷயம்.  கடுமையான மோதல்கள் நிகழும் போது கண்ணியத்தோடு தன் தரப்பை அழுத்தமாக வலியுறுத்திய ஆரி, இதர சமயங்களிலும் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்து கொண்டார். தன்னுடைய சொல், செயல் என்று பலவற்றில் சமூகத்திற்கு முன்மாதிரியான விஷயங்கள் இருப்பதைப் போல பார்த்துக் கொண்டார்.  ‘அத்தனையும் நடிப்பா கோப்பால்’ என்கிற சந்தேகம் சிலரிடம்  எழுந்தாலும் கூட சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பவர்களே நமக்கு எப்போதும் அவசியமானவர்கள். அந்த வகையில் ஆரி ஒரு சிறந்த போட்டியாளர் என்பதில் பெரும்பாலோனோருக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

3. மாயா கிருஷ்ணன் - மாய விளையாட்டை ஆடியவர்

ஏழாம் சீசனின் இரண்டாவது ரன்னர் அப் வெற்றியாளர். பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த அளவிற்கு ஒருவரால் வெறுப்பைச் சம்பாதிக்க முடியுமா என்கிற அளவிற்கு கணிசமான பார்வையாளர்களின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டார் மாயா.  இது தவிர,  கமல்ஹாசனின் சிபாரிசு காரணமாக இந்த சீசனிற்குள் வந்தவர்.  எனவே கமல் இவருக்குச் சாதகமாக செயல்படுகிறார், இவரை அதிகம் கண்டிப்பதில்லை, கண்டித்தாலும் வலிக்காதது போல் விமர்சிக்கிறார் என்று பல கடுமையான விமர்சனங்கள்  குறிப்பிட்ட சதவிகித  பார்வையாளர்களிடம் இருந்து  எழுந்தன. இதில் சாதிய ரீதியான தாக்குதல்கள் கூட கலந்திருந்தன.  அதிலும் பிரதீப் ஆன்டனியின் வெளியேற்றத்திற்குப் பிறகு மாயாவின் மீதான  வசவுகளின் சதவிகிதம் கன்னாபின்னாவென்று அதிகரித்தது. பூர்ணிமாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இவர் அடித்த லூட்டிகள் பலருடைய வெறுப்பைச் சம்பாதித்தன. 

மாயா கிருஷ்ணன்

என்றாலும் மாயாவை சிறந்த போட்டியாளர்களின் வரிசையில் முன்னிறுத்த விரும்புகிறேன். ‘’அட போங்கப்பா.. சின்ன தம்பி படத்தோட கவுண்டமணி மாதிரி வில்லன் வர்ற காட்சில தப்பா கைத்தட்டறதே இவருக்குப் பழக்கமாப் போச்சு’’ என்று என்னையும் கூட சிலர் விமர்சிக்கலாம்.  

என்றாலும் பிக் பாஸ் விதிகளுக்கு உட்படுத்திப் பார்த்தால் மாயா ஒரு சிறந்த ஆட்டக்காரர். ‘’எனக்கு இந்த கேமை சுவாரசியமா ஆடறதுதான் முக்கியம். அதுக்காக என்ன வேணா செய்வேன்’’ என்று வெளிப்படையாகவே தன் ஆட்டமுறை பற்றி  சொல்லிக் கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு கடுமையான போட்டியாளராக இருந்த பிரதீப் ஆன்டனியும் இதையேதான் சொன்னார், செய்தார். ஆனால் பிரதீப்பை மக்கள் விரும்பினார்கள், மாயாவை வெறுத்தார்கள் என்பது ஒரு சுவாரசியமான முரண். 

இந்த ஆட்டத்தை தான் எப்படி கையாளப் போகிறோம் என்கிற கச்சிதமான தெளிவு மாயாவிடம் இருந்தது. இந்தத் தெளிவு பல சமயங்களில் புத்திசாலித்தனமாக வெளிப்பட்டது. சில சமயங்களில் எதிராளியைக் காயப்படுத்துவதாகவும் அமைந்தது. பொதுவாக புத்திசாலிகளை வெகுசன மக்கள் அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  மாறாக வெறுப்பார்கள்.  தங்களின் உணர்ச்சிகளை, உணர்வுகளை கவரும் விதத்தில் நடந்து கொள்பவர்களையே விரும்புவார்கள். அந்த வகையிலான வெறுப்புதான் மாயாவின் மீது படிந்தது எனலாம். ஏன், கமலுக்கும் கூட இதைப் பொருத்திப் பார்க்கலாம். 

எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மாயா உணர்ச்சிவசப்படவில்லை. ஆத்திரப்படவில்லை. ஒரு சதுரங்க ஆட்டத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப காய் நகர்த்துவது போல இந்த ஆட்டத்தை திறமையாக  ஆடினார். இதை அவருடன் இணைந்து விளையாடியவர்களே, அதாவது சக போட்டியாளர்களே  பிரமிப்புடன் ஒத்துக் கொண்டார்கள். மணி சந்திரா போன்றவர்கள் வெறுப்பின் மூலம் மறைமுகமாக ஒப்புக் கொண்டார்கள். ஆகவே சிறந்த போட்டியாளர்களின் வரிசையில் மாயா கிருஷ்ணன் இடம்பெறுவது எதிர்ப்புகளையும் மீறி தவிர்க்க முடியாததாக ஆகிறது. 


