தமிழ் சினிமாவின் வணிகத்தோடு ஒப்பிடும்போது மலையாளச் சினிமாவின் வணிக எல்லை மிகவும் குறுகலானது. பெரிய பட்ஜெட் படங்களை அங்கு எளிதில் உருவாக்க முடியாது. ஒருவகையில் இதுவேதான் மலையாளத் திரைப்படங்களின் பலம் எனலாம். மெகா பட்ஜெட் என்றால் ஸ்டார் நடிகர்கள், தொழில்நுட்ப மாய்மாலங்கள், விளம்பரங்கள், பிரமோஷன்கள் என்று பொருளியல் ரீதியான பலத்துடன் மக்களின் கவனத்தைக் கவர்ந்து கல்லா கட்ட முயற்சிக்கலாம். இந்த மாதிரியான படங்களில் கதை என்பது வழக்கமான மசாலா டெம்ப்ளேட்டாகவே இருக்கும். அந்த எல்லையை எளிதில் தாண்டி வர முடியாது.
மலையாளச் சினிமாவின் ஆதாரமான பலம்!
சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் வலுவான கதை மற்றும் திரைக்கதையை யோசிப்பதற்கான வாய்ப்பும் கட்டாயமும் அதிகம். பரிசோதனை முயற்சிகளும் நிகழும். ஏனெனில் திரைக்கதைதான் இவ்வகையான சிறு படங்களின் ஹீரோ. ஸ்டார் நடிகர்களுக்கான சம்பளம் இதில் கட்டுப்படியாகாது என்பதால் யதார்த்தமாக நடிக்கக்கூடிய திறமையானவர்களை தேர்வு செய்தால் போதும். இது திரைக்கதைக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும். சிறுமுதலீடு என்பதால் சமூக, குடும்ப, தனிமனித பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படங்களைத்தான் எடுத்தாக வேண்டும். வரலாறு, ஃபேண்டஸி என்று பெரிய கேன்வாஸில் உருவாக்க முடியாது. இதுவும் ஒருவகையில் மலையாளச் சினிமாவின் ஆதாரமான பலமாக மாறியது. எளிய முறையில் தயாரிக்கப்பட்ட யதார்த்தப்படங்கள் உருவாகியதால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து பார்வையாளர்களால் எளிதில் அவற்றுடன் கனெக்ட் ஆக முடிந்தது.
இது மட்டுமல்லாமல், மம்முட்டி, மோகன்லால் போன்ற ஸ்டார் நடிகர்களாகவே இருந்தாலும் கூட நல்ல கதையம்சத்தைக் கொண்ட படமாக இருந்தால் நடிப்பதற்கு அவர்கள் தயங்கவே மாட்டார்கள். இதற்கான சிறந்த உதாரணம், மம்முட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. இப்படியொரு கதையில் நடிப்பதற்கு தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இமேஜ் என்கிற வணிக அடையாளத்தில் சுயநலத்துடன் தங்களை விலங்கு போட்டுக் கொண்டிருப்பதுதான் அடிப்படையான பிரச்சனை.
மலையாள இலக்கியமும் சினிமாவும்!
ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்தே இலக்கியமும் மலையாள சினிமாவும் நெருங்கிய தொடர்பில் இருந்தது. சிறந்த எழுத்தாளர்களே திரைக்கதையாசிரியர்களாகவும் பிறகு இயக்குநர்களாகவும் மாறினார்கள். எம்.டி.வாசுதேவன் நாயர், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி போன்ற மகத்தான எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படங்களாக உருமாறின. ஐம்பதுகளில் துவங்கி எண்பதுகளில் தொடர்ந்த காலக்கட்டத்தில் நிலவிய இத்தகைய பரவலான போக்கு மலையாள சினிமாவுக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்தது.