4. விக்ரமன் - அறம் வெல்லும்

ஆறாம் சீசனின் முதல் ரன்னர் -அப் வெற்றியாளர். அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என்கிற பொதுவான  பிம்பத்தை உடைத்து ஒரு நேர்மறையான, இளம் அரசியல்வாதியின் அடையாளத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில்  மிக அழுத்தமாகப் பதித்தவர் விக்ரமன். ‘அறம் வெல்லும்’ என்கிற கோஷத்தை இயன்ற போதெல்லாம் இவர் முழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்தது. துல்லியமான தமிழ் உச்சரிப்பு, மற்றவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல், எதையும் நேர்மறையுடன் அணுகுதல் என்று ஒரு நாயகனுக்குரிய அம்சங்கள் இவரிடம் இருந்தன. (அது உண்மையா, நடிப்பா என்பதெல்லாம் பிக் பாஸிற்கு வெளியே ஆய்வு செய்ய வேண்டிய விஷயம்). 

விக்ரமன்

ஏறத்தாழ ஆரிக்கு எழுதிய வாசகங்களையெல்லாம் இவருக்கும் அப்படியே பொருத்தி விடலாம். கடுமையான சண்டைகள், சச்சரவுகள் இடையிலும் கூட கண்ணியத்தைக் காத்தவர். குறிப்பாக அசீமிற்கும் இவருக்கும் இடையே தல - தளபதி போல கடுமையான போட்டி தொடர்ந்துகொண்டே இருந்தது. இருவரில் ஒருவர்தான் வெல்லுவார் என்கிற அளவிற்கு இருவருமே முன்னணி போட்டியாளர்களாகத் திகழ்ந்தார்கள்.  ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி கையை நீட்டும் அளவுக்கு அசீம் சென்ற போதெல்லாம் கூட நிதானம் தவறாமல் விக்ரமன் நடந்து கொண்டார். இந்த ஆட்டத்தின் விதிகளுக்கான தகுதிக்கு விக்ரமன் பொருத்தமாக நடந்து கொண்டார் என்பதால் சிறந்த போட்டியாளர்களின் வரிசையில் தன்னாலேயே இடம் பெறுகிறார். 

5. சாண்டி மாஸ்டர் - கலகலப்பின் நாயகன்

இந்தத் தேர்வு பலருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அதே நேரத்தில் சற்று ஆச்சரியத்தையும் அளிக்கலாம். ‘இவரா சிறந்த போட்டியாளர்?’. 

பிக் பாஸில் இது வரை நடந்த எந்தவொரு சீசனிலும் இல்லாத அளவிற்கு மூன்றாம் சீசனில் ‘கலகலப்பு’ என்கிற விஷயம் பிரதான அம்சமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது சாண்டியின் குழு. சாண்டி, கவின்,  தர்ஷன், லாஸ்லியா, முகேன் என்று அமைந்த ஐவரின் கூட்டணி, ஒட்டு மொத்த சீசனின் கலகலப்பான அம்சத்திற்கு உறுதுணையாக அமைந்தது. ஏதோ கல்லூரியின் காம்பஸிற்குள் நுழைந்தது போன்ற கலாட்டாக்களை இவர்கள் இடைவிடாது செய்து கொண்டே இருந்தார்கள். 

சாண்டி மாஸ்டர்

இதில் கவின் + சாண்டி அடித்த லூட்டிகள் இன்றைக்கு நினைத்தாலும் சிரிக்கக்கூடியதாக அமைந்திருந்தன. கண்ணாடிக்குப் பின்னால் வனிதாவும் சேரனும் பேசிக் கொண்டிருந்ததற்கு சாண்டி அளித்த ‘டப்பிங் வாய்ஸ்’ காட்சி இன்றளவும் விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக இருக்கிறது. சாண்டிக்கும் கவினுக்குமான நட்பு, கவினுக்கும் லாஸ்லியாவிற்குமான காதல்,  கவினின் வெளியேற்ற முடிவு,  கலகலப்பிற்குப் பெயர் போன சாண்டியே  கலங்கிய தருணங்கள், சரவணனின் வெளியேற்றத்திற்கு இந்தக் குழு அழுது தீர்த்தது என்று ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தின் அத்தனை அம்சங்களையும் சாண்டியின் குழுவால் உருவாக்க முடிந்தது. இதில் சாண்டி செய்த கலாட்டாக்களை  எவருமே மறக்க முடியாது. இவர் அடித்த லூட்டியை கமலே பல சமயங்களில் ரசித்தார்.

‘’இது ரத்தபூமி.. இங்க குழாயைத் திறந்தா தண்ணி வராது, ரத்தம்தான் வரும்’’ என்கிற அளவிற்கு ஒருவருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிற பிக் பாஸ் வீட்டை,  குறும்புகள் பொங்கி வழியும் கல்லூரி வளாகம் போல் மாற்றி, எந்தவொரு சமயத்திலும் தன் நிதானத்தையும் நகைச்சுவை உணர்ச்சியையும் கைவிடாமல் இருந்த சாண்டி,  சிறந்த போட்டியாளர்களின் வரிசையில் இடம் பெறுவது சகல விதத்திலும் பொருத்தம் என்றே நம்புகிறேன். 

இது வரை நடந்த ஏழு சீசன்களில் விதம் விதமாக எத்தனையோ சுவாரசியமான, தகுதியான போட்டியாளர்கள் வந்து போயிருப்பார்கள். அவர்களில் இருந்து ஐந்து நபரை தேர்வு செய்வது சிரமமான விஷயம் மட்டுமல்ல, சாத்தியம் அல்லாத விஷயமும் கூட. என்றாலும் என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பிலும் பரிசீலனைகளில் இருந்தும் இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இதுவே நிலையானது, சரியானது என்று வாதிட மாட்டேன். 

‘பழைய போட்டியாளர்களில் மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் எட்டாவது சீசனில் வரக்கூடும்’ என்கிற தகவல் ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில்,  அந்த மூன்று நபர்கள் யாராக இருந்தால் எட்டாவது சீசன் களை கட்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? கமென்ட்டில் உங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள்.