1954-ல் வெளியான ‘நீலக்குயில்’ மலையாளச் சினிமாவின் ஒட்டுமொத்த வடிவமைப்பை உருவாக்கிய முதல் கவனத்துக்குரிய திரைப்படம் எனலாம். உரூப் எழுதிய கதைக்கு அவரே திரைக்கதையும் அமைத்தார். மலையாளச் சினிமாவின் முதல் இரட்டை இயக்குநர்களான பாஸ்கர் மற்றும் ராமுகரியத் ஆகியோர் இயக்கினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த பெண்ணொருத்தி, முற்பட்ட இளைஞனின் மீது கொள்ளும் காதலையொட்டிய சமூகப் பிரச்சனையை இந்தத் திரைப்படம் பேசியது.
'நீலக்குயில்’ திரைப்படத்தின் திரைக்கதை, பாடல்கள், ஒளிப்பதிவு, கலை இயக்கம் போன்றவை, பிற்கால மலையாளச் சினிமா உருவாவதற்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது. இதில் பெரும்பாலும் நாட்டுப்புறப்பாடல்களின் இசைப்பாணி பயன்படுத்தப்பட்டு படத்தை விடவும் பாடல்கள் அதிக பிரபலமாக மாறின.
எழுத்தாளர்களின் படைப்புகளைப் பயன்படுத்தும் போக்கு மலையாளச் சினிமாவில் தொடர்ச்சியாக அமைந்தது. 1965-ல் வெளியான ‘ஓடையில் நின்னு’ என்கிற திரைப்படம், பி.கேசவதேவ் அதே பெயரில் எழுதிய மலையாள நாவலையொட்டி உருவாக்கப்பட்டது. திரைக்கதையையும் அவரே எழுதினார். பப்பு என்கிற ரிக்ஷா ஒட்டும் தொழிலாளியின் வாழ்க்கைச் சிரமங்களையும் கடுமையான உழைப்பின் மேன்மையையும் இந்தப் படம் பேசியது. சத்யனின் சிறந்த நடிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்தது. விருதுகளையும் பெற்றது. ‘பாபு’ என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு சத்யனின் பாத்திரத்தில் சிவாஜி நடித்திருந்தார். ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியின் கதை வெற்றி பெறும் என்று யாருமே அப்போது நம்பவில்லை.
ரசனைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள்!
1968-ல் வெளியான திரைப்படம் ‘யக்ஷி’. மலையாள சினிமாவின் முதல் சைக்காலஜிக்கல் திரில்லர். மலையாட்டூர் ராமகிருஷ்ணன் எழுதிய படைப்பிற்கு தோப்பில் பாசி திரைக்கதை அமைத்திருந்தார். சமூக, யதார்த்தத் திரைப்படங்களின் வெற்றியைத் தாண்டி, வேறு ஜானரில் அமைந்த திரைப்படங்களும் வெற்றி பெறும் என்பதற்கான உதாரணம் இந்தப் படம் அமைந்தது.
ஆனால் எழுபதுகளில் மலையாள சினிமாவின் இந்தப் போக்கில் மாற்றம் நிகழ்ந்தது. கேரளத்தில் நிகழ்ந்த சமூக அரசியல் பொருளாதார மாற்றங்கள் இதற்கு ஒருவகையில் காரணம் எனலாம். நிலச் சீர்த்திருத்தம், பணி தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லுதல் போன்ற காரணங்களால் நடுத்தர வர்க்க மக்களின் சதவீதம் பெருகத் துவங்கியது. இந்த மாற்றம் மலையாள இலக்கியப் படைப்புகளில் எதிரொலித்தது. சமூகத்தின் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு தனிமனிதனின் அகச் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் போன்றவைகளை உரையாடும் படைப்புகள் அதிகரித்தன.
இத்தகைய நவீன மாற்றம் மலையாளச் சினிமாவையும் பாதித்தது. நிலவுடமையாளர்களின் ஆதிக்கப் போக்கை வர்க்க நிலையிலும் சாதிய நிலையிலும் விமர்சிக்கும் படங்கள் உருவாகத் துவங்கின. கேரளத்தின் இடதுசாரி சிந்தனைப் போக்கு எப்போதுமே அதன் ஆதாரமான பலமாக இருந்து வருகிறது. எனவே மலையாள இலக்கியம் வலதுசாரி சிந்தனைகளை கடுமையாக விமர்சித்தது. இந்தப் போக்கு சினிமாவிலும் எதிரொலித்தது.
தொன்னூறுகளில் அழகியல் சார்ந்த சினிமாக்கள் உருவாகத் துவங்கின. வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய ‘மதிலுகள்’ என்கிற குறுநாவலை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கினார் அடூர் கோபாலகிருஷ்ணன். சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்ற திரைப்படம் தேசிய அளவிலும் பரவலாக கவனிக்கப்பட்டது. சிறப்பான நடிப்பைத் தந்திருந்த மம்முட்டிக்கும், நேர்த்தியாக உருவாக்கிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் தேசிய விருது கிடைத்தது.
மலையாள இலக்கியத்தின் செழுமையை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு கணிசமாக இருப்பதை மலையாளச் சினிமாவின் ஆதாரமான பலம் எனலாம். கேரள கலாசாரத்தின் அடையாளங்களும் பண்பாட்டுக்கூறுகளும் மலையாளச் சினிமாவில் நேர்த்தியாக இடம் பிடிக்கும். கல்வியறிவும் ரசனைக்கூர்மையும் கொண்ட கேரள மக்கள், வணிக சினிமாக்களைத் தாண்டி இவ்வகையான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களையும் ஆதரித்தார்கள்.
விஜய், சூர்யாவை காப்பியடித்த மலையாள ஸ்டார்கள்!
ஆனால் இதே காலக்கட்டத்தின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான ரசனை மாற்றம் நிகழ்ந்தது. தமிழ்ச் சினிமாக்களின் பிரமாண்டமான வணிகத்தின் பாணியை கேரளமும் நகலெடுக்கத் துவங்கியது. யதார்த்தமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நட்சத்திரங்களை, வேட்டியை தூக்கிப் போட்டு விட்டு கூலிங்கிளாஸ், லெதர் கோட்டுடன் ஆக்ஷன் படங்களில் இறங்கி மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் பதற வைத்தார்கள். அடுத்த நிலை நடிகர்களும் இதே பாணியைப் பின்பற்ற மலையாளச் சினிமா என்பது மசாலா சினிமாவாக மாறியது. விஜய், சூர்யா போன்ற தமிழ் நடிகர்களுக்கு கிடைத்த அமோகமான வரவேற்பின் எதிரொலி என்று இதனைச் சொல்லலாம்.
கொரானோ காலக்கட்டத்தில் பெரும்பாலான வணிகத் துறைகள் முடங்கி பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததை அறிவோம். மலையாளச் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இந்த நெருக்கடியே மலையாளச் சினிமாவிற்கு ஒருவகையில் உத்வேகமாக அமைந்தது. புதிய தலைமுறையின் இளம் இயக்குநர்களின் உருவாக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் வணிகரீதியான வெற்றியைக் குவிக்க ஆரம்பித்தன. 2018, மஞ்ஞசுமல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேஷம், பிரேமலு போன்ற படங்களின் வணிகரீதியான வெற்றி என்பது இதன் தொடர்ச்சியாகும். புதிதாக அறிமுகமாகும் திறமையான இளம் நடிகர்கள் கூட ஸ்டார் நடிகர்களுக்கு நிகரான வரவேற்பைப் பெற்றார்கள்.
இந்தக் கட்டுரையை மலையாள சினிமாவின் உத்தேசமான அவுட்லைன் எனலாம். இதே வரிசையில் தமிழ் சினிமாவில் என்னவெல்லாம் நடந்தன?
தொடர்ந்து பேசுவோம்…
சுரேஷ் கண்ணனின் மோலிவுட் Vs கோலிவுட் தொடரின் அடுத்த அத்தியாயம் வரும் திங்கட்கிழமை (19-08-2024) வெளியாகும்!